#என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நல்லது!

ஒரு மாணவனின் வளர்ச்சியில் பெற்றோரும் வகுப்பு ஆசிரியர்களும் முக்கியமான பங்காளிகள்



அமெரிக்காவின் டென்வர் நகரில் டவுல் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் கைல் ஸ்வார்ட்ஸ். மூன்றாவது வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துமாறு தலைமை ஆசிரியை கூறினார். வகுப்பறைக்குச் சென்ற ஸ்வார்ட்ஸ், இந்தக் குழந்தைகளைப் பற்றி தகவல் தெரிந்தால் அவர்களுடன் நட்பை வலுப்படுத்திக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். எனவே, “என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நல்லது என்று உங்கள் மனதில் எதை நினைக்கிறீர்களோ அதை எழுதுங்கள்’’ என்று எல்லாக் குழந்தைகளிடமும் கூறினார். வகுப்பறைக்கு வந்தாலே ஏதாவது பாடத்தை எழுது, கணக்கைப் போடு என்று சொல்லும் ஆசிரியர்களைவிட, இவர் வித்தியாசமாக இருக்கிறாரே என்று குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. அத்துடன் தங்களுடைய பிஞ்சு மனங்களில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டார்கள். அதைப் படித்த கைலுக்கு மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி! ஆம், அவர்கள் அளித்த தகவல்கள் அப்படிப்பட்டவை.

“வீட்டுப் பாடம் எழுத என்னிடம் பென்சில்கள் இல்லை என்பதை ஆசிரியர் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி” என்று ஒருவன் தன் குடும்ப வறுமையை நாசூக்காகச் சுட்டிக்காட்டியிருந்தான்.

“வீட்டில் பாடம் படித்தேனா என்று சரிபார்த்துக் கையெழுத்துப் போட வீட்டில் என் அம்மா, நான் கண் விழிக்கும் நேரம் இருப்பதில்லை” என்று தன்னுடைய தாய் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவதை ஏக்கத்தோடு பதிவுசெய்திருந்தான் இன்னொருவன்.

அப்பாவைப் பார்க்காத குழந்தை

“எனக்கு 3 வயதாக இருக்கும்போதே அப்பாவைக் குடியேற்றத் துறை அதிகாரிகள் மெக்சிகோவுக்கு நாடு கடத்திவிட்டார்கள். கடந்த 6 ஆண்டுகளாக நான் அப்பாவை நேரில் பார்த்ததே இல்லை” என்று ஒரு மாணவன் தன்னுடைய குழந்தைப் பருவமே நொறுங்கிக் கிடப்பதை அழகாக வெளிப்படுத்தியிருந்தான்.

கைல் ஸ்வார்ட்ஸ் இப்போது ஆசிரியையாகி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. குழந்தைகளின் நிலைமை என்ன, எப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து வருகிறார்கள், அவர்களுடைய கவலை என்ன, ஆசை என்ன என்பதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால்தான், அவர்கள் ஏன் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள், சிலவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள், சிலவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். வகுப்பறைக்கு வெளியே அவர்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சரிசெய்தால்தான், வகுப்பில் அவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதை அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறார். தனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தைத் தன்னைப் போன்ற சக ஆசிரியர்களிடம் கடந்த ஆண்டு பகிர்ந்துகொண்டார். இதற்காக ட்விட்டரில் ‘ஐ விஷ் மை டீச்சர் நியூ’ (#iwishmyteacherknew) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். அது அப்படியே வைரலானது. பிற ஆசிரியைகளும் அதையே பின்பற்றித் தங்களுடைய மாணவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து வியப்படைந்தார்கள். பலர் அதில் முக்கியமானவற்றை கைல் ஸ்வார்ட்ஸுக்கே அனுப்பி வைத்தார்கள்.

இதையே அடிப்படையாக வைத்து, ‘ஐ விஷ் மை டீச்சர் நியூ: ஹவ் ஒன் கொஸ்டின் கேன் சேஞ்ச் ஃபார் அவர் கிட்ஸ்’ (I Wish My Teacher Knew: How One Question Can Change For Our Kids) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையே எழுதிவிட்டார் ஸ்வார்ட்ஸ். ஒரு மாணவனின் வளர்ச்சியில் பெற்றோர்களும் வகுப்பு ஆசிரியர்களும் முக்கியமான பங்காளிகள் என்று கருதுகிறார் ஸ்வார்ட்ஸ்.

அவருடைய கருத்தை வாஷிங்டன் நகரைச் சேர்ந்த மெலோடி மோலினாஃப் என்ற தாய் ஆமோதிக்கிறார். அவருக்கு 9, 11 வயதுகளில் 2 மகன்கள். “எங்களுடைய குழந்தைகளை நன்றாக வளர்ப்பதில் ஆசிரியர்கள் எங்களுக்குப் பங்காளிகள்; இந்தப் பெரும் பொறுப்பை நாங்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் தோள்களில் ஏற்றியிருக்கிறோம். என்னுடைய மகன்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள சவால்கள் என்ன என்பதை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எதைச் சொல்லித் தருகிறோம் என்பதுடன் யாருக்குச் சொல்லித் தருகிறோம் என்பதும் முக்கியம்” என்கிறார் மெலோடி மோலினாஃப்.

