360: மோட்டார் வாகனத் துறையில் அபூர்வ விடுமுறைகள் 

By செய்திப்பிரிவு

மோட்டார் வாகனத் துறையில் உற்பத்தி அதிகம், விற்பனையில் மந்தம் என்ற நிலை காரணமாகச் சில பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஊதியத்துடன் கூடிய கூடுதல் விடுமுறையை அளித்தன. ஹீரோ மோட்டார் கார்ப். நிறுவனம், ஆகஸ்ட் 15 முதல் 18 வரையில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜாம்ஷெட்பூர் ஆலையில் சில பிரிவுகளுக்கு மட்டும் ஆகஸ்ட் 15 உடன் 16, 17 ஆகிய இரு நாட்களுக்குக் கூடுதல் விடுமுறை அளித்தது. சென்னையைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனமும் ஆகஸ்ட் 15 உடன் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. மோட்டார் வாகனத் துறையில் இப்படித் தொடர்ச்சியான விடுமுறைகள் அபூர்வம், துறையில் நடக்கும் வீழ்ச்சியே விடுமுறையாக வெளிப்படுகிறது என்கிறார்கள்.

கோண்டி மொழிக்கு ஒரு அகராதி

மற்றவர்களுக்குத்தான் அவர்கள் கோண்டுகள். அவர்கள் தங்களை கொய்த்தூர் என்றே அழைத்துக்கொள்கிறார்கள். கொய்த்தூர் என்றால் மக்கள் என்று அர்த்தம். ஒரு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட கோண்டுகள்தான், இந்தியாவில் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட பழங்குடிச் சமூகம். இதில் 30 லட்சம் பேர் கோண்டி மொழியை இன்னும் பேசுகிறார்கள். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் பரந்துவிரிந்திருக்கிறார்கள். எனினும், மத்திய - மாநில அரசுகளால் தங்கள் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக இவர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குமுறலுக்கிடையே ஒரு சிறிய ஆறுதலாக அவர்களுடைய மொழிக்கென்று முதன்முதலாக அகராதி உருவாக்கப்பட்டிருக்கிறது. கோண்டி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தன்னார்வலர்களின் பங்களிப்பைக் கொண்டு கன்னடப் பல்கலைக்கழகம் இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறது. முதற்கட்டமாக மூன்றாயிரத்துக்கும் மேற்கொண்ட சொற்களைக் கொண்டு இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார்கள்.

உள்ளூர் பொருளாதாரமும் இறைச்சி நுகர்வும்

2007-லிருந்து 2017 வரையிலான இறைச்சி நுகர்வு ஆண்டுக்கு 1.9% என்ற அளவில் அதிகரித்திருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம். இறைச்சிக்காக மனிதர்கள் அதிக அளவு விலங்குகளை வளர்ப்பதால், கற்காலத்திலிருந்து தற்போது வரையிலான கால அளவில் உலகின் பாலூட்டிகளின் உயிரிநிறை (பயோமாஸ்) நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுதவிர, கோழி இறைச்சி நுகர்வு பெருமளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தற்போது 2,300 கோடி கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பன்றி இறைச்சியை உண்பதும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, சீனா இதில் முன்னணியில் இருக்கிறது. உலகில் உண்ணப்படும் பன்றி இறைச்சியில் பாதியளவு சீனாவில் உண்ணப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பன்றி இறைச்சி உண்பதால் உடலளவிலும் சீனர்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 12 வயதுச் சிறுவர்கள் 1985-ல் இருந்ததைவிட தற்போது 9 செ.மீ. உயரம் அதிகமாக இருக்கிறார்களாம். இறைச்சி உண்பது அதிகரித்துக்கொண்டே இருந்தால், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்தாலும் பெரும்பாலான நாடுகளின் உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு இறைச்சி நுகர்வு பெரும் பங்களிப்பு செய்துவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்