360: சினிமாவின் சாத்தியம் ‘1917’

By செய்திப்பிரிவு

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஆங்கிலம் அல்லாத பின்னணியிலிருந்து முதன்முறையாகத் தென்கொரியாவிலிருந்து ‘பேரசைட்’ படம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இயக்கம், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், அசல் திரைக்கதைக்காகவும் சேர்த்து நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. நுகர்வு மோகத்தின் உச்சத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான பிரிவினையையும் அதனால் விளையும் மோதல்களையும் சிறந்த அங்கத நாடகமாக ஆக்கிய ‘பேரசைட்’ படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியை அளித்தது.

இருப்பினும், சர்வதேச அளவில் அதிக அளவு மனித சேதத்தையும் அழிவையும் உருவாக்கிய முதலாம் உலகப் போரில் அதிகம் பலியானது, அதில் பங்குபெற்ற இளைஞர்களின் களங்கமின்மையும் குழந்தைமையும்தான் என்பதைத் தொழில்நுட்ப நேர்த்தியோடு கவித்துவமாகச் சொன்ன திரைப்படம் ‘1917’ ஆகும். ‘பேரசைட்' உடன் போட்டியில் இருந்த இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ், ஒலிக்கலவை ஆகிய மூன்று தொழில்நுட்பப் பிரிவுகளில் மட்டுமே ஆஸ்கர் அளித்தது ஏமாற்றம்தான்.

‘அமெரிக்கன் பியூட்டி’, ‘ஸ்பெக்டெர்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் இயக்குநரான சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்பிரட் மெண்டிஸ் முதல் உலகப் போரில் பங்குபெற்றவர். சேறு சகதியோடு பிணங்களைக் கடந்து ரத்த கோரங்களைப் பார்த்த அனுபவத்தில் அந்தத் தாத்தா வீடு வந்த பிறகும், அடிக்கடி தன் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்தப் போரின் கசப்பான அனுபவங்கள் அவரை 50 ஆண்டுகளுக்குப் பிறகும் துரத்தியதை சாம் மெண்டிஸ் கதைகளாகக் கேட்டதன் தாக்கமே இந்தப் படம்.

‘1917’ படத்தின் ஆரம்பக் காட்சியே நீளமான பதுங்கு குழிகள் வழியாக ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு வடக்கு பிரான்ஸின் இன்னொரு எல்லைக்குச் செல்லும் இரண்டு பிரிட்டிஷ் வீரர்களின் பயணத்திலிருந்துதான் தொடங்குகிறது. நாள் ஏப்ரல் 6, 1917. திரைப்படம் முழுவதுமே ஒரே ஷாட் என்று தோன்றும் வகையில், நாமும் அவர்களுடன் அதே கால அளவில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

ஜெர்மானியர் விரித்த பொறிக்குள், அது பொறியென்று தெரியாமல் நுழையவிருக்கும் 1,600 வீரர்களைக் காப்பாற்றுவதற்கான பயணம் அது. லான்ஸ் கார்ப்போரல்களாகக் குழந்தைத் தன்மை முகத்தில் மிச்சமிருக்கும் ப்ளேக்கும் ஷோபீல்டும் பயணிக்கும் பாதை சாதாரணமானதல்ல. சேறு, கம்பிவலை வேலிகள், கண்ணிவெடிகள், ஆழ்குழிகள், சடலங்கள், அபாயமான சுரங்க வெடிகள் இருக்கும் பாதாள அறைகள், நடுவே குறுக்கிடும் காட்டாறு கொண்ட வழி அது. காப்பாற்றப்படவிருக்கும் 1,600 வீரர்களில் ப்ளேக்கின் அண்ணனும் ஒருவர்.

