அந்தரங்க உரிமை தீர்ப்பு: மக்களாட்சியின் புதிய அத்தியாயம்

ந்தரத்துக்கான உரிமை மீதான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றில் தனிநபர் சுதந்திரங்களின் பாதுகாப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு அசாதாரணமானது. ஆர்.சி. கூப்பர், கேசவானந்த பாரதி, மேனகா காந்தி ஆகிய வழக்குகளில் தொடங்கிய இதற்கான பயணம் இந்த தீர்ப்பின் மூலம் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் 9 நீதிபதிகள் இருந்தார்கள். தனிநபர் அந்தரங்கத்துக்கான உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு அடிப்படை உரிமைதான் என்று இந்த 9 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கியதுதான் இதில் மிகவும் முக்கியமானது. இதுபோல், அரசியல் சாசன அமர்வுகளில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் வெகு சொற்பம். இந்த அமர்வில் யாரும் மாற்றுக் கருத்து தெரிவிக்காதது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதுவரையில் பாதுகாக்கப்பட்டுவரும் தனிநபர் உரிமைகளின் மீதான அடிப்படை புரிதலை மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்தது. எனவே, இந்தப் பிரச்சினையை 'ஆதார்' சம்பந்தப்பட்டது என்பதையும் தாண்டி நாம் அலச வேண்டியுள்ளது.

ஆதாரைத் தாண்டியும் இரு விஷயங்கள்…

இந்தத் தீர்ப்பின் முக்கியப் பகுதியை எழுதிய நீதிபதி சந்திரசூட்டின் எழுத்துகளில் மிக முக்கியமான இரு விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 1. ஏ.டி.எம். ஜபல்பூர் தீர்ப்பைத் தவறு என்று அறிவித்தது, 2. தன்பாலின உறவாளர்களின் தனிமனித அந்தரங்க உரிமையை மீட்டது. நம் ஜனநாயகத்தின் கொள்கைகள், தனிநபர் உரிமைகள் அனைத்தையும் ஒரே நொடியில் அழித்தொழித்த நெருக்கடிநிலைப் பிரகடனம் இந்திய வரலாற்றில் பெரும் கரும் புள்ளி என்பதை நம்மால் மறக்க முடியாது! அரசியலமைப்புக் கொள்கை களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நீதித்துறையே அப்போது ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அடிபணிந்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.

தன் கொள்கைகளுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை விசாரணையே இன்றி அரசாங்கம் கைதுசெய்வதற்கு எதிரான ‘ஏ.டி.எம். ஜபல்பூர் எதிர் சிவகாந்த் சுக்லா’ வழக்கில், நெருக்கடிநிலைக் காலத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் மக்களுக்கென்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை ரத்துசெய்ய அரசாங்கத்தால் முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கின் வாதங்கள் நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி எச்.ஆர். கன்னா, “நெருக்கடிநிலை பிரகடனத்தில் இருக்கும்போது காவல் அதிகாரி ஒருவர் முன்பகையின் காரணமாக அப்பாவி ஒருவரைக் கைதுசெய்தால், ஏன் கொன்றுவிட்டால்கூட அந்த அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாதா?" என்று கேட்டார். "நான் இதுவரை செய்த வாதங்களின்படியே, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு நெருக்கடிநிலை காலம் முடியும் வரையில் எந்தத் தீர்வும் சட்டத்தில் இல்லை" என்று அரசுத் தரப்பின் மூத்த வழக்கறிஞர் அளித்த பதில் அனைவரையும் உறைய வைக்கக்கூடியது. விசித்திரம் என்னவென்றால் இவை அனைத்தையும் கேட்ட பிறகும் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பைத் தந்தது. இதில் நீதிபதி எச்.ஆர். கன்னா தனியாகப் பதிவு செய்த மாற்றுக்கருத்து இன்றளவும் போற்றப்படுகிறது. அந்தத் தீர்ப்பை வரலாற்றுக் களங்கம் என்றுதான் கருத வேண்டும். அதற்குப் பிந்தைய எந்த அரசியல் சாசன அமர்வும் அந்தத் தீர்ப்பின் முடிவுகளை மாற்றியமைக்கவில்லை-கடந்த வெள்ளிக் கிழமை வரையில். அந்தத் தீர்ப்பு, ஜனநாயகக் கருத்துகளுக்கு ஒவ்வாதது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இன்று நாம் சுவீகரித்துள்ள தனிநபர் உரிமைகளை அனுமதிக்காத அந்தத் தீர்ப்பு தொடரக் கூடாது என்றும் கூறி ‘ஏ.டி.எம். ஜபல்பூர் தீர்ப்பை’ நீதிபதி சந்திரசூட் செல்லாததாகத் தற்போதைய தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

