அகதிக் குழந்தைகள் படும்பாடு

அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது



சொந்த நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகவே சுவீடன் நாட்டுக்கு அகதிகளாக வரும் 18 வயது நிரம்பாத குழந்தைகள் படும்பாடு கல்மனதையும் கரைய வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரையிலான 50 குழந்தைகளை ‘மனித உரிமைகள் கண்காணிப்பு’ அமைப்பினர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி பேட்டி கண்டபோது இந்த விவரங்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டில் மட்டும் தனியாக வந்த 35,000 குழந்தைகளை சுவீடன் ஏற்றுக்கொண்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் காப்பாளர்களாக ஏற்கத் தயாராக இருப்போரின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடரவும், மருத்துவ சிகிச்சையும், மன ஆறுதலும் பெற வழி செய்துள்ளது.

குழந்தைகளில் பலர் அடி உதைகளுக்கு ஆளானது முதல் பாலியல் வன்புணர்வுக்கும் பலியாகியிருக்கின்றனர். மத்திய தரைக்கடல் பகுதியில் சக அகதிகள் கடலில் மரண ஓலமிட்டபடி நீரில் மூழ்கியதைப் பார்த்தவர்களும், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்படுவதைப் பார்த்தவர்களும் இதில் பலர்.

ஜே.நாடியா (16), ஆப்கானிஸ்தானம்: “துருக்கிக்கு வந்து சேர்ந்தபோது உடன் வந்தவர்களை இழந்துவிட்டேன். ஆட்களை வெளிநாடுகளுக்குப் படகில் அனுப்பி வைக்கும் முகவரைச் சந்தித்தேன். நான் மட்டும்தான் குடும்பத்தில் மிஞ்சினேன். என்னிடம் பணம் இல்லை. சுவீடன் போக உதவுவீர்களா என்று கேட்டேன். ஓ.. தாராளமாக என்று கூறிய அவர், என்னைத் தனியாக ஓரிடத்தில் 12 நாட்கள் அடைத்துவைத்துப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தினார். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டேன். அங்கிருந்து தப்பிக்கவும் வழி தெரியவில்லை. பிறகு, மற்றவர்கள் உதவியுடன் அங்கிருந்து வெளியேறி சுவீடன் வந்திருக்கிறேன்.”

பி.கரம் (16), சிரியா: “ஐ.எஸ். படையினர் என்னை 5 மாதங்கள் கைதியாகச் சிறைப்பிடித்து வைத்து வேலை வாங்கினர். மற்றவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதையெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைத்தனர்.”

டி.அபீத் (16): “ஆப்கானிஸ்தானில் என்னுடைய பெற்றோர்களை இழந்துவிட்டேன். என்னுடைய உறவுக்காரர் என்னைத் தலிபான் படையில் சேர்க்க முற்பட்டார். அவரிடமிருந்து தப்பி போலீஸ்காரர்களிடம் சென்று முறையிட்டேன். அவர்கள் என்னைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக 4 நாட்கள் சிறையில் அடைத்து வைத்தனர். பிறகு, அவர்களிடமிருந்து தப்பி நாட்டை விட்டே வெளியேறிவிட்டேன்.”

டி.ரசூல் (9) ஆப்கானிஸ்தான்: “படகில் வந்தபோது கடல் சீற்றம் காரணமாக எங்களுடன் வந்த சிலர் நீரில் விழுந்து மூழ்கியதைப் பார்த்தோம். எனக்கு அச்சமாக இருந்தது. என்னைத் தேற்ற யாரும் இல்லை. எனக்குத் துணையும் இல்லை. அதற்குப் பிறகு உடல் அசதியில் சிறிது நேரம் தூங்கினாலும்கூட அந்தக் காட்சிகள் மீண்டும் கனவாகத் தோன்றும். அச்சப்பட்டு கண் விழித்துவிடுவேன்.”

வி.சாரே (16) லிபியா: “நானும் எனது 3 சகோதரர்களும் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டோம். இனி, லிபியாவில் இருந்தால் வாழ முடியாது என்று தெரிந்தது. நாங்கள் தனியாகத்தான் வந்தோம். வேறு வழியே இல்லை.”

