கரோனாவின் ஊடாகப் பரவும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?

By கண்ணன்

கரோனா ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களிடையே இருக்கும் பிளவுகளை வலுப்படுத்துகிறது. இனமத வெறுப்புகளைப் பீறிடவைக்கிறது. வெவ்வேறு நாடுகளில் மக்கள் தமது நம்பிக்கைகளை முன்னிறுத்திக் குழுமிட மதம் முக்கியக் காரணியாக உள்ளது. கரோனா பரவிட இது உகந்த சூழலாகிறது. இக்காலத்தில், மனிதர்கள் சரீர விலகலைப் பேணாமல் அறிவியலை மறுத்து ஓரிடத்தில் குழும மதம் மட்டுமே காரணமில்லை எனினும் முக்கியக் காரணம் மதம். எல்லா மதங்களிலும் பெரும்பான்மையினர் அறிவியலைப் புறந்தள்ளுபவர்கள் அல்ல எனினும் புறந்தள்ளுவோருக்கு மத நம்பிக்கைகளே முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.

இந்தியாவில் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் முஸ்லிம்களை இலக்காக்க கரோனா பயன்படுகிறது. டெல்லி நிஜாமுதீன் கூடுகை கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை கரோனா பரவுவதற்கான அதீதச் சம்பவமாக உருப்பெற்றிருக்கிறது. இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான் எனினும் ‘கரோனா ஜிகாத்’ போன்ற விஷத்தொடர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இத்தனையும் நடந்த பின்னர் மசூதியில் கூடித் தொழுவோம் என அடம்பிடிக்கும் முஸ்லிம்களில் சிறுபான்மையினர் தமது சமூகத்துக்கும் துரோகம் செய்கின்றனர்.

யாரும் விதிவிலக்கல்ல

கரோனா ஒழிப்புக்காகச் செயல்படும் சுகாதார ஊழியர்களை முழு மனதோடு வரவேற்று ஒத்துழைப்பு வழங்காமல் தடையாக நிற்பவர்கள் தமது சமூகத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மக்கள் குழுமுவதைத் தடுக்கும் அரசின் சட்டத்துக்கு எந்த மதமும் கட்சியும் குழுவும் விதிவிலக்கு வேண்டாமல் முழுவதுமாகக் கடைப்பிடிப்பதே சரி. தனிப்பட்ட நம்பிக்கைகளை, சாதி மதச் சடங்குகளை, பொதுநலத்துக்கு ஆபத்தாக இல்லாத அளவில் மட்டுமே பேண முடியும்.

சட்டத்தையும் எச்சரிக்கைகளையும் மலேசிய முன்னனுபவத்தையும் புறக்கணித்து தப்லிஹி ஜமாத்தின் தலைமை கண்மூடித்தனமாக நடந்துகொண்டதால் ஒரு மதத்தினர் அனைவரையும் சந்தேகக் கண்களோடு பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. எந்த ஒன்றிலும் தூய்மைவாதத்தை நோக்கிய பயணமானது மூடநம்பிக்கைகளுக்கும் அடிப்படைவாதத்துக்கும் இட்டுச்செல்லும் என்பதற்கு இந்த ஜமாத் இன்னொரு உதாரணம்.

கரோனாவின் தாக்கம் சீனாவிலிருந்து தொடங்கியதால் சீனர்கள் மீது சந்தேகத்தையும் இன வெறுப்பையும் பலரும் வெளிப்படுத்தக் காரணமாக அமைந்தது. பல முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மையினர் வெறுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான அணுகுமுறை கரோனா வழி வெளிப்படுகிறது. சீன வைரஸ், ஷியா வைரஸ், ஜிகாதி வைரஸ் ஆகியன இதற்குச் சூட்டப்பட்டுள்ள வெறுப்புப் பெயர்களில் சில. பிற நாடுகளில் நடப்பவை நம் நாட்டினரின் இழிசெயல்பாடுகளை இயல்பானதாக்கிவிடாது. இவை மனிதரின் பொதுவான சிறுமை குணம் என்பதை உணர்ந்து அதில் இணையாமல் உயர் பண்புகளோடு செயல்படும் விழிப்புணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