திருநங்கைகளின் உரிமைகள்…

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்பாலின உறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நாஸ் பவுண்டேஷன் தீர்ப்பு வந்தது. இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவாளர் மற்றும் திருநங்கைகள் என்ற பிரிவுகள் இருப்பதையே முறையாக அங்கீகரிக்காமல் அவர்களின் அந்தரங்க உரிமைகளைப் பறிப்பதாகத் தீர்ப்பை வழங்கியது. மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கிய இந்தத் தீர்ப்புதான் இன்றும் சட்டமாக இருந்துவருகிறது. தனிநபர் உரிமைகளைப் பற்றி அலசிப் பார்த்த நீதிபதி சந்திரசூட், அனைத்து மனிதர்களுக்கும் தத்தமது பாலின, பாலியல் நிலைப்பாட்டை முடிவு செய்யும் உரிமை இருப்பதாகத் தெரிவித்துள்ள கருத்து ‘நாஸ் பவுண்டேஷன்’ தீர்ப்பின் அடிப்படை முடிவுகளையே தவறாக சுட்டிக்காட்டுகிறது.

அந்தரங்கத்தை விட்டுக்கொடுத்து…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு மேற்கூறிய கடந்தகாலப் பிழைகள் இரண்டையும் நீக்கியதோடு மட்டுமல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனிமனித உரிமைகள் தொடர்பான எண்ணிலடங்கா சாத்தியங்களையும் திறந்திருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் சமூகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இடையிலான உறவுகளின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிட்டன. பெரும்பாலும் நம் அந்தரங்கத்தின் ஒரு பகுதியை நாமாகவே விட்டுக்கொடுத்தே இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம்.

இவை சாதாரணமான செய்திகள் அல்ல. நாம் சிறுகச் சிறுகக் கொடுக்கும் செய்திகளை ஒரு திரட்டாக்கினால் நமது அரசியல் கருத்துகள், உணவு முறை முதற்கொண்டு அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். அரசாங்கம் மட்டுமல்ல, இது போன்ற சேவைகளை அளிக்கும் ஒரு தனியார் நிறுவனமும்கூட தொழில்நுட்பத்தின் மூலம் நமக்குத் தெரியாமலேயே இவற்றைப் பெற முடியும். இதுவரையில் நாம் கொண்டிருந்த தனிமனித உரிமைகளின் மீதான தத்துவார்த்தமான புரிதலைக் கொண்டு அணுகக்கூட முடியாத பிரச்சினைகள் இவை. வெறும் கடிதங்கள், தந்தி என்பது போய் நொடிக்கு நொடி செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் உலகம் இது. சிறு கசிவு என்றாலும் அதனால் வாழ்க்கை நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த விஷயத்தில் அனைவருக்கும் குறைந்தபட்சப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டிய அரசாங்கமே, இப்படிப்பட்ட உரிமையே அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்படவில்லை என்று வாதிட்ட சூழ்நிலையில்தான் இந்த ஏகமனதான தீர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கூட்டு வாழ்வின் பலன்களுக்காக ஒரு சமூகத்தின் தனிமனிதர்கள் அனைவரும் கூடி வருவதே அரசாங்கம் என்னும் கட்டமைப்பு. ஆனால், அதனைப் பாதுகாப்பதற்கேகூட அரசாங்கம் எனும் கட்டமைப்பு சில வரையறைகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். இது போன்ற வரையறைகளை மறந்த அரசாங்கங்கள் பற்றிய வரலாற்றைதான் நாம் நெருக்கடிநிலை காலத்தில் கண்டோம்.

உணவு, உடை, கலாச்சாரம், மதம் போன்ற அடையாள உரிமைகள் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் பெருகிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இது போன்ற வரையறைகளை வகுப்பதும், தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை மறுவரையறை செய்வதும் மிகவும் முக்கியம். இதன்படி பார்த்தால், தற்போதைய தீர்ப்பு மக்களாட்சிக்கு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

-எஸ்.எம். விவேக் ஆனந்த்,

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.

தொடர்புக்கு: smvivekanandh@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்