இலங்கையில் தேய்கின்றனவா மனித உரிமை இயக்கங்கள்?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த 2009 முதல், போரின்போதும் அதற்கு முன்னரும் நடந்த போர்க்குற்ற மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான தகவல்களை சர்வதேசச் செயல்பாட்டாளர்கள் பட்டியலிட்டுவருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற முடியாத இப்போதைய இன்னல்களுடன் ஒப்பிடுகையில், மனித உரிமை மீறல் பற்றிய பிரச்சாரங்கள் பொருத்தமற்றவை என்ற எண்ணம்கூட ஏற்பட்டுவிடுகிறது.

இலங்கையில் அரசோ, மற்றவர்களோ மனித உரிமைகளை மீறும் செயல் எதிலும் ஈடுபட்டுவிடவில்லை என்பதல்ல இதன் பொருள். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும்கூட இலங்கையில் நடந்த கணக்கற்ற மனித உரிமை மீறல் செயல்கள் பற்றிய பதிவுகள் கிடைக்கின்றன. இலங்கையில் ஒரு காலத்தில் மனித உரிமைகள் இயக்கம் மிகுந்த உயிர்ப்புடன் இருந்தது. இப்போது சர்வதேசச் செயல்பாட்டாளர்களின் குறுக்கீடுகள் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று ஐயுற நேர்கிறது.

இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே இதுவரை சாதித்தது என்ன? மனித உரிமைகள் குழு அளித்த அறிக்கைகள், அதை எதிர்த்து இலங்கை அரசு அளித்த மறுப்பு அறிக்கைகள், இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவு அமைப்புகள் நடத்திய அறிக்கைப் போர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்தான் இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!

இந்தப் போர்களால் மனித உரிமைகளும் காக்கப்படவில்லை, மக்களுக்கும் பெரிய நிவாரணம் கிடைத்துவிடவில்லை. உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் இலங்கை அரசு மிகமிக மந்தமாகச் செயல்படுகிறது. ராணுவம் கைப்பற்றிய நிலங்களை (காணி) மக்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதும் அப்படியே; உறவினர்களை இழந்தவர்களும், நிலங்களை இழந்தவர்களும் பொருளாதாரரீதியாக அடைந்துவரும் இன்னல்கள்மீது யாரும் கவனம் செலுத்தவில்லை. பெண்களின் உரிமைகள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், வட பகுதி முஸ்லிம்கள் ஆகியோரின் பிரச்சினைகளை மனித உரிமை ஆர்வலர்கள் யாரும் விரிவாகப் பேசுவதில்லை.

பாதை விலகிய இயக்கம்

இலங்கையில் மனித உரிமைகள் இயக்கம் எப்போதும் இப்படி இருந்ததில்லை. அதன் தொடக்க காலத்தில் நன்கு செயல்பட்டது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற சிங்கள இடதுசாரி இயக்கத்தை 1971-ல் அரசு மூர்க்கத்தனமாக அடக்கியபோது, கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமைகள் இயக்கம் வழக்குகளை நடத்தியது. சில ஆண்டுகள் கழித்து 1979-ல் பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டதுடன் நெருக்கடி நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான உறுப்பினர்களைக்கொண்டிருந்த ‘இனங்களுக்கிடையில் சமத்துவம் சமூக நீதிக்கான இயக்கம்’ என்ற அமைப்பு தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியது. ஆயுதம் ஏந்திய தமிழர் அமைப்புகளுக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட்ட தொடக்க காலம் அது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது 1980-ல் சில தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. அந்த வேலை நிறுத்தத்தை ஜெயவர்த்தனே அரசு கடுமையாக ஒடுக்கியது. ஜனநாயகத்தின் மீதான சர்வாதிகாரத் தாக்குதல்களை எதிர்க்க ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கம் தொடங்கப்பட்டது.

