வால்நட்சத்திரத்தில் இறங்கிய ஆய்வுக்கலம் உயிர் பெறுமா?

By என்.ராமதுரை

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய பிலே ஆய்வுக்கலம் குறித்த விரிவான தகவல்கள்…

மனிதர்கள் அனுப்பிய ஆளில்லா ஆய்வுக்கலம் ஒன்று பூமியிலிருந்து சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வால்நட்சத்திரத்தில் போய் இறங்கி, உலக சாதனை படைத்துள்ளது. ஆனால், போய் இறங்கிய சில நாட்களில் அது செயலற்றுவிட்டது. காரணம், வெயில் இல்லை. அது மீண்டும் உயிர் பெறுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் உருவாக்கிய அந்த ஆய்வுக்கலத்தின் பெயர் பிலே. அது தானாக வால்நட்சத்திரத்துக்குச் சென்றுவிட வில்லை. நிபுணர்கள் ரோசட்டா என்ற விண்கலத்தை உருவாக்கி, அதில் பிலே ஆய்வுக்கலத்தை வைத்து அனுப்பினார்கள்.

வால்நட்சத்திரத்தைத் துரத்தும் வேகம்

செவ்வாய் போன்று ஒரு கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவது என்பதே கடினம்தான். ஆனால், வால்நட்சத் திரத்தில் ஓர் ஆய்வுக்கலத்தைக் கொண்டுபோய் இறக்குவது என்பது மிக மிகக் கடினமான பணி.

ரோசட்டா திட்டத்தை உருவாக்குவதற்கே நான்கு ஆண்டுகள் பிடித்தன. அடுத்து 67P என்ற வால் நட்சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், ரோசட்டா விண்கலம் 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது. ஆனால், அது நேராக வால்நட்சத்திரத்தை நோக்கிச் செல்லவில்லை. ரோசட்டாவின் வேகம் போதாது என்பதே அதற்குக் காரணம்.

நீங்கள் பஸ்ஸைத் தவறவிட்டால் அதைத் துரத்திப் பிடிக்க முடியும். அதாவது, பின்புறமிருந்து துரத்திச் செல்ல வேண்டும். வால்நட்சத்திரமோ மிகுந்த வேகத்தில் சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கி மிகுந்த வேகத்தில் வருவது. ஆகவே, வால் நட்சத்திரத்தைத் துரத்திச் சென்று எட்டிப்பிடிக்க, ரோசட்டாவுக்குக் கிட்டத்தட்ட அந்த வேகம் தேவை.

ஆகவே, ரோசட்டா வேகம் பெறுவதற்குத் தக்க உத்தி கையாளப்பட்டது. விண்கலம் ஒன்று பூமி, செவ்வாய் போன்ற கிரகத்தை நெருங்கிக் கடந்து சென்றால், அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி காரணமாகக் கூடுதல் வேகம் பெறும். ஆங்கிலத்தில் இதை ‘கிராவிட்டி அசிஸ்ட்’ என்பார்கள்.

அந்த ஏற்பாட்டின்படி ரோசட்டா சூரியனைச் சுற்றி வந்து பூமியை மூன்று தடவை (2005, 2007, 2009 ஆண்டுகளில்) நெருங்கிக் கடந்தது. செவ்வாயை 2007-ல் கடந்து சென்றது. இவ்விதமாக, ரோசட்டா விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இப்படி வேகத்தை அதிகரிப்பதற்கே 10 ஆண்டுகள் கழிந்து, இந்த ஆண்டு ஆகஸ்டில் ரோசட்டா விண்கலம் வால்நட்சத்திரத்தை எட்டிப்பிடித்தது.

இறங்கும் இடம்

அடுத்து, ரோசட்டா அந்த வால்நட்சத்திரத்தைச் சுற்றிவர ஆரம்பித்தது. அந்த வால்நட்சத்திரமோ 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. செங்குத்துப் பாறை, பள்ளத்தாக்கு, சரிவான நிலம் என ஒழுங்கற்ற உருவம் கொண்டது அது. ஆகவே, ரோசட்டாவில் இணைந்த பிலே ஆய்வுக்கலம் சமதளமான இடத்தில் இறங்க வேண்டும் என்பதற்காகத் தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வால்நட்சத்திரத்தில் பிலே இறங்கியதும் உருண்டு விடக் கூடாது. சரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ஆய்வுக்கலத்தின் மூன்று கால்களிலும் கொக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. இறங்கியதும் அந்தக் கொக்கிகள் தரையைக் கவ்விக்கொள்ள வேண்டும். இது போதாதென்று, மூன்று கால்களிலும் திருகுகள் (ஸ்குரூக்கள்) இருந்தன. அவை தரைக்குள் இறங்கிக்கொள்ளும். இந்த ஏற்பாடுகள் மூலம் பிலே அந்த வால்நட்சத்திரத்தின் தரையில் உறுதியாக நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நவம்பர் 12-ம் தேதியன்று வால்நட்சத்திரத்தில் பிலே இறங்கும் வேளை வந்தபோது சோதனை நடத்தியதில் கொக்கி, திருகு ஏற்பாடுகள் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நிபுணர்கள் கருதவே பிலே திட்டமிட்டபடி வால்நட்சத்திரத்தில் இறங்கியது.

