கோடைக்குத் தயாராவோம்

By கு.கணேசன்

பாதுகாப்பு உணர்வோடு செயல்பட்டால், கோடையை எளிதாகச் சமாளிக்கலாம்

மே மாதம் பிறந்துவிட்டது. கூடவே, கோடையின் கடுமையும் அதிகரித்துவிட்டது. பருவ நிலையில் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்களும் மனிதர்களால் உண்டான அதீத புவி வெப்பமயமாதலும் ஆண்டுதோறும் கோடை வெப்பத்தை அதிகரித்துவருகின்றன. அதிலும் இந்த ஆண்டில் கோடையின் கொடுமை மிகவும் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடைக் காலத்தில் உண்டாகும் அதீத வெப்பத்தின் காரணமாக வியர்வையின் அளவு அதிகரிப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. வியர்வை வழியாக சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், யூரியா எனப் பல உப்புகள் அளவுக்கு அதிகமாக வெளியேறிவிடுவதால், ரத்த ஓட்டமும் ரத்தஅழுத்தமும் குறைகின்றன. சிறுநீர் வெளியேறுவது குறைகிறது. அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போகிறது. தண்ணீர் தாகம் அதிகரிக்கிறது. வாய் உலர்ந்துபோகிறது. தலைவலி, கிறுகிறுப்பு ஏற்படுகின்றன. தசைகள் சோர்வடைகின்றன. தோல் வறட்சி அடைகிறது. காலில் உள்ள ஆடுதசைகளில் வலி உண்டாகிறது. உடல் உற்சாகத்தை இழக்கிறது. செய்யும் வேலையில் தொய்வு உண்டாகிறது.

உடலை வாட்டும் நீரிழப்பு

கோடையில் நீர்க்கடுப்பு அதிக தொல்லை தருவதுண்டு. அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது, சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு.

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலில் வெப்பத்தளர்ச்சி ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம், சிலருக்கு உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது, நிறைய வியர்க்கும். வியர்வையில் உடலின் உப்புகள் பெருமளவில் வெளியேறிவிடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள் திடீரென மயக்கம் அடைவது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. ‘சன் ஸ்ட்ரோக்’ என்று அழைப்பது இதைத்தான். இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்துவிடுகிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்துவிடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.

மயக்கம் ஏற்பட்டவர்களைக் குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டுவந்து, ஆடைகளைத் தளர்த்தி, பாதங்களை உயரமாகத் தூக்கிவைத்து, தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைத்தால் மயக்கம் தெளிந்துவிடும். இது மட்டும் போதாது. அவருக்கு குளூக்கோஸ் மற்றும் சலைன் செலுத்த வேண்டியதும் அவசியம். அதற்கு உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

வெயிலின் கொடுமையைச் சருமம் தாங்க முடியாமல் திணறும்போது, சருமத்தில் வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத்தொற்று, படர்தாமரை, தேமல் எனப் பலதரப்பட்ட தொற்றுநோய்கள் குடிகொள்ளும். அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக் குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில், சிஎக்ஸ்சிஎல்5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சல், வலி, வெப்பப் புண்கள் ( Sun Burn ) ஏற்படும்.

தண்ணீர்.. தண்ணீர்!

சென்னை போன்ற நகரங்களில் காற்றின் ஈரப்பதம் மிக அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் வியர்வைச் சுரப்பு உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதேநேரத்தில், வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இதனால், அதிக நீரிழப்பு ஏற்படுகிறது. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும் இந்த நீரிழப்பை ஈடுகட்டத் தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச் சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமாக உள்ளது. கோடை வெப்பத்தால் பொட்டாசியம் வியர்வையில் வெளியேறிவிடும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரிப் பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் காபி, தேநீர், செயற்கை பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு இளநீர், நீர் மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். கோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தைத் தண்ணீரில் கழுவிக்கொள்வது நல்லது.

வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கோடைக் காலத்தில் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படிச் செல்வது அவசியம் என்றால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ளுங்கள். அல்லது குடை கொண்டுசெல்லுங்கள். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் ‘சன் ஸ்கிரீன் லோஷனைப் பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். உப்பு கலந்த மோர் குடித்துவிட்டு வெளியில் செல்வது இன்னும் நல்லது. கதர், பருத்தி ஆடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், சந்தை, தியேட்டர், மால்கள் போன்ற இடங்களில் இலவசப் பொதுக் குடிநீருக்கு ஏற்பாடு செய்வது முக்கியம். மேலும், நீரிழப்பைச் சரிசெய்யும் உப்பு பாக்கெட்டுகளையும் (Oral rehydration supplements) இந்த இடங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வைக்கலாம். அரசு மருத்துவமனைகளில் காற்றோட்டமான, ஏர் கூலர் உள்ள அல்லது குளிரூட்டப்பட்ட படுக்கை அறைகளைத் தயார் நிலையில் வைத்துக்கொள்வது நல்லது.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் வெயில் நமக்கு ஒரு சவால்தான். என்றாலும், பருவநிலை மாறும்போது பாதுகாப்பு உணர்வோடு செயல்பட்டால், கோடையை எளிதாகச் சமாளிக்கலாம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்