கருணாநிதி ராஜதந்திரி என்பது முலாயமை பார்க்கையில் புரிகிறதா?

By கே.கே.மகேஷ்

உபி (உத்தரப் பிரதேசம்) விவகாரத்தைத் தமிழகத்தில் அதிகம் கவனித்துக்கொண்டிருப்பவர்கள் உ.பி.க்கள்தான் (உடன்பிறப்புகள்). இத்தனை நாட்கள் ஸ்டாலினிடம் பதவியைப் பகிர்ந்துகொள்ளாததற்காக கருணாநிதியைத் திட்டிக்கொண்டிருந்தவர்கள்கூட இப்போது "ஓஹோ, இதுதான் கதையா?" என்று இப்போது கருணாநிதியை மலைப்பாகப் பார்க்கிறார்கள். மகனாகவே இருந்தாலும் தன்னைக் காட்டிலும் அதிக அதிகாரத்தைக் கொடுத்து விட்டால், நிலைமை பின்னாளில் என்னாகும் என்பதைப் பரிசோதித்துப் பார்க்காமலேயே உணர்ந்து வைத்திருக் கிறாரே கருணாநிதி!

அகிலேஷ் யாதவ் 1.7.1973-ல் பிறந்தவர். இப்போதைய வயது 43. முதல்வரானபோது இன்னும் அவர் இளையவர். அப்போது வயது 38. அரசியலுக்கு அறிமுகமானது 27 வயதில். நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினரானார். 2012 மார்ச்சில் முதல்வரான அவர், இரு மாதங்கள் கழித்துதான் சட்டப்பேரவை உறுப்பினராகவே ஆனார். ஆனால், அகிலேஷின் இந்த மேஜிக்குகளை எல்லாம் பின்னின்று நிகழ்த்தியவர் அவருடைய அப்பா முலாயம் சிங் யாதவ். கடந்த முறை சமாஜ்வாதி கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றபோது, முலாயம் சிங் யாதவ்தான் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். அதிரடியாக மகனை முதல்வராக்கி எல்லோரையும் வியக்கவைத்தார் முலாயம். அப்படியொரு பெருந்தன்மை! கைக்கு அடக்கமான பிள்ளை, கை மீறிப் போகாது என்ற நம்பிக்கை வேறு!

ஆனால், அதிகாரமும் அதன் உபவஸ்தான ஆதரவு வட்டமும் கிடைத்த பிறகு, அப்பாவின் கெடுபிடிகளையும், தலையீடுகளையும் விரும்பாதவரானார் அகிலேஷ். ஆரம்பத்தில் அப்பா, சித்தப்பாவின் ஆதரவாளர்களை வீழ்த்தியவர், இப்போது கடைசியாகக் கட்சியின் தேசியத் தலைவர் பதவியையும் தந்தையிடமிருந்து பறித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அகிலேஷ் யாதவைவிட 20 வருடமும், 4 மாதமும் மூத்தவர் (பிறந்த தேதி 1.3.1953). 14 வயதிலேயே கோபாலபுரம் பகுதி இளைஞர் திமுகவைத் தொடங்கினார் என்று சொல்கிறார்கள். அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், 1975-ல் மிசாவில் அவர் சிறை சென்றபோதே அவர் தீவிர அரசியல்வாதியாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

1980-ல் திமுக இளைஞரணியின் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக அவர் அறிவிக்கப்பட்டார். 1984-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். எப்படிப் பார்த்தாலும் எல்லா வகையிலும் அகிலேஷைவிடப் பல மடங்கு மூத்தவர் ஸ்டாலின்.

கட்சியில் சாதாரண உறுப்பினர், வட்டப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி அமைப்பாளர், இளைஞரணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்றும், ஆட்சியில் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் என்றும் உயர்ந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், தேர்தல் அரசியலில் மட்டும் அல்ல; கட்சி அரசியலிலும் தன்னை மீறிய, தனக்கு இணையான பதவிகளை ஸ்டாலினுக்குக் கொடுத்துவிடவில்லை கருணாநிதி. திமுகவின் பெரும்பாலான முடிவுகளை எடுப்பவராக உருவெடுத்தபோதிலும்கூட - கட்சியில் தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்த நிலையில் - பொருளாளராகவே அமர்த்தப் பட்டிருந்தார் ஸ்டாலின். மேலும், ஸ்டாலினும்கூட தன் பதவியை, அதிகாரத்தை மற்றவர்கள் மீதெல்லாம் காட்டினாலும், வரம் கொடுத்த சிவன் தலை மீது கை வைக்கத் துணிந்ததில்லை. கருணாநிதிக்குக் கட்டுப்பட்டவராகவே காட்டிக் கொண்டார்; நடந்தும்கொண்டார்.

இப்போது, ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் தள்ளாமைச் சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்புச் சூழல் உருவானது. பொதுக்குழு வில் முடிவெடுக்கப்படலாம் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் சொல்லிவந்த நிலையில், "தலைவர் மருத்துவமனையிலிருந்து வரட்டும்" என்றார்கள் மூத்த தலைகள். இப்போது கருணாநிதி வீடு திரும்பிவிட்ட நிலையில், "ஸ்டாலினுக்குச் செயல் தலைவர் பதவி கொடுப்பது தொடர்பாகப் பேசலாமா?" என்று இளைய தலைகள் கேட்டால், "பதிலுக்கு 'அப்படின்னா, நான் செயல்படாத தலைவரா?' என்று தலைவர் கேட்டால் என்ன செய்வது?" என்று கேட்கிறார்களாம் மூத்த தலைகள். விளைவாக, இணைத் தலைவர் அல்லது துணைத் தலைவராக்குவாரா என்று காத்திருக்கிறார்கள் இளைய தலைகள்.

முலாயம் சிங் - அகிலேஷைச் சுட்டிக்காட்டி கருணாநிதியை ரொம்ப நாட்களாகத் திட்டிய வர்கள் உண்டு. தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானதுதான். ஆனால், அதிகாரம் என்பது அந்த ரத்தத்தைவிட அடர்த்தியானது என்பதைத்தான் கருணாநிதி உறுதியாக நம்புகிறாரோ...?

-கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்