ஆமைகளைக் காக்க வேண்டிய அவசியம் என்ன?

கடல் ஆமைகளையும் நில ஆமைகளையும் காக்க வேண்டி யதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மே 23 ‘உலக ஆமைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமைகள் இப்போது பல்வேறு ஆபத்து களைச் சந்திக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஆமைகளை கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்துகின்றனர். ஆமைகளின் கறி ருசியாக இருக்கிறது என்பதால் அங்கு நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் வந்து இனப் பெருக்கம் செய்கின்றன. கடல் ஆமைகள் எந்தப் பகுதியில் பிறக்கின்றனவோ அதுவே தன்னுடைய வாரிசுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி இனப் பெருக்கக் காலத்தில் அங்கே வந்து முட்டையிட்டு மணலால் அதை மூடிவைத்துவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன. தான் இட்ட முட்டைகள் பொரிந்தனவா, குஞ்சுகள் வெளியே பாதுகாப்பாக வந்தனவா, வேறு பிராணிகளால் அல்லது விலங்குகளால் வேட்டையாடப்பட்டனவா என்றெல்லாம் அது பார்ப்பதில்லை. ஆமைகள் கடலிலிருந்து நிலப்பரப்புக்கு வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் பணத்தாசை கொண்ட மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. நட்சத்திரக் குறியுள்ள ஆமைகள் ஆண்மையை விருத்தி செய்யும் என்ற நம்பிக்கையால் கிழக்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதை உண்பது அதிகமாக இருக்கிறது.

ஆமைக்குக் கடலிலும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. புவி வெப்பமடைவதால் கடலுக்குள் ஏற்படும் மாற்றங்களால் ஆமைகளுக்கான உணவு குறைந்துவருகிறது. ஆறுகளில் கலந்துவரும் நகரக் குப்பைகளும் ரசாயனக் கழிவுகளும் கடலில் உள்ள பிராண வாயுவின் அளவைக் குறைக்கின்றன. இதனால் ஆமைகளுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் உயிரிகளுக்கும்கூட ஆபத்து நேர்கிறது. சமீப ஆண்டுகளாக, கடலோரமும் நதியோரமும் உணவு, கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், சாலைகள் ஏற்படுத்தப்பட்டு ஆமைகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. ஆறுகளிலும்கூட ஆமைகள் வளர்கின்றன. ஆறுகளில் ஊர் சாக்கடைகளும் ஆலைகளின் ரசாயனக் கழிவுகளும் கலப்பதால் ஆற்றுநீர் ஆமைகளும் உடல் உறுப்புச் சிதைவு தொடங்கி எல்லாவித இன்னல்களுக்கும் ஆளாகின்றன. இதனாலேயே நன்னீர் ஆறுகளில்கூட ஆமைகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது. முட்டை யிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பறவைகளாலும் பிற பிராணிகளாலும் மனிதர்களாலும் கொல்லப்படுகின்றன.

நல்ல வேளையாக ஆமைகளின் முக்கியத்துவத்தைக் கருதி அவற்றைக் காப்பாற்றும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றனர். கடலோரம் மண்ணில் இருக்கும் முட்டைகளை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்து, குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு நல்ல தீனி கொடுத்துப் பிறகு படகுகள் மூலம் கடலிலேயே கொண்டுபோய்ச் சேர்க்கின்றனர். கரையோரம் வாழும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் ஆமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவற்றைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அவர்களையும் ஈடுபடுத்துகின்றனர். பள்ளிக் குழந்தைகளும் இப்போது உதவுகின்றனர்.

கடல் தரையில் வளரும் புற்கள், மிகப் பெரிய கோரையாக அடர்த்தியாக வளர்ந்துவிடாமல் ஆமைகள் கடித்துத் தின்பதால் கடலடியில் உள்ள பல உயிரிகள் அங்கே வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துத் தங்களுடைய இனங்களைப் பெருக்கிக்கொள்கின்றன. ஆமைகள் கடித்து வெளியேற்றும் புற்களும் இலைகளும் வெவ்வேறு உயிரிகள் உண்ணத்தகுந்த சிறு உணவாகின்றன. பவளப் பாறைகளில் சிறிய கடல்வாழ் உயிரினங்கள் வந்து உணவருந்தவும் இனப்பெருக்கம் செய்யவும் இளைப்பாறவும் ஆமைகளின் நடமாட்டம் பெருமளவு உதவுகிறது. கடலில் ஜெல்லி மீன்கள் அளவுக்கதிகமாகப் பெருகினால் பிற மீனினங்களைத் தின்று அழித்துவிடும். ஜெல்லி மீன்களைத் தின்று அவற்றின் எண்ணிக்கை குறையவும் ஆமைகள் உதவுகின்றன. ஆமைகளின் முட்டைகளும் குட்டிகளும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகி அவை வளர்வதற்கு உதவுகின்றன. இவ்வாறு ஆமைகள் கடலின் இயற்கைச் சூழல் கெடாமல் பாதுகாக்கின்றன.

சுருக்கமாகத் தமிழில்- ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்