உதவும் கரங்கள் ஒன்று சேர்கின்றன! - களத்தில் வாசகர்கள்

By செய்திப்பிரிவு

களத்தில் வாசகர்கள்

கடலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாசகர்களின் உதவிகள் நேரடியாகச் சென்றடைவதில் ‘தி இந்து’வும் கே.பி.என். நிறுவனமும் பெரும் கவனம் அளிக்கின்றன.

வாசகர்கள் கே.பி.என். நிறுவனத்திடம் சேர்க்கும் பொருட்களுக்கு ஒப்புகைச்சீட்டுகள் கையோடு அளிக்கப் படுகின்றன. தமிழகமெங்கும் இப்படிச் சேகரிக்கப்படும் பொருட்கள், அதை வழங்கியவர்களின் பட்டியல் ஒவ்வொரு நாளும் ‘தி இந்து’ செய்தியாளர்கள் மூலம் பெறப்படுகின்றன. சேகரமான பொருட்கள் கடலூர் கொண்டுவரப்பட்டு, அவை நேரடியாக கே.பி.என். நிறுவன வேன்களிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இப்படி விநியோகிக்கும் குழுவிலும் ஒருங்கிணைக்கும் பணியிலும் ‘தி இந்து’ செய்தியாளர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். கூடவே, நம்முடைய வாசகர்கள் தரப்பிலிருந்து முதல் நாளிலிருந்தே நம்முடைய வாசகரும் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவருமான இளங்கீரன் இந்த விநியோகப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது கூடுதலாக ஒவ்வொரு நாளும் கடலூர் பகுதியைச் சேர்ந்த நம்முடைய வெவ்வேறு வாசகர்களும் இந்தப் பணியில் தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வாசகர்கள் இயக்குநர் தங்கர் பச்சான், இமுக சமூகச் செயல்பாட்டாளர்கள் சண்முகம், ராஜேந்திரன் மூவரும் இந்தப் பணியில் இணைந்துகொண்டனர். ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான 800 பேருக்கான லுங்கிகள், 300 போர்வைகளை சண்முகம் கொண்டுவந்திருந்தார். கல்குணம், குறிஞ்சிப்பாடி, பூதம்பாடி, வலுதளம்பட்டு, தொண்டமாநத்தம், அகரம் என்று நம்முடைய நிவாரணக் குழு அடுத்தடுத்த கிராமங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியராக இணைவோம்!

நம்முடைய சென்னை வாசகர் ரா.ராஜகோபாலன் ஒரு நல்ல யோசனையை முன்வைத்தார். “கடலூர் நிவாரணத்துக்காக ஏன் ‘வாட்ஸ் அப்’ மூலமாக நண்பர்களிடம் உதவி கோரும் யோசனையை ‘தி இந்து’ நம் வாசகர்களுக்குத் தெரிவிக்கக் கூடாது?” என்பதே அது. கணினிப் பொறியாளரான ராஜகோபாலன் முதலில், கடலூர் மக்களுக்கு உதவ ரூ. 5,000-க்கு 15 ஸ்டவ்களை வாங்கியிருக்கிறார். பின், இதுபற்றிய தகவலைத் தன்னுடைய ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் குழுவிடம் பகிர்ந்திருக்கிறார். ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஸ்டவ்களை அளிக்க நண்பர்கள் முன்வந்திருக்கின்றனர். குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்களில் பலர் தமிழர் அல்லாதவர்கள். “நம் பத்திரிகையில் வந்த விஷயத்தை ஆங்கிலத்தில் அடித்து வாட்ஸ் அப்பில் போட்டேன். பார்த்தவர்கள் பலரும் கலங்கிவிட்டார்கள். ‘இதுபோன்ற துயரமான நேரங்களில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவிக்காக இணைவதில்தான் இந்தியர் என்று சொல்லிக்கொள்வதன் அர்த்தமே இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உதவிகளை அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். வாசகர்கள் தாங்கள் உதவுவதோடு கூடவே தங்களுடைய சொந்தம், நட்பு, அலுவலக வட்டங்களிலும் இந்த விஷயத்தை எடுத்துச் செல்லலாம். கூட்டாக உதவிகளை ‘தி இந்து’ மூலம் அனுப்பலாம்” என்றார் ராஜகோபாலன்.

