நிலத்துக்கும் விவசாயிக்குமான உறவை அறுத்துவிட்டது அரசு!

புரட்சி வெற்றிபெற்று சோவியத் அரசாங்கம் அமைக்கப்பட்ட நேரம். மாஸ்கோவிலிருந்து நாட்டின் அனைத்துக் கூட்டுப் பண்ணைகளுக்கும் கடுமையான உத்தரவு பறக்கிறது. எல்லாப் பண்ணைகளிலும் இன்ன தேதியில் விதைப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும்.. இன்ன தேதியில் கண்டிப்பாக விதைப்பை முடித்துவிட வேண்டும். விதைகளை நான்கு அங்குல ஆழத்தில்தான் ஊன்ற வேண்டும். சரியாக இன்ன தேதியில் மழை ஆரம்பிக்கும் என்று சோவியத் அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் கணித்துக் கொடுத்திருக்கிறது.

அப்போதைய சோவியத் அரசில் கூட்டுப் பண்ணை மற்றும் தரிசு நில மேம்பாட்டு அமைச்சராக இருந்த பிரஸ்னேவ், ஒரு மாதம் கழித்து தன்னுடைய கிளைடர் விமானத்தில் பறந்து பண்ணைகளைப் பார்வையிடுகிறார். கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெற்று நிலங்கள். ஒரே ஒரு பண்ணையில் மட்டும் பயிர் பச்சைப்பசேல் என்று வளர்ந்து நிற்கிறது. அங்கேயே தரையிறங்குகிறார்.

அனுபவம் தந்த பரிசு

அந்த நிலத்துக்குப் பொறுப்பான ‘முழிக்’கை (விவசாயி) அழைத்துவர ஆணையிடுகிறார். முதிய விவசாயி வந்து நின்றார். “உங்கள் நிலத்தில் மட்டும் பயிர்கள் பச்சைப்பசேல் என்று வளர்ந்து நிற்கின்றனவே எப்படி?” என்றார் பிரஸ்னேவ் ஆச்சரியம் தாளாமல். “மழை இன்ன தேதியில் பெய்யும் என்று அரசு அறிவித்தது. தாத்தன், பூட்டன், பாட்டன், காலந்தொட்டே நிலத்தைப் பற்றிய மழையைப் பற்றிய, செடி கொடிகள், வெள்ளாமைகள் பற்றிய நுண்ணறிவு எனக்குண்டு. இயற்கையின் சமிக்ஞைகளின்படி, அரசாங்கம் குறிப்பிட்டிருந்த தேதியில் மழை ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். விதைகளை நான்கு அங்குல ஆழத்தில் ஊன்றுவதற்குப் பதில் ஏழு அங்குல ஆழத்தில் ஊன்றினேன். என் கணிப்பு பலித்தது” என்றார் அந்த விவசாயி.

வந்த விமானத்திலேயே அந்த விவசாயியை மாஸ்கோவுக்கு அழைத்துச் சென்றார் பிரஸ்னேவ். அனுபவம் மிக்க அந்த மூத்த விவசாயியிடமிருந்து விவசாயம் பற்றிய பல யோசனைகளை சோவியத் அரசு பெற்றுக்கொண்டது.

நம்முடைய விவசாயிகளிடமும், விவசாயத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களிடமும் விவசாயம் பற்றிய இதே நுண்ணறிவு உண்டு. அப்படிப்பட்டவர்களை முற்றாக நிராகரித்துவிட்டோம். நம்முடைய பாரம்பரிய நீராதாரங்களின் சங்கிலித் தொடர் மழை, ஓடைகள், கண்மாய், ஊருணி, கிணறுகள். இதே போல் ஆற்றுப் பாசனம் என்றால் ஆறு, கால்வாய், வாய்க்கால், கண்மாய், கிணறு. இன்று இந்த நீரோட்டச் சங்கிலி துருப்பிடித்து அறுந்துபோய்க் கிடக்கிறது.

நான்கு பூதங்கள்

ஊர் கண்மாயில் சம்சாரி ஒரு கூடை மண் அள்ள வேண்டும் என்றால் கனிம வளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஒரு கட்டு விறகு வெட்ட வேண்டும் என்றால் வனத் துறையினரின் அனுமதி பெற வேண்டும். ஒரு கண்மாயின் மடையோ, கலிங்களோ பழுது பார்க்கப்பட வேண்டுமானால், வருவாய்த் துறை அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்று, பொதுப்பணித் துறையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆக, ஒரு கண்மாயை நான்கு துறைகள் பூதங்களைப் போல் காவல் காக்கின்றன. கண்மாயில் படிந்துள்ள மண் எங்கிருந்து வந்தது என்றோ அல்லது எப்படி வந்தது என்றோ அந்தக் காவல் பூதங்களுக்குத் தெரியாது. அதேபோல் அக்கண்மாயில் வளர்ந்து நிற்பவை என்னென்ன மரங்கள் என்றோ, அவை யாருக்குச் சொந்தம் என்றோ தெரியாது. அந்தக் கண்மாயில் படிந்திருக்கின்ற மண், சென்ற வருட மழை வெள்ளத்தால் அடித்துக் கொண்டுவரப்பட்ட காட்டு மண். அந்தக் காட்டு மண்ணை, வண்டல் மண்ணாக மாற்றி உரமேற்றி, ஈரப்பசை காக்கும் உயிர்ப்பைக் கொடுத்து, புதிய மண்ணாகக் கண்மாய் வழங்கிக்கொண்டிருந்தது. நீரைத் தேக்கிக்கொண்டு சம்சாரிகளுக்கு வாழ்வளித்துக்கொண்டிருந்தது.

