விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்: நடைமுறை என்ன?

By செய்திப்பிரிவு

செ.இளவேனில்

சிறு குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இத்திட்டத்துக்கு ‘பிரதான் மந்திரி கிஸான் மான் தன் யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான சிறு குறு விவசாயிகள் சேரலாம். 60 வயதுக்குப் பிறகு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 கிடைக்கும்.

இத்திட்டத்துக்காக, அடுத்துவரும் மூன்றாண்டு களுக்கு ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது (எல்.ஐ.சி).

பங்களிப்பு எவ்வளவு?

விவசாயிகள் இத்திட்டத்தில் இணையும் காலத்தில் அவர்களின் வயதுக்கேற்ப மாதாந்திரப் பங்களிப்பாக ரூ.55 முதல் ரூ.200 வரை 60 வயது வரையிலும் செலுத்த வேண்டும். அதாவது, 18 வயதில் இத்திட்டத்தில் சேர்பவர்கள் மாதாந்திரப் பங்களிப்பாக ரூ.55 செலுத்தினால் போதுமானது. 19 வயதினருக்கு ரூ.58, 20 வயதினருக்கு ரூ.61 என்று வயதுக்கேற்பப் பங்களிப்பும் அதிகரிக்கும். 40 வயதில் சேர்பவர்களுக்கான பங்களிப்பு ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் செலுத்தும் மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை அரசும் தன் பங்காகச் செலுத்தும். உதாரணத்துக்கு, 18 வயது விவசாயி செலுத்தும் மாதாந்திரப் பங்களிப்பு ரூ.55 என்றால் அரசு தன் பங்களிப்பாக ரூ.55 செலுத்தும். இரண்டு பங்களிப்புகளும் சேர்ந்து விவசாயியின் கணக்கில் ரூ.110 வரவு வைக்கப்படும். இதுவே 40 வயது விவசாயி செலுத்தும் ரூ.200 தொகைக்கு அரசின் பங்களிப்பான ரூ.200 சேர்ந்து மொத்தப் பங்களிப்பு ரூ.400 ஆகக் கணக்கில் கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் இணைந்த அதே தேதிக்குள் ஒவ்வொரு மாதமும் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் அல்லது அரையாண்டு என்ற அடிப்படையிலும் பங்களிப்பைச் செலுத்தலாம். அப்போதும் திட்டத்தில் இணைந்த அந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியது அவசியம். இத்தொகையை அவர்கள் பொதுச் சேவை மையங்களில் தம்மைப் பதிவுசெய்துகொண்டு நேரடியாகச் செலுத்தலாம் அல்லது பிரதம மந்திரி விவசாயிகள் ஊக்கத்தொகையிலிருந்து கழித்துக்கொள்ளுமாறு செய்யலாம்.

வங்கிக் கணக்கிலுள்ள தொகையிலிருந்து ஓய்வூதியத் திட்டத்துக்கான மாதாந்திரப் பங்களிப்பைத் தாமாகவே எடுத்துக்கொள்ளவும் விவசாயி ஒப்புதல் அளிக்கலாம். இவ்வாறு ஒப்புதல் அளிப்பதால் மாதாந்திரப் பங்களிப்பைச் செலுத்துவதற்காக மாதம்தோறும் பொதுச் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டியதைத் தவிர்க்கலாம்.

பெண்களும் விண்ணப்பிக்கலாம்

விவசாயியின் மனைவியும் இந்தத் திட்டத்தின் கீழ் தனிக் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில், இணைந்த விவசாயி 60 வயதுக்குள் மரணமடைய நேர்ந்தால், எஞ்சிய காலம் வரையிலும் அவருடைய மனைவி பங்களிப்பைத் தொடரலாம். தொடர விருப்பமில்லை என்றால், அதுவரையில் செலுத்தப்பட்ட பங்களிப்பு வட்டியுடன் திருப்பியளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இணைந்த விவசாயி ஓய்வூதியக் காலத்துக்கு முன்பே இறக்க நேர்ந்து, அவருக்கு மனைவி இல்லாதபட்சத்தில், அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவருக்குப் பங்களிப்புத் தொகையானது வட்டியுடன் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் விவசாயி இறக்க நேர்ந்தால், அவருடைய மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியத்தில் பாதித் தொகையான ரூ.1,500 குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஐந்தாண்டுகள் தொடர்ந்து இத்திட்டத்துக்கு மாதாந்திரப் பங்களிப்பைச் செலுத்திவரும் விவசாயி, இந்தத் திட்டத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக்கொள்ளவும் செய்யலாம். அவ்வாறு விலகிக்கொள்ளும் விவசாயிகளுக்கு அதுவரையில் அவர்கள் செலுத்திய முழுத் தொகையோடு அப்போதைய சேமிப்புக் கணக்குக்கான வட்டிவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டியும் சேர்த்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் திருப்பியளிக்கப்படும்.

விவசாயிகள் பங்களிப்பைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் வரையில் தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மூன்று தவணைகளைச் செலுத்தாதபட்சத்தில், பங்களிப்புத் தொகையுடன் தாமதக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும், செலுத்தப்படாத பங்களிப்புக்காக வட்டி எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. தொடர்ந்து பங்களிப்பைச் செலுத்திவராதபட்சத்தில் தாமதக் கட்டணத்தையும் வட்டியையும் செலுத்தி ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5 ஏக்கர் வரையில் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் அல்லது விவசாயம் செய்யும் விவசாயிகள் சிறு விவசாயிகள் என்றும், 2.5 ஏக்கர் வரையில் சொந்த நிலத்திலோ அல்லது குத்தகையாகவோ விவசாயம் செய்பவர்கள் குறு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். இந்த இரு பிரிவினரும் இத்திட்டத்தில் இணையலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்கள் அரசு ஈட்டுறுதிக் கழகத் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் திட்டம் ஆகியவற்றில் இணைந்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியாது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் ‘பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மான் தன் யோஜனா’, ‘பிரதான் மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா’ திட்டங்களில் இணைந்துள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர முடியாது. நிறுவனங்களின் பெயரில் விவசாய நிலங்களைக் கொண்டிருப்பவர்கள்; அரசமைப்புச் சட்ட பதவிகளை வகித்தவர்களும் வகிப்பவர்களும்; முன்னாள் இந்நாள் மத்திய, மாநில அமைச்சர்கள்; முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகரத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர முடியாது.

மத்திய, மாநில அரசுப் பணியாளர்களும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இத்திட்டத்தில் இணைய முடியாது. வருமான வரிகளைச் செலுத்துபவர்களும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், கட்டுமானக் கலைஞர்கள் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர முடியாது.
எப்படி விண்ணப்பிப்பது?
https://maandhan.in/auth/login என்ற இணையப் பக்கத்தில் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொதுச் சேவை மையத்தில் விண்ணப்பிக்க அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.30.

பொதுச் சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டையும் வங்கிக் கணக்கு விவரங்களும் அவசியம். பிறந்த நாள், மனைவி மற்றும் நியமனதாரர் விவரங்கள், முகவரி ஆகிய விவரங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். செல்போன் விவரங்களை அளிப்பது கட்டாயமல்ல; விருப்பத்தின்பாற்பட்டது.
பொதுச் சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும்போது, இத்திட்டத்தில் இணைவதற்காகச் செலுத்திய முதல் பங்களிப்புக்கான ரசீதுடன், ஓய்வூதியத் திட்டத்துக்கான அட்டையும் தனி வரிசை எண்ணும் விவசாயிக்கு வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

12 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்