ஆறுகளை அழித்துவிட்டு எங்கே போகப்போகிறோம்?

By இரா.நல்லகண்ணு

மது வியாபாரத்தில் புழங்குவதைவிட அதிகப் பணம் புழங்குகிறது மணல் கொள்ளையில்.

பாரதி, ‘‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய ஆறுபலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு’’ என்று பாடினார். இது அடிமை இந்தியாவில் பாடப்பட்டது. இன்றைக்கு பாரதி இருந்தால், தமிழ்நாட்டை இதே நதிகளின் அடையாளத்துடன் சேர்த்து அவரால் பாட்டு எழுத முடியுமா? சந்தேகம்தான். ஏனென்றால், விடுதலைக்குப் பிந்தைய இந்த 67 ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள 34-க்கும் அதிகமான ஆற்றுப் படுகைகள் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைந்து கிடக்கின்றன; பெரும்பாலானவை வறண்டுவிட்டன. ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள ஊர்களெல்லாம்கூட நிலத்தடி நீராதாரத்தை இழந்து வெளியிலிருந்து நீரைப் பெறும் அவலநிலை உருவாகியிருக்கிறது.

இச்சீரழிவு இயற்கையாக ஏற்பட்டது அல்ல. கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. மணலும் தண்ணீரும் உற்பத்திசெய்யப்படும் பொருட்கள் அல்ல; இயற்கையின் கொடை. இயற்கையாகக் கிடைக்கும் செல்வங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரித்து, பாதுகாத்து அடுத்துவரும் சந்ததிகளுக்குக் கையளிக்க வேண்டியது உயிர்களின் கடமை. விலங்குகள்கூட அப்படித்தான் இருக்கின்றன. மனிதர்களோ பேராசையில் சூறையாடிக்கொண்டிருக்கிறோம். உலகெங்கும் இப்படித்தான் என்றாலும், நம்மூர் நிலை கூடுதல் மோசம் என்று தோன்றுகிறது.

அரசின் நிலைப்பாடு

தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தி அரசுப் பொறுப்பில் நடத்துவதென்று 2003-ல் முடிவெடுக்கப்பட்டது. ஆறுகளில் மணல் குவாரிகள் அமைக்கும் பொதுப்பணித் துறை பொறியாளரின் பரிந்துரை, மாவட்ட ஆட்சியாளர் அனுமதியோடு ஊராட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்.

மணல் ஒரு சிறுகனிமம் என்பதால், இது தொடர்பான சில விதிகள் / வழிகாட்டுதல்கள் உள்ளன. 1. குவாரியின் எல்லை வெளிப்படையாக வரையறுக்கப்பட வேண்டும். 2. இரவில் மணல் எடுக்கக் கூடாது; வேலை நேரம் குறிப்பிடப்பட வேண்டும். 3. ஒரு மீட்டர் (3 அடி) ஆழத்துக்கு மேல் ஆற்றில் மண் தோண்டக் கூடாது. 4. ஆற்று நீர்ப்போக்கைத் தடுத்து குறுக்கே சாலை அமைக்கக் கூடாது. 5. குடிநீர் நிலையத்தின் 500 மீட்டர் சுற்றளவில் மணல் எடுக்கக் கூடாது (பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1884-ல் ஆறுகள் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. ஆற்றின் இருபுறமும் 100 அடிக்குள் தனியார் நிலங்களில் கூட மண் அல்லது மணல் அள்ளக் கூடாது என்று சட்டம் போடப்பட்டது). 7. பாலங்கள் அருகே மணல் எடுக்கக் கூடாது. 8. ஆற்றுக்கரைகள் சேதப்படுத்தப்படக் கூடாது (ஆறுகளில் கட்டப்பட்டுள்ள குடிநீர் உறிஞ்சிக் கிணறுகளில் 132 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புனரமைப்புக்காக ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக, 2011-2012 மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது). 9. ஜேசிபி, பொக்லைன் போன்ற கனரக ராட்சத இயந்திரங்களுக்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற வேண்டும் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இத்தனையும் நம்மூரில் அரசுத் துறை அதிகாரிகளின் இசைவோடு மீறப்படுகின்றன.

மணல், வெறும் மணல் மட்டும்தானா?

