மத்திய அரசின் கைப்பாவையா சிபிஐ?

By செய்திப்பிரிவு

சிபிஐ மௌனம் காதைக் கிழிக்கிறது

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் அரசின் கட்டளைக்கேற்பவே பெரும்பாலும் செயல்படுகிறது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ); இதுவரை நடந்தவற்றையும் நடக்காமலிருப்பவற்றையும் பார்த்தாலே இது விளங்கும். முலாயம் சிங் அல்லது மாயாவதி மீதான ஊழல் வழக்குகளையே எடுத்துக்கொள்வோம். எப்போதெல்லாம் மத்திய அரசு அவர்கள்மீது அழுத்தம் தர நினைக்கிறதோ அப்போதெல்லாம் ‘ ‘வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக’ அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் உயிர் பெறும்; அவர்கள் ‘வழிக்கு வந்துவிட்டால்’ வழக்கும் உறங்க வைக்கப்படும். நினைவுபடுத்திப் பாருங்கள், அவர்கள் மீதான ஊழல் விசாரணைகள் தொடர்வதும் நிற்பதுமாகவே இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக விடுத்த எச்சரிக்கையைப் பார்த்தாலே இது புரியும். “நாவை அடக்குங்கள், உங்களுடைய ஜாதகம் என் கையில் இருக்கிறது”. இந்த எச்சரிக்கைக்கு என்ன பொருள்? இப்போதைய மத்திய அரசு, நீதித்துறைமீதுகூட இப்படிப்பட்ட நெருக்குதலைத் தருகிறது.

எஜமானர் சொல்படி…

லாலு பிரசாத் மீதான சமீபத்திய சிபிஐ பாய்ச்சலும் இதே ரகம்தான். திடீர் சோதனைக்குத் தேர்ந்தெடுத்த நேரத்தையும் விதத்தையும் கவனியுங்கள். லாலு பிரசாத்மீது வழக்கே இல்லை என்று நான் சொல்லவில்லை. இது பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த விவகாரம். சிபிஐ தன்னுடைய அரசியல் எஜமானர் கட்டளைப்படிதான் நடக்கிறது என்பதைத்தான் வலியுறுத்துகிறேன். பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், லாலுவுடனான அரசியல் கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசு விரும்புகிறது. இப்படிப் பல சம்பவங்கள்.

ஏர் இந்தியா நிறுவன விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் படேல் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் ஜிதேந்திர பார்கவா நிர்வாக இயக்குநராகவும் இருந்த காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அப்போது நடந்த ஊழல் குறித்து ஆறு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்ட பிறகே சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது. இப்போதும் வழக்கு பதிவான நேரத்தையும் சூழலையும் கவனியுங்கள். படேலை நிர்ப்பந்தப்படுத்தவா, அப்படியென்றால் எதற்காக? போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கிலும் இதே நடந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது வழக்கு விசாரணை சூடுபிடிப்பதும் பிறகு ஆறிப்போவதும் தொடர்ந்தது.

இப்படிப் பல உதாரணங்களை கூற முடியும். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் அறக்கட்டளைகளுக்கு சுரங்க ஒப்பந்ததாரர்கள் நன்கொடை கொடுத்தது தொடர்பாகக் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் வழக்கிலிருந்து அவரை விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ ஏன் மேல் முறையீடு செய்யவில்லை? அதன் மௌனம் காதைக் கிழிக்கிறது!

சுயாட்சி அதிகாரம் தேவை

ஊழலுக்கு எதிரான இயக்கம் அல்லது லோக்பாலுக்கு ஆதரவான இயக்கம் முன்வைத்த ஒரே கோரிக்கை, மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து சிபிஐ விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான். சிபிஐ அதிகாரிகளின் நியமனம், இடமாறுதல் அதிகாரம் மத்திய அரசின் கையில் இருக்கும் வரையில் அதனால் சுதந்திரமாக விசாரணைகளை நடத்த முடியாது, வழக்குகளைத் தொடர முடியாது.