நல்ல யோசனை. கூடுதல் கைகள், கூடுதல் உதவி!

“தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் சாமீ!”

வாசகர்கள் அளித்த உதவிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று சேரும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் உணர்வுகளும் விவரிக்க முடியாதவை. பெரும் நெகிழ்ச்சியோடு நம் வாசகர்களுக்கு மனம் நெகிழும் நன்றியைத் தெரிவிக்கிறார்கள் கடலூர் மக்கள்.

நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் முகம் தெரியா மனிதர்களிடமிருந்து, அதுவும் ஒரு பத்திரிகையின் வாசகர்களிடமிருந்து வருவது அவர்களை நெகிழச் செய்கிறது.

“யாருக்கும் நேரக் கூடாதுய்யா எங்க நெலமை. எல்லாம் போச்சு. ஆனா, யாரு செஞ்ச புண்ணியமோ, எங்கிருந்தோ மொகம் தெரியாதவங்கல்லாம் உதவியை அனுப்பியிருக்காங்க. மழத் தண்ணி பூந்த வூடு எப்படி நொச நொசன்னு இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். குளிரு காத்து வேற. பச்சப் புள்ளைங்களை வெச்சிக்கிட்டுத் தூக்கமும் இல்லாம, உடம்புக்கும் காய்ச்சலோட கஷ்டப்பட்டுக்கிட்டுக் கெடந்தோம். மவராசம்போல வந்து பாய், போர்வை கொடுத்தீங்க; ரொம்ப நன்றியைச் சொல்லுங்கய்யா, இந்தப் பொருளையெல்லாம் கொடுத்துவிட்டவங்களுக்கு! புண்ணியமாப் போகுமப்பா. நல்லா இருங்கய்யா...”- இது கல்குணத்தில் கேட்ட குரல்!

“உதவின்னு வர்றவங்க பலரும் சாப்பாடு, ரொட்டி, உடை இப்படித்தான் கொண்டுவருவாங்க. அதுவும் தேவைதான். ஆனா, அடுப்பெரிக்க இந்த மழ வெள்ளத்துல நாங்க படுற கஸ்டம் கடவுளுக்குக்கூட அடுக்காதுங்க சார். விறகும் கெடைக்காம, றாட்டியும் கெடைக்காம, தவிடு வாங்கவும் காசு இல்லாம ரொம்ப கஸ்டப்பட்டோம். தெய்வம் மாரி வந்து, எங்க தேவ உணர்ந்து ஸ்டவ் அடுப்பு கொண்டாந்துருக்கீங்க... எல்லாருக்கும் நன்றியைச் சொல்லுங்க சார்... ’’- இது பூதம்பாடியில் கேட்ட குரல்!

“அன்னிக்கு ராவிக்குத் தண்ணி திபுதிபு ஏறிக்கிட்டே இருக்கு, வெளிய போவவும் இடமில்லை, கழுத்துகிட்ட தண்ணி நெருங்கிடுச்சி. என்ன பண்றதுனு புரியலை. அப்படியே எல்லாரும் பரண் மேல ஏறி உக்காந்துக்கிட்டோம். கூர வூட்டுக்கும் அதுக்கும் மண் சொவரு ஒவ்வொண்ணா கீழ விழுது. விடியக் காத்தால கொஞ்ச சனம் தல வெளிய தெரிய ஆரம்பிச்சது. அப்புறமா ஒவ்வொருத்தரா வந்து கைய கோத்துக்கிட்டு வெளில வந்தோம் சாமி. வக்கத்துக் கெடக்குறோம். இதையெல்லாம் வாங்கியனுப்பினவங்க தலைமுறைக்கும் எங்க புண்ணியம் போய்ச் சேரும் சாமீ!”- இது வலுதளம்பட்டில் கேட்ட குரல்!

அத்தனையையும் வாசகர்களிடம் சமர்ப்பிக்கிறோம்! உதவிகள் தொடரட்டும்!

- ஆசிரியர்.

படங்கள்: ஜே.பி. சதீஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்