கே கே.பி.ரஞ்சித் விநாயக்: ஒன்பது வயது தவில் வித்வான்!

By வா.ரவிக்குமார்

அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையாக வாசிக்கப்படும் தவில் வாத்தியத்தைக் கோடை இடியாக வாசிக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த தவில் வித்வான் கே.பி.ரஞ்சித் விநாயக். யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஒன்பது வயதுச் சிறுவனான இவரின் வாசிப்பைப் பிரபல வித்வான்கள் பலரும் ‘சபாஷ்.. பலே…’ என அகம் மகிழ்ந்து புகழ்ந்திருக்கின்றனர். மழலை மேதைகளாக இசையில் சுடர்விட்டவர்களின் பட்டியலில் நிச்சயம் ரஞ்சித்துக்கும் ஓர் இடம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது தவில் வாசிப்பில் அவர் வெளிப்படுத்தும் மேதைமை.

பிரபல நாகஸ்வர வித்வான்கள் திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சிசுந்தரம், இஞ்சிக்குடி இ.எம்.சுப்பிரமணியன், சின்னமனூர் விஜய் கார்த்திகேயன், இடும்பவனம் பிரகாஷ் இளையராஜா, தவில் மேதை ஹரித்துவாரமங்களம் ஏ.கே.பழனிவேல், தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன் உள்ளிட்ட பல வித்வான்களுக்கு ஏழு வயதிலேயே ரஞ்சித் பக்கவாத்தியமாகத் தவிலை வாசித்திருப்பது இசை உலகில் பெரும் சாதனை. நாகஸ்வரம் மட்டுமில்லாமல் பிரபல கர்னாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருண், குழலிசைக் கலைஞர் பிரபஞ்சன் பாலசந்தர், சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத், வயலின் கலைஞர் அபிஜித் பி.எஸ்.நாயர், மாண்டலின் கலைஞர் யூ.ராஜேஷ் ஆகியோருடனும் இணைந்து பக்கவாத்தியமாக ரஞ்சித் விநாயக் தவில் வாசித்திருக்கிறார்.

தோள்சுமை தரிசனம்

திருவிழாக்களிலும், கோயில்களில் இறைவனின் தரிசனத்தையும் காண்பதற்குக் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரிய காட்சிகளையும் தரிசனங்களையும் நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் நம்முடைய பிள்ளைகளாவது பார்க்கட்டும் என்னும் பெருந்தன்மையோடு குழந்தைகளைத் தங்கள் தோளில் ஏற்றிவைத்துக்கொள்வார்கள் சில பெற்றோர். அப்படிப்பட்ட தோள்சுமை தரிசனத்தின் மூலமாக இசை மீதான தன்னுடைய ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட கலைஞர் ரஞ்சித்.

பெங்களூருவில் நாகஸ்வரக் கலைஞரான புத்ராஜ், மஞ்சுளா தம்பதிக்கு 2011 பிப்ரவரி 23 அன்று பிறந்தவர் ரஞ்சித் விநாயக். தன் தந்தையால் ரஞ்சித்துக்கு மூன்று வயதிலேயே இசை அறிமுகமானது. நான்கு மாடவீதிகளில் இறைவன் வீதி உலா வரும்போதும் தந்தை புத்ராஜின் தோளில் அமர்ந்தபடி வீதி உலாவில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் தவில் கச்சேரிகளைத் தவறாமல் கண்டு ரசிக்கும் பழக்கம் உடையவர் ரஞ்சித்.

“வெறுமனே பார்ப்பதோடு, தவில் வாசிப்பின் சொற்கட்டுகளை என்னுடைய தலையில் விரல்களால் வாசித்தபடியே ரஞ்சித் இருப்பான். இதுவே அந்தச் சிறிய வயதில் அவனுக்கு இசை மீது இருந்த ஈடுபாட்டை எனக்குப் புரிய வைத்தது” என்கிறார் ரஞ்சித்தின் தந்தை புத்ராஜ். இசையின் தொடக்கப்புள்ளியாகத் தந்தை இருந்தாலும், பாரம்பரியமான தவில் வாசிப்பை முறையாகத் தவில் வித்வான்கள் திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்ரமணியன், ஓசூர் பி.வெங்கடேசன் ஆகியோரிடம் ரஞ்சித் கற்றுக்கொண்டார். முதல் கச்சேரி ஐந்து வயதில் திருக்கோவிலூர் சகோதரர்கள் பாபு, குமார் நாகஸ்வரம் வாசிக்க, பெங்களூருவில் இருக்கும் குலதெய்வம் எல்லம்மா கோயிலில் நடந்தது. ரஞ்சித்தின் குரு டி.ஆர்.சுப்ரமணியன் உடன் வாசித்து சீடனுக்குப் பக்கபலமாக உதவினார்.

இந்தியாவின் மிக இளம் வயது தவில் கலைஞராக அறியப்படும் ரஞ்சித்துக்கு பெங்களூரு மணிகண்ட சங்கீத சேவா டிரஸ்ட் ‘கலா ரன்ந்தா’ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமான சபாக்களில் ஒன்றான மும்பை ஷண்முகானந்தா சபா, கர்னாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் அமைந்த நிதி நல்கையை இளம் கர்னாடக தவில் இசைக் கலைஞரான ரஞ்சித்துக்கு வழங்கவிருக்கிறது. தவில் கலையை அழிந்துவரும் விஷயமாகப் பார்ப்பவர்களின் எண்ணங்களைப் பொய்த்துப்போகச் செய்ய பிறந்துகொண்டே இருக்கிறார்கள் ரஞ்சித் விநாயக்குகள்!

- வா.ரவிக்குமார், தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

36 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்