சிபிஐ அதிகாரிகளிலேயே சிலர் ஊழல்வாதிகளாகவும் அரசு சொல்வதைக் கேட்டு நடக்கும் விசுவாசிகளாகவும் அமைந்துவிடுகின்றனர். சிபிஐ அமைப்பை சுயேச்சையான அமைப்புதான் நிர்வகிக்க வேண்டும். சிபிஐ, வருமான வரித்துறை (ஐடி), வருவாய்ப்புலனாய்வு இயக்குநரகம் (இடி) என்ற மூன்றையும் மத்திய அரசு, அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் கருவிகளாக்கிக்கொண்டுவிட்டது. பல சந்தர்ப்பங்களில் இவற்றை முறையாகச் செயல்பட விடாமல் தடுத்தே நெருக்குதலை ஏற்படுத்துகிறது.

(உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், அனுராதா ராமனிடம் கூறியதன் தொகுப்பு).

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் | பிரகாஷ் சிங், எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர் | நவ்நீத் ராஜன் வாசன் சிபிஐ அமைப்பிலும் பிறகு தேசியப் புலனாய்வு முகமையிலும் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியவர்



யாரைக் குற்றம்சாட்டுவது?

வ்வொரு சூழலுக்கும் ஏற்ப சில துறைகள் ஏற்படுத்தப்பட்டு நிறுவனங்களாகின்றன. சில வேளைகளில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்படுகின்றன, சில வேளைகளில் அரசியல் நோக்கத்துக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன. எப்படியிருந்தாலும் அவை நவீனப்படுத்தப்பட்டுத் தரம் உயர்த்தப்பட வேண்டும்

காலனியாட்சியின் சேய்

அரசியல் நோக்கத்துடன் இயற்றப்பட்டதுதான் ‘போலீஸ் சட்டம்-1861’. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனுக்காகவும் அதிகாரிகளின் கட்டளைகளுக்கேற்பச் செயல்படவும் ஒரு விசாரணை முகமை உருவாக்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரின்போது ஏராளமான செலவுகளை அரசு செய்தது. அரசில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும் அது பெரிய வாய்ப்பைத் தந்தது. அவர்களைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அன்றைய காவல்துறையும் நீதித்துறையும் உரிய அமைப்புடனும் அதிகாரங்களுடனும் இல்லை. எனவே, 1941-ல் ஒரு நிர்வாக ஆணை மூலம், ‘சிறப்புப் போலீஸ் அமைப்பு’ (எஸ்பிஇ), போருக்கான இலாக்காவில் தனியாக ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1946-ல் ‘டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டம்’ இயற்றப்பட்டது. எல்லா துறைகளில் நடைபெறும் ஊழல்கள், லஞ்சங்களையும் விசாரிக்க வழிசெய்யப்பட்டது. காலம் செல்லச்செல்ல அது விசாரிக்க வேண்டிய வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. 1963-ம் ஆண்டு எஸ்பிஇ என்று அழைக்கப்பட்ட அமைப்பு, ‘மத்திய புலனாய்வுத் துறை’ என்ற பெயரில் பணியாளர் நிர்வாகத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்போது அது பல்வேறுவித வழக்குகளையும் புலனாய்வு செய்யும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

செயலற்ற நிலையும் விமர்சனமும்

அவ்வப்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகிறது சிபிஐ. “இப்போதும்கூட செல்வாக்குள்ளவர்களுக்கு எதிரான விசாரணைகளில் ஏமாற்றம் தரும் வகையிலேயே செயல்படுகிறது சிபிஐ” என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஜே.எஸ். வர்மா 2009-ல் எழுதிய கட்டுரையில் வருத்தப்பட்டிருக்கிறார். 2013-ல் உச்ச நீதிமன்றமே அதை ‘கூண்டில் அடைக்கப்பட்ட கிளி’ என்று வர்ணித்தது. விமர்சனங்கள் எல்லாம் சரி, ஆனால் அதற்கு சிபிஐதான் காரணமா? வெவ்வேறு காலத்தில் நியமிக்கப்பட்ட வெவ்வேறு குழுக்கள், சிபிஐயில் செய்ய வேண்டிய அமைப்பு மாற்றங்கள் குறித்தும் இதர சீர்திருத்தங்கள் குறித்தும் அரசுக்குப் பல பரிந்துரைகளை அளித்துள்ளன.

