ஒருபுறம் வெள்ளம் மறுபுறம் வறட்சி: தத்தளிக்கும் பிஹார்!

By செய்திப்பிரிவு

ஜூரி

வெள்ளமும் வறட்சியும் சேர்ந்து வாட்டும் நிலைமை ஒன்றும் பிஹாருக்குப் புதிதல்ல. ஆனால், இயற்கைப் பேரிடருக்காக 2015-16-ல் ரூ.85 கோடி செலவிட்ட மாநில அரசு, 2016-17-ல் ரூ.1,569 கோடி செலவிட நேர்ந்தது. இப்போது வெள்ளத்தால் 130 பேருக்கும் மேல் பலியாகிவிட்டனர். 24 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது. 13 மாவட்டங்களில் பெருவெள்ளமும், 24 மாவட்டங்களில் வறட்சியும், 4 மாவட்டங்களில் வெள்ளமும் வறட்சியும் நிலவுவதால் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் இரண்டையும் ஒருங்கே மேற்கொள்ள வேண்டிய நிலை பிஹார் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நவாடா மாவட்டத்தில் கடுமையான வறட்சி. அதேவேளையில், நவாடா மாவட்டத்துக்கு 225 கிமீ தொலைவில் உள்ள தர்பாங்கா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களில் இடுப்பளவுக்கு நீர் புகுந்துவிட்டது. இந்த நீர் வடிய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை இதனால் நேரும் இடர்பாடுகளை மக்கள் தாங்கியாக வேண்டும். கடந்த ஆண்டு வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தர்பாங்கா, இப்போது வெள்ளம் பாதித்த மாவட்டமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலத்தில் இப்படி மாறி மாறி இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் மேலும் பின்னுக்கிழுக்கிறது.

பிஹார் மாநிலத்தை கங்கை நதி நடுவாகப் பிளந்துசெல்கிறது. இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளோ நேபாளத்திலிருந்து பிஹாரின் வடமாவட்டங்கள் வழியாகப் பாய்கின்றன. மத்திய இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகள் பிஹாரின் தெற்கு வழியாகப் பாய்கின்றன. காக்ரா, கண்டக், பாக்மதி, கோசி, கமலா, மகாநந்தா ஆகிய ஆறுகள் நேபாளத்திலிருந்து பாயும்போது தங்களுடைய நீர்ப்பாதையை அடிக்கடி மாற்றிக்கொள்கின்றன. இந்தப் பகுதியில் காடுகளை அழித்து விளைநிலங்களாக்குவதாலும் வீடுகளைக் கட்டுவதாலும் வெள்ளம் வரும்போது தடம் மாறுவதுடன் ஏராளமான அளவில் மண் அரிப்பையும் ஏற்படுத்துகிறது. இதைத் தீர்க்க அணைகள் கட்டச் சொல்லி நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், இதற்காகப் பணம் செலவழிக்கும் நிலையில் நேபாளம் இல்லை. எனவே, பிஹார் இந்த ஆறுகளின் வடிநிலமாகவும் பாயும் களமாகவும் மாறிவிட்டது. பிஹாரின் தெற்குச் சமவெளிப் பகுதியில் சிற்றாறுகள் ஓடியும் அதனால் அதிகப் பயன்பாடு கிடையாது. இப்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 1,102 மிமீ மழைதான் பெய்கிறது. பாசனக் கட்டுமானங்களும் குறைவு. இந்தப் பிரதேசம் முழுக்க மானாவாரிச் சாகுபடிதான். தென்மேற்குப் பருவமழை காலத்தில்தான் சாகுபடி. எனவே, மாநிலத்தில் சாகுபடிக்குத் தகுதியான நிலங்களில் 57% மட்டுமே பயிர் விளைச்சலைக் காண்கிறது. நிலையற்ற மழைப் பொழிவு, அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வறட்சி இவை காரணமாக பிஹாரில் பயிர்ச் சாகுபடிச் சுழற்சியும் கடுமையாகப் பாதிப்படைந்துவிடுகிறது. கங்கை, கோசி, கண்டக் நதிகளில் வண்டல்களை அகற்றினால்தான் பிஹார் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும்.

கோசி-மேச்சி ஆறுகளை இணைக்க ரூ.4,900 கோடி செலவு பிடிக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் தந்துவிட்டது. இத்திட்டம் மட்டும் நிறைவேறினால், பிஹாரின் வெள்ள-வறட்சி துயரங்களைப் பெருமளவு குறைத்துவிடலாம். பிஹாரின் வடக்குப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் அதேசமயத்தில் அராரியா, பூர்ணியா, கிஷன்கஞ்ச், கடிஹார் மாவட்டங்களில் 2,14,000 ஹெக்டேர் நிலங்களுக்கு இது நிரந்தரப் பாசன வசதியை ஏற்படுத்தும். ஆக, நதிநீர் இணைப்புத் திட்டங்களில் மத்திய-மாநில அரசு முனைப்புக் காட்டுவது மிகவும் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்