வெள்ளமும் குடிசைகளும்

By அன்பு செல்வம்

குடிசைப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

சென்னையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், வெள்ளம் வடிந்ததிலிருந்து சென்னை நகரக் குடிசைவாழ் மக்களுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. குடிசைகள் போய்விட்டதற்காக அல்ல. எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பதுதான் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

சமீபத்தில் வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சரிடம் அரசு முன்வைத்த கோரிக்கையின்படி, அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய கரையோர‌க் குடிசைகளில் வாழும் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட இருக்கின்றனர். கொடுங்கையூர், எழில்நகர், வியாசர்பாடி, இந்திராநகர், ஏகாங்கியம், மாம்பலம் கால்வாய், ஜாஃபர்கான்பேட்டை கால்வாய் ஆகிய குடிசைவாழ் மக்களும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் 80%-க்கும் அதிகமானோர் அன்றாட உழைப்பை நம்பி வாழக்கூடிய தலித்துகள். இவர்கள் அனைவருக்கும் மாற்று இடத்தில் குடியிருப்பு கட்ட ரூ. 5 ஆயிரம் கோடி சிறப்புத் திட்டமும் தயாராக இருக்கிறது. மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழ்மையை அகற்றும் துறையிலிருந்து ரூ. 750 கோடி ரூபாய் கேட்டு கோரிக்கை வைத்தாயிற்று.

முதல் கட்டமாக கைவசம் இருக்கிற 10 ஆயிரம் வீடுகளில் குடியமர்த்த‌ அரசு வாக்குறுதி அளித்திருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள் பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் குடியிருப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலானோருக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. ஏற்கெனவே, 2011-ல் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் குடியிருப்புகளில் மறுகுடியமர்த்தப்பட்ட 20,820 குடும்பங்கள் படுகிற‌ கஷ்டத்தை நேரில் பார்த்து இப்படியொரு முடிவுக்கு வந்துள்ளனர்.

பெரும்பாக்கம் குடியிருப்பின் நிலை

ஜவாஹர்லால் நேரு நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டமும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் இணைந்து 2010-ல் இத்திட்டத்தைத் தொடங்கின. கிட்டத்தட்ட ரூ. 1,500 கோடியில் 3 கட்டமாகக் கட்டப்படும் 23,864 வீடுகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் குடியேறுவார்கள் என்பது அரசின் எதிர்பார்ப்பு. ஆனால், கடந்த காலத்தில் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் குடியிருப்புத் திட்டத்தில் தொடர்ந்த அதே குளறுபடிகள் இங்கேயும் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்புக்குத் தகுதியற்ற சதுப்பு நிலம், இடப்பற்றாக்குறை, போதிய வெளிச்சம் - காற்றோட்டம் இல்லாத விரிசல் விழுந்த‌ கட்டிட அமைப்பு, சுகாதார வசதி பற்றாக்குறை, கலங்கலான நிலத்தடி நீர், தடைபடும் மின்சாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் அங்கு மலிந்துகிடக்கின்றன‌.

மக்களிடம் ஒரு பொது விவாதம் நடத்தி, ஆலோசனை கேட்டுச் செயல்படுத்தியிருந்தால், இது போன்ற‌ பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் என‌ மேதாபட்கர் உட்பட பல சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். டிசம்பர் 20-ம் தேதி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்த 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் குடிசைவாழ் மக்கள் ஆலோசனைக் கூட்டம் இப்பிரச்சினையை மீண்டும் விவாதித்திருக்கிறது.

திட்டத்தின் நோக்கமே வேறு

குடிசைகளில் வாழும் மக்களைக் கூண்டோடு அப்புறப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்கிறார், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சிவா. அரசுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டு குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கி, அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பை அங்கேயே கட்டிக் கொடுத்திருக்கலாம். அவர்களை அப்புறப்படுத்துவதில்தான் குறியாக இருக்கிறது.