நூற்றுக்கணக்கில் ஆயுதங்கள், டாங்கிகள் உட்படக் கைவிடப்பட்ட நிலங்கள், படைவீரர்கள் தங்கிய நிலவறைகள், அங்கு அவர்கள் விட்டுச்சென்ற வெடிகுண்டுகளோடு வசிக்கும் எலிகள், பண்ணை வீடுகள், வெட்டவெளிகள் எனப் பாழ்நரகம்போலத் தெரியும் இடங்களின் வழியாக ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ் வறண்ட சில்லிடலுடன் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

திரைப்படம் முழுக்க வெட்டப்பட்ட செர்ரி மரங்கள், ஆற்றின் ஓரங்களில் பூத்திருக்கும் செர்ரிகள் காண்பிக்கப்படுகின்றன. பூத்து, கனிகளாகச் செழிக்க வேண்டிய இளைஞர்களின் பருவம் யுத்தத்தில் தீய்ந்து கருகும் சித்திரமாகச் செர்ரி மலர்கள் காற்றில் பறக்கின்றன. நடுவில் அதிர்ச்சிகளும் அதிசயங்களும் குறுக்கிடுகின்றன. பாழ்பட்ட ஒரு கட்டிடத்தின் பாதாள அறையில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் நம்பிக்கையென இருட்டில் வெளிச்சத்தைப் போல் எதிர்ப்படுகின்றனர். தன் அண்ணனைக் காப்பாற்றக் கிளம்பும் ப்ளேக், நடுவழியில் ஜெர்மானிய விமானிக்குக் கருணை காண்பித்ததால் கத்திக் குத்துப்பட்டு இறக்கிறான். நண்பனிடம், “நான் இறக்கிறேனா?”என்று கேட்கிறான்.

இறக்கிறோம் என்று தெரிந்துகொண்டே இறப்பதன் துயரம் அவனது முகத்திலிருந்து நமக்குக் கடத்தப்படுகிறது. இசையும் பின்னணிச் சத்தங்களும் மிகவும் அமைதியாக, ஆனால் தத்ரூபமான தன்மையைத் தருகின்றன. விளையாட்டுத்தனமும் உலகின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டிய பருவத்தில் துப்பாக்கியைச் சுமந்துகொண்டு அறியாத நிலங்களில் நான்கு திசைகளிலும் கண்களை ஊடுருவியபடி பார்க்கும் ஷோபீல்டாக நடித்திருக்கும் மெக்கேயின் கண்களில் அவநம்பிக்கை மெதுவாக வேர்கொள்கிறது.

நடிகர்கள் நடக்கும்போதும், பார்வையாளர்களை நிலத்தில் ஊர்ந்துசெல்லவைக்கும்போதும் யுத்தத்தை மேலிருந்து காட்டும்போதும் ஒட்டுமொத்தமாக நடக்கும் யுத்தக் குழப்படிகளின் மத்தியிலேயே நம்மை இருத்திவிடுகிறார் இயக்குநர். ஒருகட்டத்தில், நிலங்களும் கட்டிடங்களும் இருண்ட தன்மையை அடைந்து, எதிரிகள் துரத்த நெருப்பில் ஓடும்போது பேரோல ஓவியத் தன்மையைக் காட்சிகள் அடைந்துவிடுகின்றன. இப்படத்தின் காவியத் தன்மைக்கு இசையால் மகுடம் சூட்டியிருப்பவர் தாமஸ் நியூமேன். அடுத்து வரப்போகும் பயங்கரத்தை உணர்த்துகிறது இவரது இசை சங்கேதங்கள்.

சினிமா என்ற ஊடகத்தின் முழுமையான ஆற்றலையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்தும் படைப்புகள் ஹாலிவுட்டில் அரிதாகிவிட்டன. கிறிஸ்டோபர் நோலனின் ‘டன்கிர்க்’ படத்துக்குப் பிறகு, அந்தப் பிரம்மாண்டத்தை உள்ளடக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் சாதித்த திரைப்படம் ‘1917’.

அத்தனை அழிவுகள், நஷ்டங்கள், குரூரங்களுக்கு மத்தியில் மனித முயற்சியின் அசாத்தியத் தன்மையை யுத்தம்தான் வெளிக்கொண்டுவருகிறது. சினிமாவின் அதிகபட்ச விழைவு சாதிக்கப்பட்டிருப்பது போர் திரைப்படங்களில்தான். ‘1917’ இன்னும் கூடுதலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

44 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்