செவிலியர்களைச் சுரண்டாதீர்கள்

By ரவி சீத்தாராமன்

உச்ச நீதிமன்றம் தனது ஆணையொன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறது: “அரசாங்கம் ஒரு முன்மாதிரி எஜமானராக நடந்துகொண்டு, தனது பணியாளர்களின் நியமனத்திலும் பதவி உயர்வுகளின்போதும் நியாயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.” ஆனால், செவிலியர்கள் விஷயத்தில் அரசு அப்படி நடந்துகொள்வதுபோல் தெரியவில்லை.

கிராமப்புறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாகத் தேவை என்ற சூழல் உள்ள போதும் தமிழகம் முழுவதும் உள்ள 1,600-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பல ஆண்டு களாக மத்திய - மாநில அரசாங்கங்கள் நிரந்தரச் செவிலியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்புச் சுரண்டல் நடத்துகிறது. அதுவும் மூன்று மாதத்துக்கோ ஆறு மாதத்துக்கோ ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. 48 கோடி ரூபாய் ஒதுக்கினால், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கும் ஒரு நிரந்தரச் செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால், இதற்குக் கைகொடுக்காமல் இழுத்தடித்துவருகிறது நிதித் துறை.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும் என்று அரசாங்கமும் அதிகாரிகளும் கொள்ளும் பெருமைக்கு அடிப்படைக் காரணம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். இத்தனைக்கும், போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் பலவற்றில் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதியச் செவிலியரே பணிபுரிந்துவரும் சூழல்தான் இருக்கிறது. கூடுதல் நேரத்துக்குக் கூடுதல் சம்பளமும் கிடையாது.

மாவட்ட, தாலுக்கா மருத்துவமனைகளில்...

மாவட்ட, தாலுக்கா மருத்துவமனைகளில் செவிலியர் களின் எண்ணிக்கை மிகவும் மோசம். 1975-ம் ஆண்டு நிரந்தரச் செவிலியர் பணியிடங்கள் எவ்வளவு இருந்தனவோ அதே அளவில்தான் இன்றும் இருக்கின்றன. உதாரணமாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள்தான். இந்த எண்ணிக்கை, மூன்று பணி நேரங்களுக்கும் (ஷிஃப்ட்) சேர்த்துதான். என்.ஏ.பி.எச். சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையில் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப் படும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தபோது, புதிதாக 1,160 தொகுப்பூதியச் செவிலியர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. இந்தச் செவிலியர்களுக்கு அங்கு நிரந்தரத் தேவை இல்லையா என்பது தெரியவில்லை. அதே அரசாணையின் மூலம் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாகப் பணியமர்த்தியுள்ள அரசு, செவிலியர்களிடம் பாராமுகமாக நடந்துகொள்வது ஏன்? நிதித் துறையின் ஒப்புதல் இல்லாததுதான் காரணம்.

கட்டிடங்கள் சேவை செய்யுமா?

எல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமாகக் கட்டிடங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால், வெறும் கற்களும் செங்கல்லும் சேவை செய்யாது என்பதை உணர வேண்டும். புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு பணிபுரிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவது கிடையாது. மதுரை மற்றும் தூத்துக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.

எம்.சி.ஐ. செய்வது என்ன?

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) என்பது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்துத் துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதாச்சாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும், நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வுசெய்யும். அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அங்கு ஓராண்டுக்கு எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிக்கப்படும். மேற்கண்ட விஷயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்தக் கல்லூரியின் மாண வர்களின் எண்ணிகையைக் குறைக்கவோ, கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவோ அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு.

பித்தலாட்டம்

மருத்துவக் கல்லூரி மாணவர்களை எந்த எண்ணிக் கையில் சேர்த்தால் நமக்கென்ன என்று சிலருக்குத் தோன்றும். பிரச்சினை அதுவல்ல. எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது மருத்துவமனையில் விதிமுறைப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிக் கையை எம்.சி.ஐ-க்குத் தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பதுபோல் போலியாகக் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.

உதாரணமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2012-ல் நடந்த ஆய்வின்போது வெறும் 130 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தாலும் 247 பேர் பணிபுரிவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றில் 50 செவிலியர் களுக்கு எம்.சி.ஐ. விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களையும் தயார்செய்து அளித்துள்ளார்கள். இதே போன்று திருச்சி, தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை எனப் பட்டியல் நீள்கிறது.

மேலும், எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது அந்த மாவட்டத்தில் உள்ள தொகுப்பூதியச் செவிலியர்களையோ அல்லது அங்கு அரசு செவிலியர் பள்ளியில் படிக்கும் மாணவிகளையோ தலையில் பெரிய செவிலியர் குல்லாவை அணிவித்துப் போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துவிடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில், தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெற்ற ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.

இவ்வாறு பல மருத்துவக் கல்லூரிகள் போலியான செவிலியர் எண்ணிக்கையை அளிப்பதால், அங்கு ஏற்கெனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான பணிச் சுமையைச் சுமக்க வேண்டி யுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

தொகுப்பூதிய அரசாணையின்படி இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய வேண்டும். நிரந்தரச் செவிலியர்கள் ஓய்வோ பணிஉயர்வோ பெறுவதை அடுத்து ஏற்படும் காலிப் பணியிடங்களைப் பொறுத்துத் தொகுப்பூதியர் படிப்படியாகப் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாகக் கணக்குக் காண்பித்தால், இல்லாத செவிலியர்கள் பதவி உயர்வோ பணி ஓய்வோ எப்படிப் பெற முடியும்,

செவிலியர் துறை மீது உள்ள அலட்சியமான பார்வையும், மக்கள்நலன் மீது அக்கறை இல்லாததும்தான் இந்த நிலைக்குக் காரணம். தொகுப்பூதியச் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை முன்னிறுத்திச் செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பதுபோல் சிலர் சித்தரிக் கின்றனர். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முறையான அனைத்து வழிகளிலும் நாங்கள் முயற்சிகள் மேற்கொள்கிறோம். இது எப்படி அரசுக்கு எதிரான செயலாகும்?

ரவி சீத்தாராமன், செவிலியர், தமிழ்நாடு அரசு தொகுப்பூதியச் செவிலியர் நலச்சங்கத்தின் துணைத் தலைவர், தொடர்புக்கு: ravicameo@gmail.com

இன்று உலகச் செவிலியர் தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

ஜோதிடம்

3 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

12 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

20 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்