மெட்ரோ ரயில், மதுரவாயல் - துறைமுகம் அதிவிரைவுச் சாலை, போரூர் புறவழிச்சாலை, பறக்கும் சாலை போன்ற கடந்த‌கால நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களால் குடிசைவாழ் மக்களே பெருமளவு வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘கூவம் நதி சீரமைப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ், குடிசை வாழ் மக்களுக்கு அதே நிலை மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இதற்கு நிதி உதவி செய்கிற‌ ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டமோ குடிசை மக்க‌ளை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் மேம்பாட்டுப் பணி செய்ய‌ வேண்டும் என்கிறது. அதுமட்டுமல்ல, 1973-ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியச் சட்டமும் ‘நகர்ப்புறக் குடிசைகளை அப்புறப்படுத்த முடியாது’ என வரையறுக்கிறது. இவை அனைத்தையும் மீறித்தான் சென்னை குடிசைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

ஆக்கிரமிப்பாளர்கள் யார்?

ஆக்கிரமிப்பு மற்றும் நக‌ர்ப்புற ஏழ்மையை அகற்றுதல் என்கிற பெயரில் பறிக்கப்பட்ட இடங்கள் பெருநிறுவன முதலாளிகளிடமும், தனியார் வீட்டுமனை மேம்பாட்டாளர்களிடமும் போய்விட்ட‌ன. சில குடிசைப் பகுதி இடங்களைப் பொழுதுபோக்குப் பூங்கா, கார் பார்க்கிங், வணிக வளாகம், தனியார் மருத்துவ‌மனை, அரசு அலுவலகங்கள் ஆக்கிரமித்துவிட்டன. கூவம் நதிக்குள்ளேயே வணிக வளாகம் உட்படப் பல கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

1970-ல் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த பத்ரிநாத் அறிக்கையின்படி சென்னை நகரின் 1,189 ச.கி.மீ. பரப்பளவில், அங்கீகரிக்கப்பட்ட 1,202 சேரிகளில் 43% மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் 2002 கணக்குப்படி அங்கீகரிக்கப்படாத 444 சேரிகளும் இருந்திருக்கின்றன. 1971-ல் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்ட பிறகு தீ விபத்து, கலவரம், இயற்கைப் பேரிடர், ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் படிப்படியாகக் குடிசை வாழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்போது 2% குடிசைப் பகுதிகள்தான் இருக்கின்றன. இந்தக் குடிசைப் பகுதிகளும் இப்போது சென்னை நகரில் இருக்கக் கூடாது என்றும், இவை அனைத்தும் சோழிங்கநல்லூர் என்கிற ஒரே தொகுதியின் கீழ் அமெரிக்காவின் டெட்ராய்ட் - பால்டிமோர் என்று கருப்பர்களின் சேரி போலக் குடியமர்த்த வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது போலும்.

தீர்வுதான் என்ன?

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூவம் நதிச் சீரமைப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு என்றால், சுற்றுச்சூழலை ஆக்கிரமித்துள்ள‌ பெரிய கட்டிடங்களைத்தான் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். மும்பை குடிசை மேம்பாட்டு வாரியம் செய்ததுபோல, தனியார் கட்டிடங்கள் நதிக் கரையிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு குடிசைப் பகுதியை நகர்த்தி, குடியிருப்புகளை உருவாக்க‌ வேண்டும். குடியிருப்புகள் கட்ட முடியாத நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒதுக்கீடு செய்யும் ரூ. 2.5 லட்சத்தைப் பட்டாவுடன் அவர்களுக்கு வழங்க வேண்டும். பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புத் திட்டம் குறித்து அனைவரையும் உள்ளடக்கிய பொது விவாதம் நடத்தித் தீர்வு காண்பதுதான் மக்கள் நலத்திட்டங்களுக்கும், அரசின் நிதித் திட்டத்துக்கும் உகந்ததாக இருக்கும்.

- அன்புசெல்வம்,

தொடர்புக்கு: anbuselvam6@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

3 mins ago

சினிமா

9 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்