நீக்கப்படுவதற்கு முன்னர் நீங்களே விலகிவிடுங்கள் ட்ரம்ப்!

By செய்திப்பிரிவு

வியாழக்கிழமை காலை ட்ரம்ப் விழித்தெழுந்த தருணத்தில், சில விஷயங்கள் தெளிவாகியிருந்தன. அவரிடம் பொய் சொல்வதற்கு எந்தக் கருத்துக் கணிப்பு நிபுணரும் மிச்சம் இல்லை. அவரது காலை உணவுக்கு ருசி சேர்க்கும் வகையில் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ சேனல் போதுமான முகஸ்துதிகளைச் செய்திகளாக வழங்கிவிடவில்லை. இவை தவிர, சர்வாதிகாரியின் குறிப்பேட்டில் இருக்கும் கடைசித் தந்திரங்களில் ஒன்றை அவர் பயன்படுத்த வேண்டிவரும் என்பதும் தெளிவாகியிருந்தது.

ஆம், அதிபர் தேர்தலைச் சட்ட விரோதமாகத் தாமதப்படுத்துவதன், மூலம் அரசமைப்புச் சட்டத்தை மீறும் எண்ணத்தை அன்றைய தினம்தான் வெளிப்படுத்தினார் ட்ரம்ப். 1.50 லட்சம் அமெரிக்கர்களைப் பலிகொண்ட பெருந்தொற்று தொடர்பான அவரது தர்க்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இத்தகைய கருத்தும் அவரிடமிருந்து வெளிப்படுகிறது. பரிசோதனைகளைக் குறைத்தால், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான் அவரது தர்க்கம். அதேபோல், நவம்பர் 3-ல் அதிபர் தேர்தல் நடக்கவில்லை என்றால், அதிபர் மாளிகையிலிருந்து தான் துடைத்தகற்றப்படப்போவதில்லை என்றும் ட்ரம்ப் கருதுகிறார். ஆக, ‘நிலையான மேதை’ (Stable Genius - ட்ரம்ப் தன்னைப் பற்றி இப்படி வர்ணித்துக்கொண்டார்) மீண்டும் அசத்திவிட்டார்!

சரணாகதி வியூகங்கள்

இதைவிட நல்ல யோசனை உண்டு: வாழ்வா, சாவா எனும் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல் வெள்ளை மாளிகையிலிருந்து கிடைக்கும் எனக் காத்திருப்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஒரு சகாயத்தை ட்ரம்ப் செய்தாக வேண்டும். அதாவது, அவர் சரணடைந்துவிட வேண்டும். மிக முக்கியமாக, அவர் இன்றே வெளியேறிவிட்டால், ஆபத்தான போலி மருத்துவம் தொடர்பாக அதிபர் மாளிகையின் மேடையிலிருந்து அவர் ஆற்றிய உரைகளுக்குச் செவிமடுத்த அவரது ஆதரவாளர்களின் உயிரை அவரால் காப்பாற்ற முடியும்.

‘கோவிட்-19’ பற்றிக் கவலைப்பட எதுவுமில்லை, மாயாஜாலம் போல அது விரைவில் மறைந்துவிடும் என்று அறிவித்து, பெருந்தொற்றுக்கு எதிரான போரின் முதல் நாளிலேயே சரணடைந்துவிட்டார் ட்ரம்ப். இப்படியான சரணாகதி பாணி வியூகங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

ஒரு விசித்திர மனிதரின் ஆட்சியின் கீழ் ஒரு நாடு இருப்பதன் நிகர விளைவு இதுதான்: டெக்சாஸ் எனும் ஒற்றை மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் ‘கோவிட்-19’ மரணங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியிருக்கின்றன. மேற்கு ஐரோப்பாவின் முக்கியமான 5 நாடுகளில் ஏற்பட்ட மரணங்களின் கூட்டுத்தொகையைவிட இது அதிகம். அதே வியாழன் அன்று, அமெரிக்காவில் 1,400 பேர் கரோனா பாதிப்பில் உயிரிழந்திருப்பதாக ‘கோவிட் ட்ராக்கிங் ப்ராஜெக்ட்’ தெரிவித்தது. மே 15-ம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் அதிக மரணங்கள் நிகழ்ந்திருப்பது இப்போதுதான்.

கைவிடும் போக்கு

இரண்டு வருடங்களுக்கு முன்னரே, பகிரங்கமாக அமெரிக்காவைக் கைவிட்டவர்தான் ட்ரம்ப். பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் முன்வைத்த விமர்சனங்களை ஆதரித்தவர் அவர். எனவேதான் சமீபத்தில் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, ஆப்கனில் அமெரிக்க வீரர்களின் தலைக்கு ரஷ்யர்கள் விலை வைப்பது குறித்து எந்தக் கேள்வியையும் அவர் எழுப்பவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக இல்லை.

கரோனா பரவலுக்கு மத்தியில் வணிக நிறுவனங்களை மீண்டும் திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்த பிறகும், அதைச் செய்ய முனைப்பு காட்டியதன் மூலம் பொருளாதாரத்திலும் இழப்புகளை விளைவித்துவிட்டார். கரோனா வைரஸ் ‘ஹாட் ஸ்பாட்’கள் நிறைந்திருக்கும் தருணத்தில், வழக்கம் போல வணிகச் செயல்பாடுகளைத் தொடங்க மக்கள் அஞ்சினார்கள். இதோ, இந்த வாரம் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிந்ததை நாம் பார்த்தோம்.

