எஸ்.ஆல்பர்ட்: ஒரு பேராசிரியரும் பொதுமன்றமும்

By ராஜன் குறை

தமிழ் கலை, இலக்கியப் புலத்தின் ரகசிய அற்புதம் என அவரை அறிந்தவர்கள் ஆல்பர்ட்டை அழைப்பார்கள். ஆங்கிலப் பேராசிரியராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பணியாற்றி, துறைத் தலைவராக 1997-ல் ஓய்வுபெற்றவர் எஸ்.ஆல்பர்ட். ஒரு பேராசிரியரின் பணி என்பது வகுப்பறைகளில் போதிப்பது, துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வெளியிடுவது என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக, பேராசிரியர்கள் அனைவருமே அந்தக் குறுகிய வட்டத்தில் இருந்துவிடுவதில்லை. அவர்கள் தாங்கள் கற்றதை, அதனால் விளையும் சிந்தனைகளைப் பொதுமன்றத்துக்கு எடுத்துச்செல்ல முனைகிறார்கள். இவர்களில் சிலர் பத்திரிகைகளில், நாளேடுகளில் கட்டுரைகள் எழுதுவது, ஊடகங்களில், கூட்டங்களில் உரையாற்றுவது என்ற அளவில் பங்களிப்பார்கள். ஒருசிலர் பொதுமன்றச் செயல்பாட்டாளர்களாகப் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று, பல்வேறு கலாச்சாரச் செயல்பாடுகளை முன்னெடுப்பார்கள். ஆல்பர்ட் ஒரு கலாச்சாரச் செயல்பாட்டாளராகவே வாழ்ந்தார். தான் சாப்பிட்ட கனியின் விதையை எங்கோ தூவி விருட்சமாக்கும் அறியப்படாத பறவையாக இருந்தார்.

ஆல்பர்ட் தலைசிறந்த அழகியல்வாதி. மிகவும் கூர்மையாக, விரிவஞ்சாமல், எந்த ஒரு படைப்பின் கலைநுட்பங்களையும் ஆராயும் திறன் கொண்ட வாசகர். அவர் எழுதியுள்ள சொற்பமான விமர்சனக் கட்டுரைகள் இந்தக் கூற்றுக்குச் சான்று பகரக்கூடியவை. படைப்புச் செயல்பாட்டால் மேன்மையுறும் மனித மனம், சமூக அறத்தைக் கைக்கொண்டு சமூகத்தை மேம்படச் செய்யும் அல்லது செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கையும் லட்சியமும் கொண்டவர். அவருடைய திறன்களையும் லட்சியத்தையும் அவர் பொதுமக்கள் உரையாடல் என்ற செயல்பூர்வமாகவே வெளிப்படுத்தினார். ஒரு படைப்பாளியாகவோ எழுத்தாளராகவோ தன் ஆக்கங்களைப் பிரசுரிப்பதைவிடப் பல்வேறு களங்களில் தொடர்ந்து உரையாற்றுவதை, உரையாடலை மேற்கொள்வதையே தனது பணியாக வரித்துக்கொண்டார். விமர்சனபூர்வமான பொதுமன்றக் கல்வியாளராக (critical public pedagogue) விளங்கினார். அதனால், இவரது சிறப்பு கலை, இலக்கிய உலகில் பரவலாக அறியப்படவில்லையே, அங்கீகரிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் அவர் நண்பர்களுக்கு உண்டு. ஆனால், சாதனையாளர்களாக அறியப்படும் எழுத்தாளர் இமையம் போன்ற பல படைப்பாளிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஆல்பர்ட் உத்வேகமாக இருந்தார். அவருடைய சமகால எழுத்தாளர்களான நகுலன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட பலராலும் பெரிதும் மதிக்கப்பட்டவராக இருந்தார்.

ஒரு உலக இலக்கிய வாசகராக, உலக சினிமா பார்வையாளராக அவர் இருபதாம் நூற்றாண்டு மானுடம் சந்திக்கும் இருத்தலியல் நெருக்கடி, நம்பிக்கை வறட்சி, அந்நியமாதல், அடையாளச் சிக்கல் ஆகிய பல்வேறு அம்சங்களை ஆழ்ந்து பரிசீலிப்பவராக இருந்தார். தமிழில் உருவாகும் இத்தகைய சமகால நோக்கு கொண்ட நவீனத்துவ இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆழமான உளவியல் பரிமாணங்கள், தீவிர சமூக முரண்கள், அரசியல் முரண்பாடுகள் ஆகியவற்றை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர் ஆழமாகப் பரிசீலித்ததுடன், அத்தகைய பரிசீலனைக்கான ஆற்றலைப் பரவலாக்க விரும்பினார். கலை நுட்பத்துக்கும், வெகுஜன ரசனைக்குமான இடைவெளியை அவர் கடக்க விரும்பினார். ஷேக்ஸ்பியர், சார்லி சாப்ளின் ஆகியோரை அவர் இந்த இடைவெளியைக் கடந்த படைப்பாற்றலுக்கான மாதிரிகளாகச் சுட்டிக்காட்டுவார். அதே சமயம், பரவலான ரசனை மேம்பாடு என்பதையும் மிக அவசியமான ஒரு சமூகப் பணியாகக் கருதினார். அதன் பொருட்டு கிறிஸ்தவ மதம் சார்ந்த கலாச்சார அமைப்புகளின் துணையுடன் அவர் பல்வேறு பயிலரங்கங்களையும் பட்டைறைகளையும் கருத்தரங்குகளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். அவற்றில் பல தமிழ் இலக்கியவாதிகளையும் ஈடுபடுத்தினார்.

பாரம்பரிய சமூகத்தின், வெகுஜன உளவியலின் தார்மீக அடிப்படைகளையும், நவீன சமூக இயக்கத்தின் முரண்களையும் இணைக்க அவர் மிக முக்கியமான மூலாதாரமாக காந்தியைக் கருதினார் எனலாம். காந்தியம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை 1985-ல் திருச்சி ‘செயின்ட் பால் செமினரி’யில் அவர் ஒழுங்கமைத்தார். முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களும், தமிழ் இலக்கியவாதிகளும் அதில் பங்கெடுத்தனர். மதங்களுக்கிடையிலான உரையாடல், ‘இன்டர்ஃபெயித் டயலாக்’ என்பதிலும் ஆல்பர்ட் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மானுட மேன்மைக்கான ஓயாத தேடலில் ஈடுபட்டதுடன், அந்தத் தேடலில் பலரையும் ஈடுபடுத்தும் ஆற்றலையும் பெற்றிருந்த ஆல்பர்ட் தூவிய கலாச்சார விதைகள் நெடுங்காலம் தமிழ் நிலத்தை வளப்படுத்தும்.

- ராஜன் குறை, ஆய்வறிஞர், ‘எதிர்புரட்சியின் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rajankurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்