மீன்பிடித் தொழிலின் களநிலவரங்களுக்குச் செவிமடுக்குமா அரசு?

By செய்திப்பிரிவு

ஏறக்குறைய இரண்டாயிரம் விசைப்படகுகள் தொழில் செய்யும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பாதுகாப்பான துறைமுகம் இல்லை என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. புரெவிப் புயல் சமயம், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்த படகுகளெல்லாம் பாம்பன் தென்கடல் நோக்கி விரைந்தன. காரணம் வேறொன்றுமில்லை, பாம்பன் பாலத்துக்குத் தென்கிழக்கே முந்தல்முனை கடந்து, சிறிது வடக்கே உள்வளைந்த, சின்னப்பாலம் தென்கரையில் நீண்டிருக்கும் நிலவளைவு. தன்னளவிலேயே ஆழமாய் வாடைக்கும் கோடைக்குமான பாதுகாப்புக் கவசம். தெற்கே அடுத்தடுத்து அமைந்திருக்கும் குருசடைத் தீவுக்கும், கோபுரத் தீவுக்கும் இடையேயான ஆழமான ஆத்துவாய். இங்குதான் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைந்திருக்க வேண்டும். களநிலவரத்தை ஆராய, பாரம்பரிய மீனவரின் அறிவுறுத்தலைக் கேட்க மறுக்கும் அதிகார வர்க்கத்தால் விளைந்த விபரீதம் இது.

வாடைக் காலத்தின் பாதுகாப்புக்காக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பன் வடகடல் வள்ளத்தடி மீனவர்களும், கலங்கரை விளக்கத்திலிருந்து மேற்கே போர்ட்யார்டு வரை ஒரு தூண்டில் வளைவு ஏற்படுத்திக் கேட்கிறார்கள், அரசிடமிருந்து இதுவரை எந்த அசைவும் இல்லை. இயற்கையான கடலடிப்பாறை மேல் அமையவிருப்பதால் தூண்டில் வளைவுக்கான செலவும் குறைவானதே, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

செயல்படாத செயலிகள்

2019-ல் மீனவர்களின் கண்காணிப்பு, கடலில் அவர்களின் இருப்பு மற்றும் நகர்வு குறித்த தேவைக்காகத் தமிழக மீன் துறையால் இஸ்ரோவின் துணையோடு அறிமுகம் செய்யப்பட்ட ‘தூண்டில்’ என்ற செயலி, பயனாளிகளான மீனவர்களிடம் இப்போது புழக்கத்தில் இல்லை. பயன்படு தளத்தின் இயல்பு தெரியாமல், செயலி பயன்பாட்டுக்கு வந்ததால் நடந்த விளைவு. அரசு நினைத்தால் மலிவான விலையில், எளிமையான அணுகுமுறையோடு இந்தச் செயலியைத் திரும்பவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட முடியும்.

ஒன்றியக் கடலோரப் பாதுகாப்புப் படையின் முக்கிய நோக்கமாக மீனவரைத் தேடுவதும், காப்பாற்றுவதும் இருந்தாலும்கூடப் பேரிடர்களில் மீனவர்களை, மீனவர்களே தேடிக் காக்கும் நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. தமிழக மீன் துறையில், கடலோரப் பாதுகாப்பு பாரம்பரிய மீனவரின் பங்களிப்போடு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத்தான் இந்தச் சூழல் தெளிவாக வலியுறுத்துகிறது. 1998-ல் மீன்வள ஆராய்ச்சி மற்றும் மீனவர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கயல், முத்து, பவளம் போன்ற படகுகளை இன்று காணவில்லை. ஒரு ஆட்சியில் தொடங்கப்படும் மக்கள்சார் திட்டங்கள், அடுத்து வரும் ஆட்சியால் புறக்கணிக்கப்படுவது மக்களுக்கான செயல்பாடாக இருக்காது.