1980-களின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஆயுதப் போர் நடந்தபோது, ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை அரசு, ஆயுதமேந்திய தமிழர் இயக்கங்கள், இந்திய அமைதி காப்புப் படை என்ற மூன்று தரப்பினரின் செயல்பாடுகளையும் அந்தச் சங்கம் கண்காணித்தது. தமிழ்ச் சமூகத்தைப் பாதித்த மோசமான அரசியல் நடவடிக்கைகளையும் அந்தச் சங்கம் ஆராய்ந்தது. இந்த அமைப்புகள் அரசின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, மக்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்புகளைக் குறைக்க முற்பட்டன. தங்களுடைய பணிகளுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டின. இந்த இயக்கத்தின் தன்னார்வச் செயல்பாட்டாளர்களை இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் இயக்கமும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒடுக்க முற்பட்டன. இதனால் இந்த அமைப்புகள் செயல்படுவதற்கான ஜனநாயகத் தளம் குறுகியது. அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலான போர், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. கொழும்பிலிருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடைகள் அதிகம் கிடைக்கத் தொடங்கின. இதையடுத்தே, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கக் கோரியும் மோதல்களை நிறுத்தக் கோரியும் சர்வதேச அரங்குகளில் முறையிடும் வழக்கம் தொடங்கியது.

கடந்த பத்தாண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய போரும், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியும் முடிவுக்கு வந்தன. போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கை, மேற்கத்திய நாடுகளின் நலன் சார்ந்து சற்றே பாதை விலகியது. இந்த விவகாரத்தைச் சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்வதில்தான் சர்வதேச மனித உரிமைகள் சமூகம், தேசிய தன்னார்வத் தொண்டர்கள், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் அக்கறை காட்டினர், போருக்குப் பிறகு இரு இனங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படக்கூடிய அரசியல் களத்தின் மீது யாரும் அக்கறை காட்டவேயில்லை.

இப்போதைய தேவை

இடதுசாரிக் கண்ணோட்டத்தில் செயல்பட்ட முந்தைய மனித உரிமைகள் இயக்கம் சர்வதேச ஒற்றுமைக்கு மதிப்புக் கொடுத்தது. பாலஸ்தீனத்தில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தது இஸ்ரேலை மட்டுமல்ல, அதற்குத் துணை நின்ற ஏகாதிபத்தியத்தையும் சேர்த்தே கண்டித்தது. இப்போதைய பிரச்சாரங்கள் மேற்கத்திய கொடையாளர்களின் நன்கொடைகளை நம்பி நடப்பவை. விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்துக் கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் இலங்கை அரசின் போர்க் குற்றம் பற்றி மட்டும் விசாரிக்கக் கோரும் தமிழ்த் தேசியவாதிகளைக் கூச்சமின்றி சேர்த்துக்கொள்கின்றனர் இப்போதைய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். மனித உரிமைக் கோரிக்கைகளும் தமிழ்த் தேசிய பிரச்சாரங்களும் ஒரு புள்ளியில் இணையும்போது, சிங்கள பெளத்த பேரினவாத தேசியவாதிகளின் கோபத்துக்கு நெய் வார்ப்பதைப் போலாகிறது.

இலங்கை இப்போது வரலாற்றுப் பிரச்சினையில் மூழ்கியிருக்கிறது. அது அடக்குமுறையைக் கையாளும் ராணுவமயமாக இருக்கலாம், சிங்களப் பேரின நலனைக் காக்கும் அமைப்புகளாக இருக்கலாம், கொழும்பு நகரிலேயே நாட்டின் எல்லா அதிகாரங்களும் குவிக்கப்படுவதாகவும் இருக்கலாம். அரசைச் சீர்திருத்த வேண்டும் என்றால், அந்நாட்டு மக்களால்தான் அது மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, சர்வதேச அரங்குகளால் அல்ல. அதற்கு அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் இயக்கம் தேவை. ராஜபக்ச அரசைத் தூக்கி எறிவதில் இலங்கையின் எல்லா சமூகங்களும் கை கோத்ததைப்போலச் செயல்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச அரங்கில் இலங்கையை அம்பலப்படுத்துவதன் மூலம், உள்நாட்டுக்குள் அரசு மீதான நம்பகத்தன்மை போய்விடும். அதன் பிறகு மனித உரிமைகள் இயக்கத்துக்குக்கூடப் புத்துணர்ச்சி அளிக்க முடியாமல் போகும். பரந்துபட்ட சமூக நீதிக்கான இயக்கம்தான் இப்போதைய தேவை. போருக்குப் பிறகு இலங்கை சந்தித்துவரும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க புதிய அரசியல் சிந்தனையும் முற்போக்கு இயக்கங்களின் நட்புறவும்தான் அவசியம்.

அகிலன் கதிர்காமர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பொருளியல் அறிஞர்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்