வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

By கே.என்.ராமசந்திரன்

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது.

“வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.

உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.

20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன.

30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன.

50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 80 வயதை எட்டியவர்களின் மனதில் சுய மதிப்பீடும் சுயாபிமானமும் உச்சத்தை எட்டுகின்றன. ‘இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை’என்ற பெருமிதம் உண்டாகிறது. அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. கடுமையான வியாதிகளும் வலி - வேதனைகளும்கூட அவர்களுடைய மனநிலையைக் குறைந்த அளவே குலைக்கின்றன.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பலருக்கு, ‘இனிமேல் அதிகாலையில் எழுந்து, அரக்கப்பரக்கக் காலக்கடன்களை முடித்துக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியமில்லை’என்ற எண்ணமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலைகூட ஓரளவுக்கு மேல் வருத்துவதில்லை.

புகைப்பட ஆய்வு

ஒரு கூட்டத்தின் ஒளிப்படத்தை இளைஞர்களிடம் காட்டியபோது, அவர்களின் முகங்கள் ஆர்வமில்லாமல் சற்றே சுருங்கின. அதே படத்தை முதியோர்களிடம் காட்டியபோது மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சியாக அதை உற்றுப்பார்த்தனர். வயதானவர்களுக்கு துக்கங்களும் கவலைகளும் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கைத் துணையை இழக்கும் இளவயதினரைப் போல முதிய வயதினர் துயரத்தில் மூழ்கி நிலைகுலைந்துபோவதில்லை.

தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அச்சமும் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வறுமையும் தனிமையும்கூட அவர்களை அச்சுறுத்துவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். முயன்றாலும் முடியாது என்ற இயலாமைகுறித்த முழுமையான புரிதலாலும், இனி கவலைப்பட்டு ஏதும் சரியாகிவிடாது என்ற பக்குவத்தாலும் அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு வந்துவிடுகிறார்கள். கவலைகள் குறைகின்றன. மகன், மகள் ஆகியோருக்கு இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளைக் குறைத்துவிடுகின்றன. தங்களுடைய குழந்தைகளில் சிலரின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், ஆரம்பத்தில் கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில், அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.

மன இறுக்கம் இல்லை

ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்கள் மன இறுக்கத்தில் வாழ்வதில்லை. இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தால் போதும் என்று நினைக்கும் முதியவர்கள், ‘நாளைய பொழுது நம்மிடம் இல்லை’என்று விட்டுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளின் முத்தம், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஸ்பரிசம் போன்றவை மூளையில் ஆக்சிடோசின் என்ற ரசாயனத்தின் சுரப்பை அதிகப்படுத்துவதால் மெய்ம்மறந்து ரசித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

உடலுக்கு ஏற்படும் மூப்பு வேறு, உணர்வுகளுக்கு ஏற்படும் மூப்பு வேறு. அவை இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயதாக வயதாக உடல் வலுவிழப்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம், சிறிய செயல்கள்கூட அவர்களுக்கு அதிகமாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. “நான் இளைஞனாக இருந்தபோது வரைந்த ஓவியத்தைவிட 70 வயதான பிறகு படைத்த ஓவியங்கள்தான் பன்மடங்குச் சிறப்பாக அமைந்தன” என்றார் ஒரு பிரபல ஓவியர். அதற்கு அவருடைய அனுபவமும் நீண்டகாலப் பயிற்சியும்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

துயரக் கணைகள் துளைப்பதில்லை

அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர், தம்மை நோக்கி வரும் வேகப் பந்துகளை வெகு சாமர்த்தியமாகத் திருப்பிவிடுவதைப் போல முதியவர்கள் தங்களை நோக்கி வரும் துயரக் கணைகளை எளிதாகத் திருப்பிவிடும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். பெற்றோருக்கு நடுத்தர வயதாக இருக்கும்போது பதின்ம வயதுள்ள குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள் சிறிது காலம் கழித்துக் குறைந்துவிடுகிறது. பெற்றோர், குழந்தைகள் என்று இரு தரப்பாருக்குமே வயது அதிகமாவதால் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் அதிகமாகிறது. முதுமைக் காலத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் நண்பராகவும் இருப்பது எளிதாகிவிடுகிறது.

பிள்ளைகளின் சிந்தனைகளையும் செயல்களையும் பற்றற்ற கண்ணோட்டத்திலும், பற்றுள்ள பார்வையுடனும் ஒரே நேரத்தில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. தன்னிடம் ஆலோசனை கேட்டால் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்காவிட்டால் கோபமோ வருத்தமோ படுவதில்லை.

அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோம் என்று பிள்ளை தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தாலே பெற்றோர் மனம் பூரித்துவிடுகிறது. குடும்ப விவகாரங்களில் முழுமையாகப் பங்கேற்பது அல்லது வெறும் பார்வையாளராக இருப்பது ஆகிய இரண்டுமே சாத்தியமாகிறது. நிதானம் சார்ந்த கிட்டப்பார்வையும் அனுபவம் சார்ந்த தொலைநோக்குப் பார்வையும் முதியவர்களுக்கு ஏக காலத்தில் வாய்க்கின்றன.

வயது முதிர முதிர தோல்விகள் மற்றும் இழப்புகளின் வெம்மை பெரியவர்களிடத்தில் கூர் இழந்துவிடுகிறது. அற்ப விஷயத்துக்கெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற நிதானம் வந்துவிடுகிறது. பலனை எதிர்பாராதே, கடமையைச் செய் என்றில்லாமல் - பலன் அதிகமா குறைவா என்று பார்த்துச் செய் என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. தனித்திறமைகளின் தரம் கூடுகிறது. கவிஞர்களுக்குச் சொல் வளமும் ஆளுமையும் மெருகேறுகின்றன. எழுத்தாளர்களின் படைப்புகளில் தீவிரத்தன்மை குறைந்து கருத்தாழமும் சொற்சிக்கனமும் கைவசப்படுகின்றன.

வயதால் கனியும் மருத்துவர்கள்

டாக்டர்கள் வயதாக வயதாக அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல் நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றைக் கணித்துவிடுகிறார்கள். நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்றுவிடுகிறார்கள். மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகார தோரணையையும் குறைத்துக்கொண்டு, சகாக்களின் சிறிய தவறுகளை மன்னித்து, தக்க ஆலோசனைகளைக் கூறத் தொடங்குகிறார்கள். பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன, பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.

வாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது. வயதாக வயதாகப் பல விஷயங்கள் மறந்துபோவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை. வயதாகிவிடுகிறபோது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவுகாட்ட வைக்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.

தமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனைகூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம்தான் நிதர்சனம். உடம்பு முடியவில்லையா, ஓய்வு எடு. நடக்க முடியவில்லையா, உட்காரு. உட்காரக்கூட முடியவில்லையா, படுத்துக்கொள். இதுதான் அவர்களுடைய கொள்கை. உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்தக் கடமைகளையெல்லாம் இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஓவியர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் முதுகிழவர்களையும் தொண்டு கிழவிகளையும் தேடிப் பிடித்துப் படமாக்குவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அந்த முகங்களில் அமைதியையும் கருணையையும் அழகையும் அவர்களால் எளிதில் அடையாளம் காண முடிந்திருக்கிறது.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்