சுபஸ்ரீயின் மரணத்துக்கு யாரெல்லாம் காரணம்?

By செய்திப்பிரிவு

த.ராஜன்

படிப்பில் சூட்டிகையான, நடனத்தில் வேட்கை கொண்ட, நட்பு வட்டாரங்களில் துடிப்புமிக்க, கனடா செல்லும் கனவோடு இருந்த தொழில்நுட்ப வல்லுநர் சுபஸ்ரீ (23) தன் வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டார். தன் ஒரே பிள்ளையை இழந்து நிற்கின்றனர் அவரது பெற்றோர். பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சுபஸ்ரீ, அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து மேலே விழவும் தடுமாறிச் சாய... அவர் மீது லாரி ஏறியிருக்கிறது.

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாகச் சாடியிருக்கிறது. இந்த உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம், பொதுமக்களின் உயிருக்கு ஒரு சதவீத மதிப்புகூட இல்லை என்று வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள உயர் நீதிமன்றம், சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், அந்த நிதியை இழப்புக்குக் காரணமானவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நாமும் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: இதையெல்லாம் தமிழகம் எதிர்கொள்வது முதன்முறையாகவா என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக பேனர் வைப்பதற்குத் தடைவிதித்த பிறகும் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும் வழக்குதொடுத்திருந்தார். நீதிமன்ற உத்தரவு மீறப்பட்ட சில இடங்களில் அவரே களத்தில் இறங்கினார். உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். அப்போதெல்லாம் அவரை வீணாகப் பிரச்சினையை உருவாக்குபவராகவும் விரும்பத்தகாதவராகவும் பார்த்தவர்களும்கூட உண்டு.
நீதிமன்ற உத்தரவை மீறியதில் தமிழக அரசுதான் முன்னிலை வகித்தது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்ட எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக ஊர்தோறும் சாலை நெடுகிலும் நூற்றுக்கணக்கில் பேனர் வைத்தது. நீதிமன்றத்தின் பரிந்துரையை, நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய அரசாங்கமே இப்படி நடந்துகொண்டது ஒரு மோசமான முன்னுதாரணம்.

பேனர்களின் நகரம்

ஒருகாலத்தில், பேனர்களின் நகரமாக இருந்தது நம் சென்னை மாநகரம். எங்கு பார்த்தாலும் பேனர் மயம். வார்தா புயலின்போதுதான் முன்யோசனைகள் எதுவும் இல்லாத விளம்பர பேனர்களால் விளையும் பிரச்சினையே முதன்முறையாக நமக்கு உறைத்தது. கடுமையான காற்றால் பேனர்கள் சரிந்து சாலைகளிலும் வீட்டுச் சுவர்களின் மீதும் வீழ்ந்து மோசமான விளைவுகளை எதிர்கொண்டோம். அதன் பிறகும்கூட நமக்குப் புத்தி வரவில்லை. அரசுக்கும் அது பற்றிய அக்கறை இல்லை. நமது அரசின் அலட்சியத்துக்கு இன்னொரு உதாரணமும் இருக்கிறது.

கோவை அவினாசி அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் இளைஞர் ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அந்தச் சம்பவத்தின்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. அப்போது பேனர்களை அகற்றச்சொல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. தடையை மீறிச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ‘ஹூ கில்டு ரகு?’ என்ற ஹேஷ்டேகில் சமூக வலைதளம் முழக்கமிட்டது.

ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது? எல்லா வாக்குறுதிகளும் பரிந்துரைகளும் ஆணைகளும் சட்டங்களும் காற்றில் பறந்தன. இப்போதும்கூட இதையொரு தீவிரப் பிரச்சினையாக நாம் அணுகவில்லை என்பதை நமது அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ‘இனி பேனர் வைக்கக் கூடாது’ என்பதை வலியுறுத்துவதற்குப் பதிலாக ‘அனுமதியின்றி வைக்கக் கூடாது’ என்கிறார்கள். நம் ஊரில் அனுமதி வாங்குவதும், அனுமதியின்றி பேனர் வைப்பதும் அவ்வளவு சிரமமான காரியமா என்ன?

யாரைக் காப்பாற்றுவதற்காக?

பேனரை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்திருப்பதையும், லாரி ஓட்டிவந்த ஓட்டுநர் மீது வழக்கு தொடர்ந்திருப்பதையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இதெல்லாம் யாரைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படுகிறது? எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் அதிக அளவிலான பேனர்கள் வைக்கப்படுவதே அரசியல் கட்சிகளுக்காகத்தானே? அரசியல்வாதிகளுக்காகத்தானே? மாநாட்டுக்குச் செல்லும்போது, காது குத்து வைபவத்துக்குச் செல்லும்போது சாலைகளையெல்லாம் ஆக்கிரமிக்கும் நூற்றுக்கணக்கான பேனர்கள் இதுவரை அவர்கள் கண்களில் பட்டதே இல்லையா?

அரசியல் கட்சிகளும் சரி, அதிகாரிகளும் சரி.. இந்தப் பிரச்சினையை வெறும் பேனர் விவகாரத்தோடு மட்டும் சுருக்கிவிடக் கூடாது. எந்நேரமும் இடிந்துவிழக் காத்திருக்கும் பேருந்து-ரயில் நிலையக் கூரைகள், குண்டும் குழியுமான சாலைகள், சரியாக வேலை செய்யாத டிராஃபிக் சிக்னல்கள், ஓட்டை உடைசலான பேருந்துகள், முறையான பாதுகாப்பு வசதிகளற்ற பொது இடங்கள் என்று தமிழக அரசு முறைப்படுத்த வேண்டிய பட்டியல் ஏராளம் இருக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளையெல்லாம் அரசியல் கட்சிகள் வேறொரு அக்கறையிலிருந்துதான் அணுக வேண்டியிருக்கிறது.

அயர்லாந்து கருக்கலைப்புச் சட்டத்திலிருந்த குளறுபடியால், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் சவிதா இறந்துபோனது உங்களுக்கு நினைவிருக்கும். தங்கள் இனத்தைச் சேராத, தங்கள் தேசத்தைச் சேராத ஒரு பெண்ணின் மரணத்தை ஒருமித்த உணர்வோடு அயர்லாந்து மக்கள் எதிர்கொண்டார்கள். அயர்லாந்து சட்டத்தால் நிகழ்ந்துவந்த கொடுமைகளுக்கு ஏதோ ஒருவகையில் தாங்களும் காரணம் என்று அவர்கள் உணர்ந்ததால்தான் பெரும் போராட்டம் ஒன்றை நிகழ்த்தி, சவிதாவுக்காக நீதி கேட்க முடிந்தது. இங்கே நாம் சுபஸ்ரீயின் மரணத்தை எப்படி எதிர்கொண்டிருக்கிறோம்?

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்