அந்தக் கட்டத்தில் ரோசட்டாவுக்கும் வால்நட்சத்திரத் துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 22 கிலோ மீட்டர். பிலே கீழே இறங்கித் தரையைத் தொட்டதும் நிலையாக உட்காரவில்லை. கீழ் நோக்கி வீசப்படும் டென்னிஸ் பந்து உயரே எகிறுவதுபோல பிலே சுமார் முக்கால் கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலே எகிறியது. மீண்டும் தரையைத் தொட்டபோது மறுபடி எகிறியது. மூன்றாம் முறைதான் அது வால்நட்சத்திரம் மீது அமர்ந்தது. இவ்விதம் எகிறியதால் பிலே ஆய்வுக்கலம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இறங்காமல், அருகே வேறிடத்தில் இறங்கிவிட்டது. இப்போது அதில்தான் பிரச்சினை.

மின்சாரப் பிரச்சினை

பிலே ஆய்வுக்கலத்தில் 10 வகையான ஆராய்ச்சிக் கருவிகள் உள்ளன. இவை அனைத்தும் சேகரிக்கும் தகவல்களை, மேலே பறந்துகொண்டிருக்கும் ரோசட்டாவுக்கு அனுப்புவதற்கு மின்சாரம் தேவை. இதற்குத் தற்காலிக ஏற்பாடு, நிரந்தர ஏற்பாடு என இரண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக ஏற்பாட்டின்படி பிலே ஆய்வுக்கலத்தில் பேட்டரிகள் உண்டு. இவை சுமார் 60 மணி நேரத்துக்கு மின்சாரம் அளிக்கும்.

இரண்டாவது ஏற்பாடாக, பிலேயின் உடல் முழுவதிலும் சூரிய மின்விசைப் பலகைகள் உள்ளன. இவை, சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித்தரும். ஆனால், பிலே இறங்கியுள்ள இடம் பெரும்பாலும் வெயில் விழாத இடமாக உள்ளது. இது போதாதென, வால்நட்சத்திரம் தனது அச்சில் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழல்கிறது. அந்த அளவில் வால்நட்சத்திரத்தில் இரவும் பகலும் உள்ளது. எனவே, பிலேயின் மின்விசைப் பலகைகளில் சுமார் ஒன்றரை மணி நேரம்தான் வெயில் விழுகிறது. இப்படியான நிலையில் சூரிய மின்விசைப் பலகைகளிடமிருந்து போதிய மின்சாரம் கிடைக்க வழியில்லை.

பிலே கீழே இறங்கியதிலிருந்து மூன்று நாட்கள் பேட்டரிகள் செயல்பட்டதால், எண்ணற்ற தகவல்கள் அங்கிருந்து கிடைத்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர். பேட்டரிகள் இப்போது அநேகமாகக் காலியாகிவிட்டதால், பிலே ஆய்வுக்கலமானது பேட்டரி தீர்ந்துபோன செல்போன் மாதிரி செயலற்றுப்போயுள்ளது.

அணுசக்தி பேட்டரி

பிலே ஆய்வுக்கலத்தில் சூரிய மின்விசைப் பலகை களுக்குப் பதில் ஆர்டிஜி எனப்படும் அணுமின்சார பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்தால் அவை தொடர்ந்து மின்சாரத்தை அளித்துக்கொண்டிருக்கும். அமெரிக்கா விடமும் ரஷ்யாவிடமும் இவ்வித அணுசக்தி பேட்டரிகள் உள்ளன. கடந்த காலத்தில் அமெரிக்காவின் நாஸா, சந்திரனுக்கும், வியாழன், சனி போன்ற கிரகங்களுக்கும் அனுப்பிய விண்கலங்களில் அணுசக்தி பேட்டரிகளைப் பயன்படுத்தியது. ஆனால், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இப்போதுதான் இவ்வித பேட்டரிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.

பிலே இப்போதைக்குச் செயலற்றுப்போனாலும் அதன் கதை முடிந்துவிட்டதாகக் கூற முடியாது. ஏதேனும், ஓர் உபாயத்தைக் கையாண்டு அதன் இடத்தை மாற்றினால் பிரச்சினை தீரும். இல்லாவிட்டாலும் வால்நட்சத்திரம் மேலும் மேலும் சூரியனை நெருங்கும்போது பிலேவுக்கு இப்போதுள்ளதைவிட அதிக மின்சாரம் கிடைக்கலாம். ஊட்டி வெயிலுக்கும் சென்னை வெயிலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அது மாதிரி, வருகிற நாட்களில் பிலே மீது விழும் வெயில் - சூரிய ஒளியின் அளவு - அதிகம் உறைக்கும். அப்போது அதிக மின்சாரம் உற்பத்தியாகும். இதன் மூலம் பிரச்சினை தீரலாம். எனவே, நிபுணர்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்