பாலாறு படுகொலை!

By செய்திப்பிரிவு

இயற்கை வளங்கள் கொள்ளைபோவதன் குறியீடே பாலாற்றின் மீதான கொடுந்தாக்குதல்

வட இந்தியாவைப் போன்றே வளமான நதிகளைக் கொண்டது தமிழ்நாடு. சங்க இலக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியங்கள் வரை தமிழகத்தின் நீர்நிலை களின் வளமையைக் குறிப்பிடுகின்றன. அந்நதிகளின் சீரான ஓட்டமும் வேகமும் எப்போதும் தமிழகத்தை வளப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு யுகம் அழிந்துபோவது மாதிரி தற்போது இயற்கை வளங்கள் அழிந்துவருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் முக்கியமான நீர்நிலைகள் அனைத்துமே மாய்ந்துகொண்டிருக்கின்றன. பாலாறு அவற்றில் மிக முக்கியமானது.

தமிழகத்தின் காவிரி

வரலாற்றுச் சிறப்புமிக்க பாலாறு, கர்நாடகாவின் நந்தி குன்றுகளில் உற்பத்தியாகி, கர்நாடக மாநிலம் கோலார் வழியாக ஆந்திராவில் பாய்ந்து, தமிழ்நாட்டில் நீண்ட தூரங்களைக் கடந்து, இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டம் வயலூரில் கடலில் கலக்கிறது. இதில் கர்நாடகாவில் 93 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 33 கி.மீ. தூரமும், தமிழ்நாட்டில் 222 கி.மீ. தூரமும் தன் பயணத்தைத் தொடர்கிறது. தமிழ்நாட்டின் காவிரி என்று இதை அழைக்கலாம். இன்று பல காரணங்களால், இந்த ஆறு மெல்ல அழிந்துவருகிறது. முதல் காரணம், மணல் கொள்ளை. தோல் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் இரண்டாவது காரணம்.

ஆந்திராவில் நுழையும் பாலாற்றை அணை கட்டித் தடுக்க, அம்மாநில அரசு பல முறை முயற்சித்தது. குறிப்பாக, ஆந்திராவின் குப்பத்தை அடுத்த கணேசபுரத்தில் தடுப்பணை கட்ட கடும் முயற்சி எடுத்துவருகிறது. தமிழ்நாட்டின் உறுதியான எதிர்ப்பு காரணமாகத் தற்போது இத்திட்டம் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு தமிழ்நாட்டில் மட்டுமே அதிக தூரம் பயணம் செய்கிறது. குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்கள். ஆகவே, அதைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் இந்தப் பகுதிகளைச் சார்ந்த தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இந்தப் பாதுகாப்பு கடந்த 20 ஆண்டுகளாக மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

ஆந்திராவைத் தொட்டுவரும் பாலாறு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, அணைக்கட்டு, செய்யாறு, செங்கல்பட்டு வழியாகப் பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது. இவை அனைத்துமே பாலாற்றின் படுகைகள். மேலும் செய்யாற்றில் ஏழு துணை நதிகள் சங்கமிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் படுகைகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக மழைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால், நீர் படர்ந்த பூமி இன்று நீரற்ற வெறுமை மணல் பிரதேசமாக மாறிவிட்டது. இந்த வெறுமைதான் மணல் கொள்ளையர்களுக்குச் சாதகமாக மாறியது. இதன் காரணமாக மேற்கண்ட பிரதேசங்களின் விவசாய நீர்ப்பாசனத்தின் ஆதாரமாக இருந்த பாலாறு, இன்று முற்றிலுமாக மரணித்துவிட்டது. இதற்கான காரணங்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.

சுரண்டப்படும் சொத்து

ஆறுகள் உருவாக்கும் கனிம வளமான மணல் என்பது இயற்கையின் அபூர்வ சொத்து. அதுதான் நதிக்குப் பலமாக அமைந்து நதியின் ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதை மக்கள் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். இதன் விளைவாக, மனிதர்கள் நதியின் மணல் வளத்தைச் சுரண்டுகிறார்கள். பாலாற்றைப் பொறுத்தவரை இந்த மணல் சுரண்டல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. 90-களில் தொடங்கிய இந்த மணற்கொள்ளையின் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் பாலாற்றில் நீர்வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

