உபியில் பாஜக தோற்றால் அது மோடியின் நேரடித் தோல்வி... எப்படி?

மோடி ஆட்சிக்கு வந்த பின் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை பாஜக எதிர் கொண்டுவிட்டாலும், இப்போதும் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தாலும் ஏனைய எந்தத் தேர்தலைக் காட்டிலும் மோடியின் செல்வாக்கோடு உத்தரப் பிரதேசத் தேர்தலே நேரடியாகப் பொருத்திப் பார்க்கப்படும். எப்படி?

2012 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளை மட்டுமே வென்றது. அப்போது அது பெற்ற வாக்குவீதம் 15%. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத் தேர்தலில் பெற்ற வெற்றி பிரமிக்கத்தக்கது; பாஜகவே எதிர்பாராதது; இதற்கு முன் பாஜக வரலாற்றிலேயே நடந்திராதது. சொல்லப்போனால், மோடி தனிப் பெரும்பான்மையுடன் உட்கார அதுவே வழிவகுத்தது. ஆமாம், மொத்தம் உள்ள 80 தொகுதி களில் 71 தொகுதிகளில் பாஜக வென்றது. அதாவது 81% இடங்களில் வெற்றி. பெற்ற வாக்குவீதம் 42.3%.

சட்டசபைத் தொகுதிகளாக மாற்றினால்…

இந்த வெற்றியின் பிரமாண்டத்தை மேலும் விளக்க வேண்டும் என்றால், இப்படிப் புரிந்துகொள்ளலாம். இந்த 71 தொகுதிகள் என்பவை உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 328 தொகுதிகளை உள்ளடக்கியவை.

வரலாற்றுரீதியாக நான்கு முனைப் போட்டி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொருத்த வரை, ஒவ்வொரு தொகுதியிலும் ஜெயிக்கும் கட்சிக்கு 25% முதல் 30% வாக்குகள் கிடைத்தால் போதுமானது. ஆனால், மக்களவைத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகளின்படி, 324 தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பாஜக, 30%-க்கு அதிகமாகவும், 253 தொகுதிகளில் 40%-க்கும் அதிகமாகவும் 94 தொகுதி களில் 50%-க்கும் அதிகமாகவும் அது பெற்றிருக்கிறது.

கடினமான சாத்தியங்கள்

பாஜகவின் எதிரிகள் அது உத்தரப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நடந்தால் அது வரலாறுதான். ஏனென்றால், வரவிருக்கும் தேர்தலில் அது 200-க்கும் குறைவான இடங்களில்தான் வெல்ல வேண்டும் என்று கணக்கிட்டாலும்கூட, முன்பு வாக்களித்தவர்களில் 15% பேர் பாஜகவிடமிருந்து மாறி வேறு கட்சிக்கு வாக்களித்தால் அது சாத்தியம்.

2014 மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பெரும் வெற்றிபெற்ற பாஜக, 2015 சட்டசபைத் தேர்தலில் அங்கே தோற்றது. இதற்குக் காரணம், முந்தைய தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 4% பேர் பிந்தைய தேர்தலில் மாறி வாக்களித்தது. உத்தரப் பிரதேசத்தில் அப்படி பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால், பிஹாரில் பாஜக இழந்தைதைப் போல நான்கு மடங்கு வாக்காளர்களை உத்தரப் பிரதேசத்தில் இழக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தின் இதுவரையிலான தேர்தல் வரலாற்றைப் பார்க்கையில் அப்படியான சூழல் மிக அரிதாகவே ஏற்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். நெருக்கடிநிலைக் காலகட்டத்தின் எதிரொலியாக 1971 1977 தேர்தலில் மட்டுமே அப்படியான ஒரு பெரிய மாற்றம் இதுவரை ஏற்பட்டிருக்கிறது.

மோடியின் செல்வாக்குக்கான சவால்!

பாஜகவைப் பொருத்த அளவில் இன்றுவரை அது மோடியின் செல்வாக்கு அப்படியே இருப்பதாகவே கூறிவருகிறது. லக்னௌவில் மோடிக்குக் கூடிய கூட்டம் சமீபத்திய காலத்தில் யாருக்கும் கூடாதது என்றும் அது பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் தன் செல்வாக்கு இன்னும் கொஞ்சம் உயர்ந்திருப்பதாகவும் கூறிவருகிறது.

டெல்லி தேர்தலுக்குப் பின் மாநிலங்களில் மோடியை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும் உத்திக்குப் பதிலாக உள்ளூர்த் தலைவர்களை மையப்படுத்தி எதிர்கொள்ளும் உத்தியைத் தேர்ந்தெடுத்த அது, உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் மோடியை மையப்படுத்தி இறங்கியிருக்கிறது. ஆக, மிகப் பெரிய அளவில் மோடியின் செல்வாக்கு சரிந்திருந்தாலே ஒழிய இங்கு பாஜக தோற்கும் வாய்ப்பே இல்லை. ஆக, இந்தத் தேர்தல் முடிவு எப்படியாக இருந்தாலும் அது மோடியையே சாரும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

11 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்