பெற்றோர்களின் ஆர்வம்

இதே நிலையை நான் எதிர்த்தரப்பிலிருந்து பதிவுசெய்ய விரும்புகிறேன் என்கிறார் 4-வது வகுப்புக்குப் பாடம் நடத்தும் மேரி கிளேமேன். “இதுவரை நான் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறேன். அவர்கள் பெருக்கல், வகுத்தல் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே, அவர்கள் எப்படி வகுப்பில் நடந்துகொள்கிறார்கள், எப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று அறிந்துகொள்ள அவர்களுடைய பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று வியக்கிறார் மேரி கிளேமேன்.

என்னுடைய மாணவர்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால், நான் இந்தத் தவறுகளைச் செய்திருக்கவே மாட்டேன் என்று தன்னுடைய புத்தகத்தில் சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்வார்ட்ஸ். ஸ்வார்ட்ஸின் வகுப்பில் கிறிஸ் என்ற மாணவன் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அறிவியலை மேலும் அறிவதற்கான ஒரு கோடைக்காலப் பயிற்சி முகாமுக்கு அவனுடைய பெயரைப் பரிந்துரை செய்துவிட்டு, அந்த மாணவனுக்குத் தான் பெரிய சலுகையைச் செய்துவிட்டதாக அகமகிழ்ந்திருந்தார் ஸ்வார்ட்ஸ். மிகுந்த வறுமையில் வாடிய அவனுடைய பெற்றோரால் பணம் செலவழித்து அவனை அந்த முகாமுக்கு அனுப்பிவைக்க முடியவில்லை என்று சில நாட்களுக்குப் பிறகுதான் ஸ்வார்ட்ஸுக்குத் தெரிந்தது.

பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்

தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தாலும் சோகத்தில் ஆழ்ந்துவிடும் மாணவர்களின் வாட்டத்தைப் போக்க வகுப்பறைகளால் முடியும் என்று நம்புகிறார் ஸ்வார்ட்ஸ். வகுப்பறைச் சூழல் மூலம் குழந்தைகளின் துயரங்களைக் குறைத்துவிட முடியும் என்கிறார். இதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்களின் துயரங்கள், இழப்புகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவது அவசியம் என்கிறார். குடும்பத்தார் இவற்றையெல்லாம் வகுப்பாசிரியர்களிடம் மனம்விட்டுக் கூறினால், அவர்கள் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதுடன், நல்ல ஆறுதலையும் வழங்கித் தேற்ற முடியும் என்கிறார். “குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்தான் சிறந்த முதலாசிரியர்களாக இருக்க முடியும். நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு கல்வியைப் புகட்ட முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

வகுப்புக்குள் நுழைந்ததுமே அட்டென்டன்ஸ் எடுத்துவிட்டு, பாடத்தைச் சொல்லிக்கொடுத்தால் போதும், அதற்கே நேரம் போதவில்லை என்று ஆசிரியர்கள் முணுமுணுக்கக்கூடும். ஆனால், “மாணவர்களின் நிலைமை அறியாமல் நீங்கள் மணிக்கணக்கில் பாடம் நடத்தினால்கூடப் பலன் இல்லை. சில நிமிஷங்களைக் கூடுதலாகச் செலவிட்டு உங்களுடைய மாணவர்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ளுங்கள்” என்கிறார் ஸ்வார்ட்ஸ்.

தமிழில்: சாரி

©: ‘தி நியூயார்க் டைம்ஸ்’





பள்ளி ஆசிரியர்கள் கவனத்துக்கு...

ஆசிரியர் கைல் ஸ்வார்ட்ஸ் போலவே வித்தியாசமான முறையில் உங்கள் மாணவர்களை அணுகிய / அணுகும் பள்ளி ஆசிரியர்களா நீங்கள்...



மாணவர்கள் உடனான உங்கள் அணுகுமுறையால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? நீங்கள் கண்டறிந்த உண்மைகள் என்ன? உங்களால் மறக்க முடியாத வகுப்பறை அனுபவம் என்ன? சக ஆசிரியர்களுக்கு நீங்கள் பகிர விரும்பும் யோசனைகள் என்ன?



இவை அனைத்தையும் 'தி இந்து' இணையதளத்துடன் பகிர saravanan.s@thehindutamil.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அவை உரிய முக்கியத்துவத்துடன் நம் தளத்தில் வெளியிடப்படும்.



அல்லது, நீங்கள் சமூக வலைதளங்களிலும் இயங்குபவராக இருந்தால், #என்வகுப்பறை என்ற ஹேஷ்டேக் இட்டு உங்கள் அனுபவத்தைப் பகிரலாம்.



மேலும், இங்கு கிழேயுள்ள கருத்துப் பகுதியிலும் பகிரலாம். அதேபோல், நீங்கள் படித்த பள்ளி ஆசிரியர்களில் தனித்துவமானவர்கள் குறித்தும் உங்கள் அனுபவத்தைப் பகிரலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

சுற்றுலா

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

59 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்