அமெரிக்கா இழைத்திருக்கும் அநீதி

இப்படி நடக்கும் பற்பல சிறுமைகளுக்கு கிரீடமாக இருப்பது அமெரிக்காவில் ட்ரம்ப்பும் அவரை ஆதரிக்கும் இன வெறுப்பையும் மத வெறுப்பையும் உமிழும் தீவிர வலதுசாரி அரசியல் குழுக்களும் கிறிஸ்துவ அடிப்படைவாதக் குழுக்களும். அமெரிக்க அதிபர் கரோனா விஷயத்தில் அந்நாட்டுக்கு இழைத்திருக்கும் அநீதி அளவிட முடியாதது. ஆனால், இக்காலத்திலும் ஒரு விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுகிறார். இனவாதியான அவர் இன வெறுப்பைப் பரப்ப இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடவில்லை. கிருமிக்கு ‘சீனரின் வைரஸ்’ என்று பெயரிட்டு சீன இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்கியிருக்கிறார். இது ஏற்கெனவே கனன்றுகொண்டிருந்த சீன இன வெறுப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல பற்றி எரிகிறது.

இப்பிரச்சினையில் சீன அரசின் அணுகுமுறை விமர்சனத்துக்கு உரியதுதான். ஆனால், இதற்கு சீன இனத்தவரை எப்படிப் பழிக்க முடியும்? சீன நாட்டு மக்கள் வழி பிற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியிருந்தாலும் அது அறியாமல் நேர்ந்ததுதான். சீன இனத்தாரில் ஒரு பகுதியினர்தான் சீனாவில் வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் உலகின் பற்பல நாடுகளில் அந்தந்த தேச அடையாளங்களை ஏற்று வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும் பிரச்சார வலுவுள்ள அமெரிக்க அதிபர், அவருடைய வானரப் படையின் தாக்குதலில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இனவாத அரசியல் மட்டும் காரணம் அல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்குச் சவாலாக உருவாகிவரும் ஆசிய நாடொன்றின் வளர்ச்சி பற்றிய அச்சமும், அவர்கள் செல்வாக்கை மட்டுப்படுத்த கரோனாவைப் பயன்படுத்தும் குயுக்தியும்கூட இதில் உண்டு.

வெறுப்பரசியலை எதிர்கொள்ளும் வழி

இந்த இனவாத முன்னெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அன்ட்ரூ யாங் எனும் சீன இன அமெரிக்கர்; இவர்கள் ஆசிய அமெரிக்கர் என அழைக்கப்படுகின்றனர். இவர் ட்ரம்ப் படையின் இனவாதப் பிரச்சாரத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் வாழும் சீன வம்சாவளியினர் பிற அமெரிக்கர்களின் சந்தேகத்துக்கும் வெறுப்புக்கும் எப்படி ஆளாகியுள்ளனர் என்பதைப் பற்றி எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாக, இதை எதிர்கொள்வது எப்படி என்பதையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருடைய பார்வையின்படி இத்தகைய வெறுப்பரசியலுக்குப் பதிலடி கொடுப்பதில் பயனில்லை. சீன இன அமெரிக்கர்கள் கரோனா ஒழிப்பில் முன்னின்று பணியாற்றிதான் இந்த வெறுப்பை முறிக்க வேண்டும் என்கிறார். இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

வெறுப்பு அரசியலைத் திருப்பி அடிப்பதன் வழி எதிர்கொள்வதைக் காட்டிலும் இது பயனுள்ளது. நிதானமான சொற்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் வெறுப்பரசியலை எதிர்கொள்வதே ஆக்கபூர்வமானது. எதிர்த்தரப்பில் மன மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற ‘மூடநம்பிக்கை’ நம் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை. சக மனிதரில் நம்பிக்கை இழந்தால் முட்டி மோதி அழித்துக்கொள்வதைத் தவிர வேறு பாதை திறக்காது.

- கண்ணன், ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர்.

தொடர்புக்கு: kannan31@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

39 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்