மணல் கொள்ளைக்கு மிக முக்கியமான அடிப்படை என்னவென்றால், நம் அரசிடமும் மக்களிடமும் ‘என்ன சாதாரண மண்தானே?’ என்று மணல் மீது இருக்கும் மோசமான பார்வையும் மதிப்பீடுமே. இது பெரிய தவறு. ஒரு கன அடி மணல் தயாராவதற்கு நூறாண்டுகளுக்கு மேலாகும் என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள். பிரிட்டிஷ் காலத்தில் ஆற்றுக்கரையிலிருந்து 100 அடி இடைவெளியில் கிணறுகள்கூட வெட்ட அனுமதி கிடையாது. மணல் ஒரு அரிய சொத்து என்பதே காரணம். மேலும், மணல் குவாரிகளால் ஆழமாக மணல் எடுக்கப்பட்டால், வெள்ளம் வரும் காலங்களில் நீர் தங்காமல் வெள்ளப்பெருக்கு அதிகமாகும்; அதேபோல், நீண்ட காலத்துக்கு ஆற்றில் தண்ணீர் தங்காமல் சீக்கிரமாக வடிந்துவிடும். நாம் இதன் இரு விளைவுகளையும் அனுபவிக்கிறோம். வெள்ளத்தையும் எதிர்கொள்கிறோம்; வறட்சியையும் எதிர்கொள்கிறோம். கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

அண்டை மாநிலங்களைப் பார்ப்போம்

கடந்த 2002 முதல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களில் மணல் அள்ளுவதற்குக் கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வளவு சீக்கிரம் ஆற்றில் யாரும் கை வைக்க முடியாது. குறிப்பாக, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி கிடையாது.

தமிழ்நாட்டின் காவிரி, பாலாறு நதிகளை விட ஆந்திரத்தின் கோதாவரி, கிருஷ்ணா ஆகியவை பெரிய நதிகள். அதேபோல, கேரளத்தின் பெரியாறு மற்றுமுள்ள ஆறுகள் தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளைக் காட்டிலும் பெரியவை. ஆனால், அங்கே ஆறுகள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை இங்கு நம்மிடம் இல்லை. கொடுமையின் உச்சம், இங்குள்ள ஆறுகளை நாசப்படுத்தி, மணலைச் சுரண்டி லாரி லாரியாக அங்கு அனுப்புவது. நம் சதையை நாமே அறுத்து விற்றுக் காசு சம்பாதிப்பதுபோலத்தான் இது. ஆனால், செய்கிறார்கள். காரணம் என்ன? பணம். ஆம். தமிழகத்தில் மதுவில் புழங்கும் பணத்தின் மதிப்பு நமக்குத் தெரியும். டாஸ்மாக் கடைகளின் இந்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 29,672 கோடி. ஆனால், ஆற்று மணல் கொள்ளையில் புழங்கும் பணத்தின் மதிப்போ இதைவிடப் பல மடங்கு அதிகம். 2003 04 முதலான 2012 13 வரையிலான அதிகாரபூர்வமாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மணல் எவ்வளவு தெரியுமா? 1.95 கோடி லோடுகள்! கற்பனைசெய்துபாருங்கள்… எவ்வளவு பணம் இதில் புழங்கும் என, அதிகாரபூர்வமாகவும் திருட்டுத் தனமாகவும்!

எங்கே தண்ணீர்?

ஏற்கெனவே பெரிய அளவில் நீர் வளம் இல்லாத மாநிலம் இது. இருக்கும் நீராதார வளங்களையும் அண்டை நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அப்படிக் கண்ணீர் விட்டு வாங்கும் தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் ஆற்று மணல் கொள்ளையர்களால் இழந்தோம் என்றால், எதிர்காலத்தில் தண்ணீருக்கு எங்கே போவது? குடிக்கவே தண்ணீர் இல்லாத ஊரில் விவசாயம் எப்படி நடக்கும்? விவசாயம் இல்லாத ஊரில் எதைத் தின்று உயிர் பிழைப்போம்?

நம் ஆறுகளைப் பாதுகாக்க மக்கள் கரம் கோத்து களம் இறங்க வேண்டிய கடைசித் தருணம் இது. இப்போதும் விட்டோம் என்றால், எப்போதும் இல்லை!

இரா. நல்லகண்ணு, சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர். தொடர்புக்கு: cpi.tamilnadu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்