வெற்றிகளைக் குவித்த விஜய் ருபானி!

குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றுள்ளார். அம்மாநிலத்தின் 16-வது முதல்வரான அவர், ஜைன மதத்தைச் சேர்ந்தவர். பனியா சமூகத்தில் பிறந்தவர். 1956-ல் மியான்மரில் உள்ள ரங்கூன் நகரில் அவர் பிறந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர். படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டமும் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவமும் குஜராத்தில் பாஜகவுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், முதல்வர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவைக்குப் புதிய முகம் இவர். ராஜ்கோட் மேற்குப் பகுதியில் முதன்முறையாக நின்று வெற்றிபெற்றுள்ளார். எனினும், 2006 முதல் 2011 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஆனந்திபென் அமைச்சரவையில் நவம்பர் 2015-ல் கேபினெட் அமைச்சரான ருபானி, பதவி ஏற்ற ஐந்து மாதங்களுக்குள் பாஜகவின் குஜராத் மாநிலத் தலைவரானார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊழியரான இவர், மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தவர். 1971-ல் ஜனசங்கம் (பாஜகவின் பழைய பெயர்) கட்சியில் இணைந்தவர், அமித் ஷாவைப் போல் தொடக்கம் முதலே மோடிக்கு நெருக்கமாக இருந்தார்.

வியாபாரச் சமூகமான பனியாக்கள் அதிகம் வசிக்கும் செளராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தவரான ருபானிக்குப் பெருநிறுவன அதிபர்களின் ஆதரவு உண்டு. குஜராத்தில் 2%-க்கும் குறைவான அளவே உள்ள சமூகத்தைச் சேர்ந்த ருபானிக்கு, இந்தப் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மதக் கலவரம், ஊழல் தொடர்பான எந்தக் குற்றச்சாட்டிலும் சிக்காதவர் என்பது அவருக்குக் கூடுதல் தகுதி.

நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்தபோது, மிசா சட்டத்தில் கைதாகிச் சிறையில் இருந்தவர் ருபானி. ஜனசங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான ‘சிமன் காக்கா’ என அழைக்கப்படும் சிமன்பாய் சுக்லாதான் இவரது அரசியல் குரு. 1987-ல் ராஜ்கோட் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதே அவரது முதல் தேர்தல் வெற்றி. பிறகு 1996-ல் ராஜ்கோட்டின் மேயரானார். குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி, 2006-ல் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இவரை நியமித்தார். 2007-ல் செளராஷ்டிரா-கட்ச் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் மோடியால் நியமிக்கப்பட்டார் ருபானி. அவரது உழைப்பால், அப்பகுதியில் 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40-ல் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. அடுத்து வந்த 2012 தேர்தலிலும் ருபானியின் பணியால் பாஜகவுக்கு 40 தொகுதிகள் கிடைத்தன. இதனால், மூன்றாவது முறையாகவும் முதல்வரானார் மோடி. அதைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பும் மோடிக்குக் கிடைத்தது. இதன் நன்றிக்கடனாகவே விஜய் ருபானிக்கு முதல்வர் பதவி வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சொல்லலாம்.

இவருக்குக் கடும் போட்டியாக இருந்த நிதின் படேல் துணை முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 1960 முதல் குஜராத்தில் படேல் சமூகத்தவர் நான்கு பேர் முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒருவர்கூட தங்கள் முழுப் பதவிக் காலம் வரை பதவியில் நீடித்ததில்லை என்பது தனிக் கதை!

தொடர்புக்கு sip:ndkmlsmn@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்