பொருளாதார ரீதியிலான தியாகங்களைத் திறம்பட எதிர்கொள்வது, சீரான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பது ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம்தான் பொருளாதார வளத்தின் பாதைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று பொறுப்புள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதை இன்னமும் ட்ரம்ப் உணர்ந்துகொள்ளவில்லை.

அதிகார துஷ்பிரயோகம்

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தையும் ட்ரம்ப் மதிக்கவில்லை. நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். அதிகார துஷ்பிரயோகம் செய்தார். உக்ரைனுக்கு ராணுவ நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக, தனது அரசியல் எதிரி (ஜோ பிடேன்) தொடர்பான விசாரணையைக் கிளறுமாறு அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுத்தார்.

அந்தப் புள்ளியிலிருந்தே, அவருடைய சர்வாதிகாரிப் போக்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு பூங்காவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, பைபிளும் கையுமாகப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்ததெல்லாம் இதன் ஆரம்பம்தான்.

கலவரத்துக்கான காத்திருப்பு

சமீபகாலமாக ஒரு கலவரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். பற்றியெரியும் கட்டிடங்கள், உடைபடும் ஜன்னல்கள், தெருக்களில் நிறைந்திருக்கும் வன்முறைக் கும்பல்கள் என ஒரு கலவரச் சூழல் உருவானால், ‘இப்படியெல்லாம் படுகொலைகள் நடக்கும் என முன்பே எச்சரித்தேன். இதற்குத் தீர்வு காண என்னால் மட்டும்தான் முடியும்’ என்று தனது தீர்க்கதரிசனத்தைக் காட்டிக்கொள்ளலாம் என்பது அவரது எதிர்பார்ப்பு.

இனவெறியை வேரறுக்க மாற்றங்கள் அவசியம் என்பதைப் பெரும்பாலானோர் ஆதரிக்கிறார்கள். இந்நிலையில், சூழலைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ள கதையையே மாற்றுவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி!

மின்னியாபோலிஸ் நகரில் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டங்களின்போது, கையில் குடையுடன் ஒரு மனிதர் ஜன்னலை உடைத்ததைத் தொடர்ந்துதான் அங்கு பெரும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. அந்த நபர் ஒரு வெள்ளையின ஆதிக்கவாதி என்பதை போலீஸார் அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

நிக்ஸனுக்கு அடுத்த இடத்தில்…

ஒருவேளை ட்ரம்ப் பதவி விலக வேண்டியிருந்தால், ரிச்சர்டு நிக்ஸனின் வரிசையில், மரியாதை இழந்து வெளியேறும் அதிபராவார். பதவிநீக்கத் தீர்மானத்தின் மூலம் பதவியை இழக்கும் சூழல் உருவாகும் (தன் மீதான பதவிநீக்க விசாரணைகள் முழுமையடைவதற்கு முன்னரே நிக்ஸன் பதவி விலகிவிட்டார்). அதேசமயம், சீனாவுடனான ராஜதந்திர நடவடிக்கைகள், மிக முக்கியமான சுற்றுச்சூழல் சட்டங்களில் கையெழுத்திட்டது என்பன போன்ற காரணங்களால் ட்ரம்ப்பைவிட ஒரு படி மேலேதான் நிக்ஸனை வைக்க முடியும்.

அதிபர் தேர்தலைத் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் என்பது மட்டுமல்ல; அது இதற்கு முன் நடந்திராத விஷயமும்கூட. அமெரிக்க உள்நாட்டுப் போர் சமயத்தில் தேர்தலை நடத்தினார் ஆபிரகாம் லிங்கன். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தேர்தலைச் சந்தித்தார் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

ஒருவேளை ட்ரம்ப் பதவி விலகினால், துணை அதிபர் மைக் பென்ஸ் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம். அவரை எதிர்கொள்ள ஜனநாயகக் கட்சியினர் அஞ்ச வேண்டியதில்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளைக் கூண்டில் அடைத்ததை நியாயப்படுத்திப் பேசியவர் அவர். இயந்திரத்தனமாகக் கீழ்ப்படியும் தன்மை கொண்டவர். கரோனா பெருந்தொற்றை அரசு எதிர்கொண்ட விதத்தைக் கண்காணிக்கும் பொறுப்பில் தோல்வியடைந்தவரும்கூட.

அமெரிக்கர்களுக்கு வெகுமதி

தேர்தலுக்கு முன்பாகவே ட்ரம்ப் பதவி விலகுவது என்பது, பெருவாரியான வாக்குகள் மூலம் அவரை நிராகரித்த திருப்தி அமெரிக்கர்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடும்.

மறுபுறம் இன்னொரு வாய்ப்பும் மக்களுக்கு இருக்கிறது- திருப்திகரமான வாய்ப்பு அது. தேர்தல் நடக்கிறதோ இல்லையோ, சர்வாதிகாரியின் கடைசித் தந்திரமாக, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற அவர் மறுத்துவிடலாம்.

அப்படி அவர் செய்தால், சோர்வுற்றுக் கிடக்கும் தேசத்துக்கு, வெள்ளை மாளிகையிலிருந்து ராணுவத்தால் ஊரறிய அவர் வெளியேற்றப்படும் காட்சியைக் காணும் வெகுமதி கிடைக்கும்!

திமோதி ஈகன்

நன்றி: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

36 mins ago

க்ரைம்

42 mins ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்