முன்பெல்லாம் கிராமங்களில், வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்குத் தேவையான மரங்களைச் சம்சாரிகள் வெட்டிக்கொள்ளலாம் எந்த மரத்தை வெட்ட வேண்டும், வெட்டினால் தளிர்க்கும் மரங்கள் எவையெவை, ஏற்கெனவே காய்ந்து பட்டுப்போய் நிற்கும் மரங்கள் எவை என்று சம்சாரிகளுக்குத் தெரியும். அவற்றை மட்டுமே வெட்டினார்கள். இதன் மூலம் கண்மாய் முட்புதர்களாலும், தேவையற்ற மரங்களாலும் சூழப்பட்டு நீரோட்டம் தடைபடுவது தவிர்க்கப்பட்டது.

அரசின் அலட்சியம்

இன்றைக்கு அரசாங்கம் சொல்லும் ‘குடி மராமத்து’ அந்தந்த ஊர் சம்சாரிகளால் நயா பைசா செலவு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கண்மாய் புத்தம் புதுசாய் ‘விளக்கி வைத்த வெண்கலக் கும்பா’ மாதிரி மராமத்து செய்யப்பட்டது. இந்தக் குடிமராமத்தை சம்சாரிகள் நிறுத்தவில்லை. அரசாங்கம்தான் நிறுத்தியது. ஏனெனில் கண்மாய், ஊருணியில் சம்சாரிகளுக்கு எவ்வித உரிமையும் இன்றி அரசு பறித்துக்கொண்டது. இதன் விளைவு, எல்லாக் கண்மாய்களும் மண் படிந்து மேடேறி, முட்செடிகளால் சூழப்பட்டு, காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை, நீர்க் கொரண்டி போன்ற நீர்த் தாவரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் தேங்க முடியாத முட்புதராக மாறிவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் இவ்வாறு குறிப் பிடுகிறார். “முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு, பாசனத்துக்குப் பயன்பட்டவுடன், ஒரே வருடத்தில் மதுரை, மதுரையைச் சுற்றியுள்ள மேலூர் போன்ற பகுதிகளில் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிட்டன.” இன்றைக்கோ நாம் குற்றங்களைக் குறைக்க காவல் துறையையும், நீதிமன்றங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு காலத்தில், ரசாயன உரங்கள் இடுவது பற்றியும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது பற்றியும் வானொலிகளில் பிரச்சாரம் வந்துகொண்டே இருக்கும். அப்போது விவசாய சங்கத் தலைவரும், ஒரு விவசாயியுமான அய்யா நாராயணசாமி நாயுடு மேடைகளில் இவ்வாறு பேசுவார்: “சம்சாரிகளக் கெடுக்கிறதுக்கு கவருமெண்டுக்காரன் கோப்புக் கெட்டிட்டான். ரசாயன ஓரம் போட்டு பூச்சிக்கொல்லி மருந்தடிச்சா நெலம் நாசமாப் போகும்.. மறு வருஷம் வெளையாது. அதனால சம்சாரிக காடு கரைகளுக்குக் கௌம்பும்போது, ஆம்பளையா இருந்தா செருப்பால ரேடியோப் பெட்டிய நாலடி அடி, பொம்பளையா இருந்தா வெளக்குமாத்தால நாலு சாத்து சாத்திட்டு, காட்டுக்குப் போ!”

அந்த சோவியத் விவசாயி தொடங்கி நாராயணசாமி நாயுடு வரை எல்லோருமே தங்களுடைய நுண்ணறிவால் உணர்ந்து செயல்பட்டவர்கள். நவீன வேளாண் விஞ்ஞானி வேலையை உதறிவிட்டு, தன் வாழ்நாள் முழுக்க இயற்கையோடு இணைந்த விவசாயத்தை உருவாக்கப் பாடுபட்ட நம்மாழ்வார், “டிராக்டர் சாணம் போடுமா?” என்று கேட்ட ஜெ.சி.குமரப்பா, பூமிதான இயக்க காந்தி வினோபா போன்றோரின் வார்த்தைகளை நாம் அலட்சியம் செய்துவிட்டோம். இப்போது அனுபவிக்கிறோம்!

- சோ.தர்மன், எழுத்தாளர்,

‘கூகை’, ‘சூல்’ போன்ற நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: chodharman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

தொழில்நுட்பம்

45 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்