வழிப்போக்கர்களுக்குத்தான் சாகித்ய அகாடமி விருதா?

By லட்சுமி மணிவண்ணன்

இப்போதெல்லாம் மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து வழிப்போக்கர்களின் கரங்களையும் விருதுகள் சென்றடைகின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு புகார்களை அவர் மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாடமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மைகுறித்தது. மற்றொன்று, குறைந்தபட்சம் இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறைகுறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.

படைப்பில் மோசம் என்பது, அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை முக்கியமானது. இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும்போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகிவருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களைப் பெரும்பாலும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.

மணல் குவாரி மனோபாவம்

பொதுவாகவே, நோபல் பரிசு உட்பட உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்துவருகிறார்கள். எனவே, பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞருக்குரிய, எழுத்தாளருக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.

இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்ச நிலை. பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விழைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.

பக்கத்து வீட்டுக்காரர்களின் திறமை

பலவீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்காக அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து இவை சில சமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்துக்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச்சேர்கின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள். பெறுமதிகளை அவர் கள் பெற்ற பிறகு, சில சமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, “உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா?” எனக் கேட்கிறார்கள்!

சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்திவிட முடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக்கூடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்று அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கல்வியாளர்களும் சாதியவாதிகளும்

தங்களிடம் உள்ள அதிகாரத்தைச் சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்துக்காக மட்டுமே பெருமக்களைக் குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும். நமது அமைப்புகள் உள்ளடக்கக் குறைபாடுகளால் நிரப்பப்பட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை, குறைகூறி ஏன் இழக்க வேண்டும்?

நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால், கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்ய வேண்டும். தயவு தாட்சண்யம் ஏதுமின்றித் தனிநபர்களிடம் முடங்காமல், அடிப்படையான ஜனநாயகப் பண்புகளைப் பேண நிர்ப்பந்திக்க வேண்டும். சமகால கலை இலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனிநபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக் கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப் பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.

முற்போக்கு முகவர்கள்

சாகித்ய அகாடமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாகத் தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்டரீதியாகப் பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில், கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளைச் சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்கப் பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும்கொண்டிருந்த தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவல நிலை இது.

ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. பண்பாட்டு நிறுவனங்கள் வரை அது ஊடுருவி யிருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவர், நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி, சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொதுமக்களிடம் தெளிய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.

- லக்ஷ்மி மணிவண்ணன், கவிஞர்,

தொடர்புக்கு: slatepublications@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

6 mins ago

க்ரைம்

41 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்