செயற்கை உருவாக்கிய சீரழிவு

மணல் கொள்ளையைப் பற்றி நாம் குறிப்பிடும் முன்பு, தோல் தொழிற்சாலைகளைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், பாலாற்றைப் பாழ்படுத்தியதில் வேலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. மணல் கொள்ளையர்களுக்கு முன்பே பாலாற்றை இந்தத் தொழிற்சாலைகள் தங்களின் கழிவுநீர் மூலம் பதம்பார்த்தன. 1950-களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் அது சார்ந்த தொழில்நுட்பமும் அதற்கான கண்காணிப்பு அமைப்பும் உருவாகவில்லை. அதேசமயம், இந்தத் தொழிற்சாலைகள் வெளியேற்றிய கழிவுநீரில் நறுமணப் பொருட்கள் மற்றும் பிற இயற்கை மூலிகைகள் தான் பெருமளவில் கலந்திருந்தன. இதனால் அன்றைய காலகட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் தோல் பதனிடுதலில் அபாயகரமான, நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட தொடங்கிய போதுதான் இந்தச் சிக்கலே ஆரம்பமானது.

அதுவரை இயற்கை மூலிகைகள் கலந்து வெளியேற்றப் பட்ட சுண்ணாம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் காரணமாக நீரின் செயலூக்கம் அதிகமாகிப் பாலாற்றின் போக்கே மாறியது; அதன் நிலைப்புத்தன்மையும் சீர்குலைந்தது. ஆற்றில் விடப்பட்ட கழிவுநீர் பூமிக்கடியில் உறைந்து அந்தப் படுகை முழுவதையும் விஷமாக்கியது. விளைவாக, மிக முக்கியப் படுகையான வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பிரதேசங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ச்சியாக, விவசாயம் நலிவடைந்தது. இதைத் தொடர்ந்து பாலாற்றைப் பாதுகாக்க வாணியம்பாடியைச் சேர்ந்த எம்.எம். பஷீர் களத்தில் இறங்கினார். அவரது முயற்சியால் அப்பகுதியில் ‘பாலாறு பாதுகாப்பு இயக்கம்’ உருவானது. இன்று பாலாறு பாயும் மாவட்டங்கள் முழுவதும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்கள் உருவாக அதுதான் காரணமாக அமைந்தது.

பல தொடர்ச்சியான போராட்டங்களை இந்த அமைப்பினர் நடத்தியிருக்கிறார்கள். பின்னர், வேலூர் மாவட்ட மக்கள் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப் பட்டு, அவர்களும் பல போராட்டங்களை நடத்தினார்கள். இறுதியில், உச்ச நீதிமன்றத்தில் இத்தொழிற்சாலை களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, தற்போது அது நிலுவையில் இருக்கிறது. மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் பாலாற்றைப் பாதுகாக்கக் கோரி போராட்டம் நடந்திருக்கிறது.

மணல் குவாரிகளின் பங்கு

பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுகிறது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட மூன்று கன மீட்டரைவிட அதிகமாக மணல் அள்ளப்படுவதால், நதியில் பாய்ந்து வரும் நீர் வற்றிவிடுகிறது. மேலும், பள்ளம் ஏற்பட்ட அந்த இடம் நிரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகலாம். இந்நிலையில், இந்தப் பகுதியைச் சார்ந்த களத்தூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். அந்த மக்களின் நியாயமான உணர்வை, வாழ்வாதாரம் சார்ந்த கொந்தளிப்பை அரசாங்கம் கவனத்தில் கொள்வது நல்லது.

நதியைப் பாழ்படுத்துதல், மணல் கொள்ளை குறித்த விழிப்புணர்வு இந்தப் பகுதி மக்களுக்கு இப்போதுதான் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. பல்லாண்டு காலமாக இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் தோல் தொழிற்சாலைகள் மற்றும் மணல் மாபியாக்களின் மூலதனமாக இருக்கிறது. இப்போதும் இதைத் தக்கவைத்துக்கொள்ள இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆக, தமிழகத்தின் இயற்கை வளம், நதிகள் ஆகியவற்றை உயிரோடு தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நம் கண் முன்னே பல இயற்கை வளங்களின் மரணத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்.

- இஜாஸ் அகமது,

சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: ijaz_ahmed@outlook.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்