பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு- பிபிஏ இல்லா பிளாஸ்டிக்கும் கேடுதான்!

By க.சே.ரமணி பிரபா தேவி

க.சே.ரமணி பிரபா தேவி

நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமல் வாரந்தோறும் 2,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை (ஒரு கிரெடிட் கார்டு அளவிலான பிளாஸ்டிக்கை) உட்கொள்கிறோம் என்றால் நம்புவீர்களா? ஆஸ்திரேலியாவின் நியூ காஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச ஆய்வில் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். நாம் பயன்படுத்தித் தூக்கிப்போடும் பிளாஸ்டிக், கடல் மற்றும் பிற நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் வழியாகவும், உப்பு மற்றும் மீன்கள் வழியாகவும் நம் உடலுக்குள் வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் விதவிதமான பிளாஸ்டிக்குகளில் சில நேரடியாகவே நமக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. பிளாஸ்டிக் என்ற ஒரு வார்த்தைக்குள் புழங்கிக்கொண்டிருக்கும் நாம், அதன் உலகுக்குள் நுழைந்தால் தலைசுற்றும் அளவுக்கு எண்ணற்ற வகைகள் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. லயோலா கல்லூரியின் வேதியியல் துறை முன்னாள் தலைவரும், ஐஐடியில் சிறப்பு வகுப்புகள் எடுப்பவருமான டி.பி.சங்கரன் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பிளாஸ்டிக் வகைகள்

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலை உருவாக்கும்போது கிடைக்கும் பெட்ரோ கெமிக்கல்களிலிருந்துதான் பெரும்பாலான கரிம வேதிப் பொருட்கள் பெறப்படுகின்றன. பெரும்பாலான பிளாஸ்டிக்குகளும் பெட்ரோ கெமிக்கல்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. பெட்ரோ கெமிக்கல்களிலிருந்து கிடைக்கும் ஸ்டைரின், எத்திலின், புரொப்பலீன் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட சூழலில் (வெப்பநிலை, அழுத்தம், வினையூக்கி) ஒன்றிணைக்கும்போது, பாலிஸ்டைரின், பாலி எத்திலின், பாலி புரொப்பலீன் ஆகிய பிளாஸ்டிக்குகள் கிடைக்கின்றன. இவை அதன் அடர்த்தி, பண்புநலன்களுக்கு உட்பட்டு இன்னும் வெவ்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

அதி அடர்த்தி பிளாஸ்டிக்: அதிக அடர்த்தி, உறுதியான தன்மை, உயர் வெப்பநிலையைத் தாங்கும் தன்மை, நெகிழ்வுத் தன்மையெல்லாம் அதி அடர்த்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு. உறுதியான நாற்காலிகள், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றில் இவ்வகை பிளாஸ்டிக்குகள் பயன்படுகின்றன.

குறை அடர்த்தி பிளாஸ்டிக்: பால் கவர்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் இதற்கான உதாரணங்கள்.
தெர்மோ பிளாஸ்டிக்: மறுசுழற்சி செய்ய முடிகிற பிளாஸ்டிக்கை தெர்மோ பிளாஸ்டிக் என்கிறார்கள். இதில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் வகைகளும்கூட உண்டு. இவ்வகை பிளாஸ்டிக்கை தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக் என்கிறார்கள்.
பிபிஏ பிளாஸ்டிக்கின் விபரீதம்

பிஸ்ஃபினால் ஏ பிளாஸ்டிக் (BPA) ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டுவரும் பிளாஸ்டிக் வகை. உணவுப்பொருட்களைக் கெடாமல் வைத்திருக்க பிளாஸ்டிக் பொருட்கள் மீது பிபிஏ பூசப்படுகிறது. இது பெரும்பாலும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், டிபன் கேரியர்கள், தண்ணீர் பாட்டில்களில் பயன்படுத்தப்படுகிறது.

உணவுகள் அடைக்கப்பட்டிருக்கும் டின்கள், கேன்களிலும்கூட பிபிஏ பூச்சு இருக்கும். பல் அறுவை சிகிச்சைகளிலும் பிபிஏ பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. நாட்பட்ட பிபிஏ பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகும் வேதிப்பொருட்கள் உடலுக்குத் தீங்குவிளைவிக்கும். மனிதர்களின் மூளையைப் பாதிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அதிகம். இந்த விபரீதத்தை உணர்ந்த பிறகு, பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் அறிமுகப்படுத்தப்பட்டது. பிபிஏ இல்லாத பிளாஸ்டிக்குகள் உடலுக்கு நல்லதா என்றொரு கேள்வியையே நாம் எழுப்ப முடியாத நிலைதான் இங்கே இருக்கிறது.

பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் என்ற பெயரில் சந்தையில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படும் பிளாஸ்டிக்குகள், அரசு வகுத்துள்ள தர நிர்ணயத்துக்குள்தான் தயாரிக்கப்படுகின்றனவா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படுத்தும் வழக்கம் நம்மிடையே இல்லை. போலவே, பொதுமக்களிடமும் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் எத்தனை சதவீத பிபிஏ பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அச்சிடுவதே இல்லை எனும் அளவில்தான் நம் சூழல் இருக்கிறது.

(தொடர்வோம்...)

- க.சே.ரமணி பிரபா தேவி,

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்