தலிபான்களிடமிருந்து தப்பிப்பதற்காகவே நாட்டைவிட்டு ஓடி வந்ததாகப் பல ஆப்கானிஸ்தானச் சிறுவர்கள் தெரிவித்தனர். நாட்டைவிட்டு ஓடும் வழியிலும் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

சுவீடனிடம் புகலிடம் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 53 பேரை மனித உரிமைகள் அமைப்பினர் பேட்டி கண்டனர். அவர்களில் 50 பேர் 18 வயதை எட்டாத குழந்தைகள். அவர்களில் 9 பேர் பெண்கள். 3 பேருக்கு சுவீடன் வந்தவுடன் 18 வயது ஆனது. அவர்களை 17 அடைக்கல மையங்களில் அரசு தங்க வைத்திருக்கிறது. பேட்டியளித்தவர்களில் 37 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 4 பேர் எரித்ரியாவிலிருந்து வந்தவர்கள். 4 பேர் சிரியா, 3 பேர் சோமாலியா, 2 பேர் இராக், 2 பேர் எத்தியோப்பியா, ஒருவர் யேமன். கேள்வி கேட்டு குழந்தைகளைத் துயரத்தில் ஆழ்த்தக்கூடாதென்று, தாங்களாக முன்வந்து பேசியவர்களிடம் மட்டும் பேட்டி காணப்பட்டது.

சுவீடனுக்குப் பாராட்டு

“அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் சுவீடன் முன்னோடி. இங்கே வந்த குழந்தைகள் மரண பயம் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றைத் தருவதுடன் தொடர்ந்து படிக்கவும் அரசு வசதி செய்கிறது. அத்துடன் மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது” என்று மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ரெபேக்கா ரிட்டல் பாராட்டுகிறார்.

“அதற்காகக் குறைகள் இல்லாமல் இல்லை. அகதிகளின் மனுக்களை ஏற்பதில் முறையான நடைமுறைகள் இல்லை. மனுக்களைப் பரிசீலிக்கவும் ஏற்கவும் நிரம்ப காலதாமதம் ஆகிறது. இதனால் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம் குழந்தைகளிடம் நீடிக்கிறது. ஏற்கெனவே பல சோதனைகளுக்கு ஆளாகிவிட்டதால், இங்கும் திருப்பி அனுப்பிவிட்டால் எதிர்காலம் எப்படி என்ற பெருங்கவலை குழந்தைகளை வாட்டுகிறது” என்றும் ரெபேக்கா சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த ஆண்டு மட்டும் புகலிடம் கேட்டு 1,60,000 பேர் விண்ணப்பித்தனர். சில குழந்தைகள் இங்கு வந்து தங்கி 5 மாதங்கள் பூரத்தியாகிவிட்டன. பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறிய சில பெண் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியிலான ஆறுதல் இன்னும் வழங்கப்படவில்லை. என்னைப் பையன்களோடு சேர்த்துத் தங்க வைக்காதீர்கள், பெண்களோடு மட்டும் தங்க வையுங்கள் என்று நாடியா கோரியிருந்தார். ஆனால், அவர் இருக்கும் முகாமில் பெண்கள் மட்டுமின்றி 15 பையன்களும் இருக்கின்றனர். அவரை மகப்பேறு மருத்துவர் யாரும் இதுவரை சோதிக்கவில்லை. உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவருக்கு சிகிச்சை தரப்படவில்லை.

விரைவில் பரிசீலனை

தனியாக வரும் சிறுவர்களின் எண்ணிக்கை இப் போது குறைந்துவிட்டதால் ஏற்கெனவே விண்ணப்பித் தவர்களின் மனுக்கள் இனி விரைந்து பரிசீலிக்கப்படும் என்று சுவீடனின் சுகாதார நலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். சுவீடனுக்குள் அகதிகள் வந்த உடனேயே அவர்களுடைய உணவு, உடை, தங்குமிடம், பொதுவான மருத்துவ சேவை போன்ற தேவைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். குழந்தைகள் பாதுகாப்பாக, காவலர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வெகு விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

தமிழில்: சாரி

© ‘தி கார்டியன்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்