‘சுயமான கடமைகள், செயல்பாட்டு வழிமுறைகளைக் கொண்ட மத்திய விசாரணை முகமை இல்லை என்ற குறையை, புதிய சட்டம் இயற்றி மத்திய அரசு நீக்க வேண்டும்’ என்று எல்.பி. சிங் குழு 1978-லேயே பரிந்துரைத்தது.

‘சிபிஐ அமைப்பு நம்பகமானது, பாரபட்சமில்லாமல் செயல்படுவது என்ற நம்பிக்கை ஏற்படத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று 2007-ல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 19-வது அறிக்கை அரசுக்குப் பரிந்துரைத்தது.

‘இப்போது செய்ய வேண்டியதெல்லாம் சட்டபூர்வ அதிகாரம், அடித்தளக் கட்டமைப்பு, நிதியாதாரம் ஆகியவற்றை அளித்து சிபிஐயை வலுப்படுத்துவதுதான்’ என்று 2008-ல் 24-வது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வலியுறுத்தியது.

இந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூட ஏற்றுச் செயல்படுத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

இதற்கு யாரைக் குற்றம்சாட்டுவது? மத்திய அரசை அல்லது சிபிஐயை? சட்டபூர்வ அதிகாரமோ, ஆள் பலமோ, நிதியாதாரமோ கொடுக்கப்படாத நிலையில் சிபிஐ அமைப்பைக் குற்றம்சாட்டுவது முறையல்ல; அந்த அமைப்புக்கு இயக்குநர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்களில் சிலர் அந்த அமைப்புக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தினார்கள் என்பது உண்மையே; அதற்குக் காரணம் அவர்களை அந்தப் பதவியில் நியமிப்பதற்காக தகுதிவாய்ந்தவர்களைத் தேர்வுசெய்யும் பட்டியலில் குளறுபடி செய்தார்கள், செல்வாக்குள்ள அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களை உள்ளே நுழைக்கச் சில விதிகளில் திருத்தங்களைச் செய்தார்கள். தவறு அமைப்புடையது அல்ல, அதை நிர்வகிக்க அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களுடையது.

இப்போதும்கூட ஏதாவது பரபரப்பான வழக்கு என்றால் சிபிஐ விசாரணை தேவை என்றுதான் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். சிபிஐ என்பது முதல் தரமான விசாரணை அமைப்பு; அரசு அதன் செயல்பாட்டில் தலையிடாமல் இருந்தால் அது நன்றாகச் செயல்படும்.

(பிரகாஷ் சிங், எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர்).

தனி மரியாதை கொண்ட அமைப்பு

சுயேச்சையான, விருப்பு-வெறுப்பற்ற, நேர்மையான விசாரணை அமைப்பு என்று கடந்த பல ஆண்டுகளில் பெயரெடுத்திருக்கிறது சிபிஐ. மக்கள், நீதித்துறை, ஊடகங்கள் என்று அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. உயர் இடத்து ஊழல் என்றால் அனைவருமே முன்வைக்கும் கோரிக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதுதான்.

மெச்சும்படியான சேவை

சிபிஐ அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள அகக் கட்டுப்பாடுகள் காரணமாகவே நேர்மையாகவும் தரமாகவும் விசாரணைகள் அமைகின்றன. சாட்சியங்களை சேகரிப்பது, அவற்றை விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்வது, சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தங்களுடைய கருத்துகளை விசாரணை அதிகாரிகள் பதிவு செய்வது, இந்த குற்றச்சாட்டு வழக்காடுவதற்கு ஏற்றதா, இல்லையா என்பதைத் தயக்கமின்றி கூறுவது ஆகிய காரணங்களால் இந்த அமைப்பின் மீது தனி மரியாதை ஏற்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் எந்த அமைப்பு அல்லது கட்சியைச் சேர்ந்தவர் என்று சிபிஐ பார்ப்பதே இல்லை.

