எண்ணிக்கை மாற்றத்துக்குத் தயாராகிறதா இந்திய நாடாளுமன்றம்?

By செய்திப்பிரிவு

இந்திய ஒன்றிய அரசின் இதயமாக விளங்கும் நாடாளுமன்றத்துக்கு ஒரு புதிய கட்டிடத்தைத் திட்டமிட்டிருப்பதன் நோக்கம், மோடி தனது ஆட்சிக் காலத்தை என்றென்றும் இந்த நாடு நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதுதான் என்று சில குரல்கள் ஒலிக்கின்றன. அத்தகைய சந்தேகங்களுக்கும் வலுவான அடிப்படைகள் இருக்கவே செய்கின்றன. தற்போது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போது புதிய கட்டிடத்தில் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏன் மக்களவை கட்டப்பட வேண்டும்? அது போலவே தற்போது மாநிலங்களவையில் 245 பேர் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு 543 உறுப்பினர்கள் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டிருப்பது எதற்காக?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மக்களவைக்கு அதிகபட்சமாக 552உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் மக்களவை இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். மக்களவையின் ஒவ்வொரு உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். ஒன்றியப் பிரதேசங்களும் சின்னஞ்சிறு மாநிலங்களும் மட்டும் விதிவிலக்காக அமையும்.

எதிர்காலத் திட்டம்

ஒருவேளை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டங்களை மக்களவையில் நடத்திக்கொள்வதற்கான ஏற்பாடு என்று இதைக் கருதவும் இடமிருக்கிறது. ஆனால், அத்தகைய கூட்டங்கள் நடப்பது மிகவும் அரிதாகத்தான். முக்கியத்துவம் வாய்ந்த சில தினங்களையொட்டியும் சிறப்பு விருந்தினர்களின் வருகையின்போதுமே கூட்டுக் கூட்டங்களை நடத்துவது வழக்கம். அதுபோலவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட வரைவை மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலாதபோது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்களை நடத்தி மொத்தப் பெரும்பான்மையின் அடிப்படையில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடப்பதும் அரிதினும் அரிதாகத்தான். தற்போது கட்டப்பட உத்தேசித்துள்ள நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மக்களவையானது வருங்காலத்தில் இன்னும் அதிகமான உறுப்பினர்களை அவையில் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் இதனாலேயே வலுப்பெறுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை மாறுபாடுகளுக்கு ஏற்ப அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதை இந்திய அரசு தனது லட்சியமாக ஏற்றுக்கொண்ட 1970களில் மாநிலங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்கவும், அத்திட்டத்தில் அலட்சியம் காட்டும் மாநிலங்கள் அதிக உறுப்பினர்களைப் பெறவும் நேர்ந்தால் அது எப்படி நியாயமானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ஒவ்வொரு மாநிலத்துக்குமான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1976-லிருந்துமாற்றியமைக்கப்படவில்லை. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால், 2001-ல் அப்படி எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை. மாறாக, தொகுதி மறுசீரமைப்புக்கான பணிகள் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்துக்குப் பாதிப்பா?

இந்திய ஜனநாயகக் கட்டமைப்பில் மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு தீர்க்க முடியாத சிக்கலாகவே இன்னும் தொடர்கிறது. தமிழகத்தில் ஒரு மக்களவை உறுப்பினர் 18 லட்சம் குடிமக்களின் பிரதிநிதியாக இருக்கிறார் என்றால் உத்தர பிரதேசத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் 30 லட்சம் குடிமக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். எனவே, மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்காளரின் வாக்குக்கான மதிப்பும் அவர் வசிக்கும் மாநிலத்துக்கேற்ப மாறுபடுகிறது.

மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்முக்கியமான ஒரு பிரச்சினை கடந்த ஐம்பதாண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இன்னும் அதை எத்தனை காலத்துக்கு நீட்டிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை, மக்கள்தொகைக்கேற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுவரையறை செய்தால், நிச்சயமாக மீண்டும் அது ‘வடக்கு எதிர் தெற்கு’ பிரச்சினைக்கே இட்டுச்செல்லும். உதாரணத்துக்கு, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழ்நாடு 7 உறுப்பினர்களையும் கேரளம் 5 உறுப்பினர்களையும் இழக்க வேண்டியிருக்கும். உத்தர பிரதேசம் 8 தொகுதிகளையும் பிஹார் 6 தொகுதிகளையும் ராஜஸ்தான் 5 தொகுதிகளையும் கூடுதலாகப் பெறும்.

15-வது நிதிக் குழுவில் வரிவருவாய்ப் பகிர்வு குறித்து ஏற்கெனவே தென்னிந்திய மாநிலங்கள் போர்க்கொடி தூக்கின. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசியல் பொருளாதார உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்று அவை வாதிட்டன. அதே நேரத்தில், வட இந்திய மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன என்பதற்காக அங்கு வாழும் மக்கள் அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் தண்டிக்கப்பட வேண்டுமா என்ற கோணத்திலும் விவாதங்கள் நடந்தன.

அரசமைப்புத் திருத்தம்

மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதனை அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கொடுப்பது இந்தியக் கூட்டாட்சியில் கடுமையான விவாதங்களை உருவாக்குவதோடு அரசியல்ரீதியில் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, மக்கள்தொகை அதிகரித்துள்ள மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு, அதற்கேற்ப மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசு தேர்ந்தெடுக்கலாம். 1950, 1960-களில் இதே முறையில்தான் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இதற்காக, மக்களவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறித்த அரசமைப்புச் சட்டக் கூறுகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

இதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாகச் செயல்பட்ட மாநிலங்கள் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு மேலும் அதிகமான உறுப்பினர்கள் கிடைப்பதால், வருங்காலங்களில் ஒன்றிய அரசு சட்டங்களை இயற்றும்போது அந்த மாநிலங்கள் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும். மக்களவையில் பெரும்பான்மையைத் தீர்மானிப்பதில் தென்னிந்திய மாநிலங்கள் தங்களது செல்வாக்கை இழக்கும் அபாயமும் இருக்கிறது. பொருளாதாரரீதியில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னணி வகிக்கும்போது, வட இந்திய மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையின் அடிப்படையில் அரசியல்ரீதியாக வலிமையடையும். மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறை குறித்து 2026-ல் முடிவெடுக்கப்படலாம். ஆனால், அதற்குள் அடுத்த மக்களவைத் தேர்தலும் கடந்துவிடும்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழ்நாடு 7 உறுப்பினர்களையும் கேரளம் 5 உறுப்பினர்களையும் இழக்க வேண்டியிருக்கும். உத்தர பிரதேசம் 8 தொகுதிகளையும் பிஹார் 6 தொகுதிகளையும் ராஜஸ்தான் 5 தொகுதிகளையும் கூடுதலாகப் பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

14 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

38 mins ago

க்ரைம்

44 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்