அனைவருமே வணிகர் அல்ல

சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டமும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே களநிலவரம். செயலாக்கத்துக்கு வரும் அரசின் திட்டங்கள், பயன்பாடு சார்ந்து மறுபரிசீலனை செய்யப்படாததே இதற்கான காரணம். ஆட்சியதிகாரத் தொடர்புகளோடு, திட்டத்தை ஆக்கிரமிக்கும் வணிக மீனவர்கள், திட்டம்சார் வரைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகவே உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். ஒருபுறம் ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்துக்கும் மதச்சாயம் பூச ஒருசாரார் முயல்கிறார்கள் என்றால், மறுபுறம் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.56 லட்சம் மானியத்தோடு, ஆழ்கடல் மீன்பிடிப்புப் படகு வாங்கித் தொழில் செய்பவர்களும் இழுவை மீன்பிடிப்பை விடவில்லை.

திட்டத்தின் நிபந்தனைக்காகத் தங்களிடம் இருப்பதில் பழைய படகுகளைக் கைவிடுவதாகக் காட்டி, மானியத்தோடு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள மற்ற அதிக சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தி இன்றும் இழுவை மீன்பிடிப்பைத் தொடர்கிறார்கள். முதலீடு செய்ய சக்தி இருப்பதால், கிடைத்த வாய்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத கள உண்மை.

விசைப்படகு மீன்பிடித்தலில் இருக்கும் அனைவருமே வணிக மீனவர்கள் அல்ல. இருக்கும் விசைப்படகுகளில், கோடிக் கணக்கில் பணம் போட்டுத் தொழில் செய்பவர்கள், 2% மட்டுமே. மற்றவர்கள் ரூ.3 லட்சம் பெறுமானமுள்ள படகிலிருந்து ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள படகுகளிலேயே தொழில் செய்கிறார்கள். இவர்களில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான முதலீட்டில் படகு வைத்திருப்பவர்களே 90%. அனைவருமே கந்துவட்டிக் கடனில் உழல்வதால் இழுவை மடி மீன்பிடிப்பை விட முடியாதவர்கள். கடலோரப் பொருளாதாரம் சிறக்க, திட்டம் இவர்களையே குறி வைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், மானியம் வணிக மீனவர்களிடம் குவிவது தடுக்கப்பட்டு, பரவலாக மீனவர்களுக்குக் கிடைத்து திட்டத்தின் குறிக்கோளை உறுதிசெய்திருக்கும்.

இழுவை மடிக்குத் தீர்வு

இழுவை மடி, மீன்கள் பல்கிப் பெருகும் பவளப்பாறைகளை உடைத்துச் சிதிலங்களாக்கி, சிப்பிகள், முட்டைகள் மற்றும் பூச்சி பொட்டுகளோடு கரைகொண்டு வரப்படும் சங்காயம், கடல்வளத்தை அழிக்கும் அபாயகரமான தொழில். இந்தத் தொழில் செய்பவர்களின் உரிமங்களைத் தடை செய்யலாம். ஊழலில் ஊறித் திளைக்கும் மீன் துறையோ, இத்தொழிலைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

சிறிய மற்றும் நடுத்தர விசைப்படகு மீனவர்களை, இழுவை மடி மீன்பிடிப்பிலிருந்து கடல்வளம் காக்கும் தூண்டில் மற்றும் வழிவலைத் தொழிலுக்கு மாற்றுவது இயலாத காரியமல்ல. திட்ட முன்வரையறையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஏற்கெனவே இருக்கும் படகை உடைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தேவையற்றது. படகுகளின் தற்போதைய மதிப்புக்கு ஏற்றபடி மானியத்தைக் குறிப்பிட்ட சதவீதமாக்கி, அது உண்மையான பயனாளிகளுக்குப் பரவலாகக் கிடைத்திட வழிசெய்யலாம். விசைப்படகு மீனவர்கள் இழுவைமடித் தொழிலிலிருந்து தூண்டில் மற்றும் வழிவலைத் தொழிலுக்கு மாறியதை உறுதிசெய்து மானியம் வழங்கலாம்.

பரவலான கடலோடிகள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போதுதான் மீனவர்கள் தம்மளவிலேயே ஆழ்கடல் தொழிலுக்கு வருவார்கள். இழுவை மடிகள் தயாரிப்பையும், விற்பனையையும் தடைசெய்யும் அதிகாரம் அரசிடமே இருக்க, கிடைத்ததை வைத்துத் தொழில்செய்ய நினைக்கும் கடலோடிகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

- ஆர்.என்.ஜோ டி குரூஸ், ‘ஆழி சூழ் உலகு’,

‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்