சிபிஐ அதிகாரிகளின் நேர்மை, அனுபவம், தரம் ஆகியவற்றால்தான் அந்த அமைப்பு புகழ் பெற்றது. சிபிஐ அமைப்பில் சில காலம் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மூத்த கண்காணிப்புப் பணிகளில்தான் பிறகு ஈடுபடுத்தப்படுவார்கள். யாராவது நடுநிலை தவறி நடந்தாலோ, நேர்மையின்றிச் செயல்பட்டாலோ உடனே பரிகார நடவடிக்கைகளை அமைப்பே எடுத்து, குறைகளைக் களைந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அதன் அதிகாரிகள் சிலரின் தவறுகளால் அமைப்புக்குக் களங்கம் ஏற்பட்டதும் உண்மை.

ஜெயின் ஹவாலா வழக்கில் செயல்படாமல் தூங்குகிறது என்று 1990-களில் அதன்மீது கூறப்பட்டதுதான் முதல் பெரிய குற்றச்சாட்டு. இதையடுத்து பொதுநலன் வழக்கின் பேரில் உச்ச நீதிமன்றமே விசாரணையைத் தனது மேற்பார்வையில் நடத்தியதுடன் எந்தெந்த அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் வரையறுத்தது. இதை ‘விநீத் நாராயண் வழக்கு’ என்றே பின்னாளில் அழைத்தனர். விசாரணை அதிகாரிக்கு (இயக்குநர்) 2 ஆண்டுகள் பணிக்காலம் என்றுகூட உச்ச நீதிமன்றம் விதித்தது. பிறகு இதுவே டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தில் திருத்தங்களாகச் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு லோக்பால் – லோக்ஆயுக்தா சட்டத்திலும் 2013-ல் திருத்தப்பட்டது. சிபிஐ சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் இவற்றின் நோக்கம்.

ஆனால், இந்த ஏற்பாடுகள் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறின. சமீபத்தில் பதவிக்கு வந்த இயக்குநர்கள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை. இந்த அமைப்பு, தான் செல்ல வேண்டிய திசையைத் தவறவிட்டது. கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்ற அவப் பெயரை ஏற்க நேரிட்டது. ஊழல் செய்தவர்கள்மீது வழக்கு தொடுப்பது முறையாக நடக்கவில்லை. ஊழல் புகார்களின் பேரில் இதில் இயக்குநர்களாக இருந்த இருவரே விசாரணைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

மீண்டும் பழைய நிலைக்கு

சில அதிகாரிகள் சிறிது காலத்துக்கு இதைத் தவறாக வழிநடத்தினார்கள் என்பதற்காக இதன் நெடிய வரலாற்றைப் புறக்கணித்துவிடக் கூடாது. நேர்மையான வழிமுறைகளையும் சட்டப்படியான செயல்களையும் உறுதி செய்து மீண்டும் பழைய நிலைக்கு இதை மீட்டுவிடலாம். எந்தவித அச்சுறுத்தலுக்கும் செல்வாக்குக்கும் நெகிழ்ந்துவிடாது சிபிஐ என்ற நிலையை இப்போதைய அதிகாரிகள் உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்பு சுயேச்சையாகவும் வலிமையாகவும் செயல்பட இதன் இயக்குநர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் தகுதி, நேர்மையின் அடிப்படையில் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இயக்குநருக்குப் பதவிக்காலம் உயர்த்தப்பட வேண்டும். நிதி வசதிகளும் நிர்வாக அதிகாரங்களும் அதிகப்படுத்தப்பட வேண்டும். கடுமையான உழைப்பு, பாரபட்சமின்மை, நேர்மை என்ற தனது லட்சியங்களின்படி சிபிஐ செயல்பட்டாக வேண்டும்.

(நவ்நீத் ராஜன் வாசன் சிபிஐ அமைப்பிலும் பிறகு தேசியப் புலனாய்வு முகமையிலும் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியவர்)

-© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத்தமிழில்: சாரி. ஓவியங்கள்: முத்து

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

29 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

35 mins ago

ஆன்மிகம்

45 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்