என்ன நினைக்கிறது உலகம்? - ஒட்டுமொத்தப் பேரழிவு

By செய்திப்பிரிவு

சிரியாவில் நடந்துவருவதைப் பற்றி “ஒட்டுமொத்தப் பேரழிவு” என்று கூறியிருக்கிறார் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதி ப்ரெட் மெக்கர்க். அமெரிக்காவின் குர்திஷ் கூட்டாளிகளை வடகிழக்கு சிரியாவில் கைவிடுவது, துருக்கிப் படைகள் முன்னேறுவதற்கான சமிக்ஞை காட்டுவது போன்றவை குறித்து டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவு, அவரது நிர்வாகத்தினருக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்திருக்கும். மோசமான பின்விளைவுகள் அவற்றுக்கே உரிய வேகத்தில் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவை யாவும் பெரிதும் கணிக்கப்பட்டவையே.

முதலில் வருவது மனிதப் பேரழிவு: துருக்கியின் தாக்குதலால் சிரியாவிலிருந்து குடிமக்கள் 1.3 லட்சம் பேர் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். இரண்டாவதாக, அப்பாவிப் பொதுமக்கள் 9 பேரும், முக்கியமான குர்திஷ் அரசியல்வாதி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. மூன்றாவதாக, அய்ன் இஸ்ஸா முகாமுக்கு அருகே துருக்கிப் படைகள் குண்டுவீசியதில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 750 பேர் அந்த முகாமிலிருந்து தப்பி ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குர்திஷ்காரர்களால் நடத்தப்படும் சிரியன் ஜனநாயகப் படைகள் அமைப்புக்கும் நான்கு தசாப்தங்களாக உள்நாட்டுப் போருக்குக் காரணமாக இருக்கும் பிகேகே கட்சிக்கும் இடையே துருக்கிக்கு வித்தியாசம் காணத் தெரியவில்லை. நடுநிலையாக்கப்பட்ட பிரதேசம் ஒன்றை உருவாக்கி, அங்கே சிரியா அகதிகளை மறுகுடியேற்றம் செய்வதைத் தனது நோக்கமாக துருக்கி குறிப்பிடுகிறது.

ஆனால், முன்பு திட்டமிட்டதை மீறி மேலும் தெற்கிலும் மேற்கிலும் துருக்கி தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தற்போது கூறுகிறார். 1,000 அமெரிக்கத் துருப்புகள் சிரியாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள். “துருக்கி எல்லைப் பகுதியில் தீவிரமாக நடக்கும் சண்டையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது” என்று தனது ட்விட்டரில் பீற்றிக்கொண்டிருக்கிறார். என்னமோ, இந்தப் பிரச்சினை வெடித்ததற்குத் தான் காரணம் இல்லை என்பதுபோல.

பதவி விலகக் கோரும் வழக்கும், 2020 தேர்தலும் அமெரிக்க அதிபரின் நீண்ட நாள் ஆசையான சிரியாவிலிருந்து துருப்புகளை விலக்கிக்கொள்வது என்பதற்கு வித்திட்டிருக்கிறது. தப்பித்துச் சென்ற ஐஎஸ் தொடர்புடைய கைதிகளால் ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றிக் கேட்கும்போது, அவர் தனது தோளைச் சற்றே உயர்த்திக்கொண்டு, “அவர்களெல்லாம் ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லப் போகிறார்கள்” என்றார்.

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான வீரர்களை சிரியன் ஜனநாயகப் படைகள் அமைப்பு இழந்திருக்கிறது. ஐஎஸ் கைதிகளைச் சிறைவைக்கும் பொறுப்பும் அதனுடையதே. அவர்கள் மீதான அந்த அமைப்பின் பிடி ஏற்கெனவே பலவீனமானது; முகாம் என்பது ஒருபோதும் நீண்ட காலத் தீர்வாக இருந்தது இல்லை. தப்பித்தவர்களால் ஐரோப்பாவுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்க ஐரோப்பா ஏதும் செய்யவில்லை. ஐஎஸ்ஸின் மறுஎழுச்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே என்று அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் எச்சரித்திருக்கிறார்.

ஐஎஸ் என்ற அச்சுறுத்தல்தான் துருக்கி தனது கொடூரமான தாக்குதலை நிறுத்த வேண்டியதற்கான மற்றுமொரு காரணம். அதேபோன்று, குர்திஷ் தலைவர்கள் ரஷ்யாவுடனும் சிரியாவின் பஷார், அல்-அஸ்ஸாதின் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சில நாட்களுக்கு முன்பு துருக்கி அதிபருக்கு ட்ரம்ப் விடுத்த ஆபத்தான தொலைபேசி அழைப்பின் விளைவுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஒட்டுமொத்தப் பேரழிவு? தற்போதுதான் தொடங்கியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்