மஞ்சப் பை, அலுமினியப் பெட்டி, பாட்டு ‘பொஸ்தகம்’

By கே.எஸ்.முகமத் ஷூஐப்

சிறு நகரங்களின் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் என்று மகளிர் வாடிக்கையாளர்கள் வளையவரும் மங்களகரமான கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு காதுகள் வைத்த மஞ்சள் பைகளைத் தந்த காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. திருமணம் உள்ளிட்ட சுபயோக சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், தாம்பூலப் புன்னகையுடன் மஞ்சள், குங்குமம், தேங்காப் பழம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்ட ‘மஞ்சப் பை’களுடன் மண்டபத்திலிருந்து வெளிவருவார்கள். பிறகு, அந்தப் பைகள் எண்ணிலடங்காப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும். இப்போதெல்லாம் மஞ்சப் பைகளின் இடத்தை பாலிதீன் பைகள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.

நாங்கள் சிறுவர்களாக இருந்த 70-களில் மஞ்சள் பை எங்கள் பாடப் புத்தகங்களைச் சுமந்து செல்லும் ஒரு வாகனமாகவே பயன்பட்டது. எங்கள் பகுதிகளில் ‘அங்கு விலாஸ்’ பையும், ஏ.வி. அண்ட் கோ ஜவுளிக்கடை பையும் பிரபலம். இந்தப் பைக்குள் புத்தகங்களை ‘அமுக்கி அமுக்கி’வைக்கும்போது புத்தகங்களின் ஓரங்கள் மடிந்து கசங்கிவிடும். என்றாலும், மஞ்சப் பையை விட்டால் எங்களுக்கு வேறு கதியும் இல்லை. கிராமப்புறப் பள்ளிக் குழந்தைகளின் அடையாளமாகவே மாறியிருந்தது மஞ்சப் பை. பலரது பைகள் அழுக்குப் பிடித்தும், பேனா மைக் கறை படிந்தும் இருக்கும். அதன் கைப்பிடிப் பகுதி, கைகளின் வியர்வை படிந்து மஞ்சள் நிறம் மங்கலாகி, பழுப்புக்கு மாறியிருக்கும். என்றாலும், யாரும் அதை விடுவதில்லை. மாணவர்களிடையே மஞ்சப் பைகளின் காலம் ஒருவாறு முடிவுக்கு வந்து, புத்தகங்களை அடுக்கிச் செல்ல அழகான அலுமினியப் பெட்டிகள் புழக்கத்துக்கு வந்தன. இந்த அலுமினியப் பெட்டி மூடியின் உட்புறமாக காக்கித் துணியில் ஒரு பை மாதிரி வைத்திருப்பார்கள். அதற்குள்தான் பேனா, பென்சில், ‘லப்பர்’, ஜியோமிட்ரி பாக்ஸ், கமர்கட், யானை பிஸ்கட் என்று சகல வஸ்துகளும் வைக்கப்பட்டிருக்கும்.

வாத்தியார் பாட்டு

அந்தப் பெட்டிகளில் பாடப் புத்தகங்களோடு பாட்டுப் புஸ்தகமும் ஒளிந்திருக்கும். எனது பெட்டியில் எப்போதும் நான்கு, ஐந்து பாட்டுப் புஸ்தகங்கள் கட்டாயமாக இருக்கும். எல்லோரிடமும் காட்டிப் பெருமைகொள்வேன். இது பொறுக்காத சக மாணவன் ஒருவன், எங்கள் ஆசிரியரிடம், “சார்... இவன் பெட்டியில சினிமா பாட்டுப் பொஸ்தகம் வெச்சுருக்கான் சார்” என்று போட்டுக் கொடுத்துவிட்டான். பின்னாளில் அவன் சமூக சேவகனாகிவிட்டது தனிக் கதை.

ஆசிரியரோ மிகவும் கண்டிப்பானவர். “ஏலே… அப்படியா? பெட்டியத் திறலே. இல்லேன்னா அடி பிரிச்சிருவேன்’’ என்று கட்டளையிட்டார். அவர் கையில் இருந்த பிரம்பு பயங்கர விரோதத்துடன் என்னை முறைத்துக்கொண்டிருந்தது. பூஞ்சை உடம்புக்காரனான நான் பிரம்படிக்குப் பயந்து, வேறு வழியில்லாமல் பெட்டியைத் திறக்க வேண்டியதாயிற்று. எம்.ஜி.ஆர். நடித்து அப்போது வெளியாகியிருந்த ‘என் அண்ணன்’ படத்தின் பாட்டுப் புஸ்தகம் பெட்டிக்குள் சுகமாகச் சயனித்திருந்தது. எங்கள் வாத்தியாரைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தார், பாட்டுப் புஸ்தகத்தின் அட்டையில் இருந்த ‘வாத்தியார்’!

முறைத்த முகத்துடன் அதைக் கையில் எடுத்த ஆசிரியர், முன்னும் பின்னும் அதைப் பார்த்தார். பிறகு, வகுப்பறையின் வாசலை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டார். வகுப்பறையில் சிலேட்டுக் குச்சி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது. ஆசிரியர் வேறு அடிக்கடி தொண்டையைக் கனைத்துக்கொண்டார். ‘இன்னிக்கு அடை மழைதான்’என்று பயத்தில் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தேன்.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…’என்று வாய்விட்டுப் பாட ஆரம்பித்தாரே பார்க்கலாம். என்னவோ ஏதோ என்று கலங்கியிருந்த மாணவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள். பாடும்போது அவர் குரலில் இருந்த கடுமை குறைந்ததுபோல் இருந்தது. எனினும், அவர் குரல் விசித்திரமாகத்தான் இருந்தது. நான் சிரிப்பதா, அமைதி காப்பதா என்று சிவாஜி கணக்கில் மருகியபடி நின்றுகொண்டிருந்தேன். ஆசிரியர் சட்டென்று பாட்டை நிறுத்தி, குரலைக் கடுமையாக்கி, “ஏலே… படிக்கிற பயலுவ பெட்டியில பாட்டுப் பொஸ்தகம் இருக்கக் கூடாது. இனி, இதெல்லாம் கொண்டுவரக் கூடாது... சரியா?” என்று என்னிடமே அதைத் திருப்பிக் கொடுத்தார். போட்டுக்கொடுத்த பையனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.

இன்று தங்களைவிட அதிக எடை கொண்ட பைகளைத் தோளில் சுமந்து செல்லும் பள்ளிக் குழந்தைகளைப் பார்க்கும்போது, மஞ்சப் பை காலம் மனதில் நிழலாடும். கூடவே, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ பாடல் வரிகளை உதடுகள் தாமாகவே முணுமுணுக்க ஆரம்பிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

44 secs ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்