ஆறாவது பேரழிவுக்கு மனிதர்களே காரணம்!

By செய்திப்பிரிவு

மனித இனத்தின் பண்டைய வரலாறைப் பார்க்கும்போது உலகுக்கு நேர்ந்துள்ள முந்தைய ஐந்து பேரழிவுகள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்டது. இந்த முறை மனிதர்களின் செயல்களால்தான் அழிவு ஏற்படப்போகிறது என்று ‘நேச்சர்’ என்ற முன்னணி அறிவியல் பத்திரிகையில், எச்சரிக்கைக் கட்டுரையை விஞ்ஞானிகள் எழுதியிருக்கிறார்கள்.

கடந்த ஐம்பதாண்டுகளில் மக்கள் தொகை 130% அதிகரித்திருக்கிறது. 2060-ல் உலக மக்கள் தொகை 1,000 கோடியாக உயர்ந்துவிடும். மக்கள் தொகைப் பெருகுவதுடன் அவர்களுடைய செல்வமும் உயரும் என்பதால் அவர்களுடைய உணவு, உடை, இருப்பிட, போக்குவரத்துத் தேவைகளுக்காக பல்வேறு இயற்கை ஆதாரங்கள் வேகமாக அழிக்கப்படுகின்றன. பாலூட்டிகளில் 25%, பறவைகளில் 13% என்று பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இப்போது அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன. உணவுக்காக மீன் பிடித்தல், வேட்டையாடுதல் அதிகரித்து வருகின்றன. நீர், நிலம், காற்று ஆகியவற்றில் மாசு கலப்பதும் பலமடங்காக அதிகரித்து வருகிறது. பாலூட்டிகள், பறவைகள், தரைவாழ் பிராணிகள், நீர்வாழ் பிராணிகள், நீர்-நிலப் பிராணிகள் ஆகியவற்றின் வாழிடங்கள் வேறு பயன்பாடுகளுக்காக அழிக்கப்படுகின்றன. இப்போதுள்ள தாவரங்களையும் உயிரிகளையும் அழிக்கும் ஊடுருவல் உயிரிகள் அதிகரித்து வருகின்றன. மனிதர்கள் தங்களுடைய நுகர்வுத் தேவைகளுக்காக அழிக்கும் உலோக, அலோகப் பொருள்களாலும் நச்சுக் கழிவுகளை மறு சுழற்சி செய்ய முடியாமல் அப்படியே கொட்டுவதாலும் உயிர்கள் அழிப்பு அதிகரித்துள்ளன.

தாவரம், நீர்வாழ்வன, நிலம் வாழ்வன, பறவைகள் போன்றவை அழிந்தால் அவற்றால் மனித இனத்துக்குக் கிடைத்துவரும் நன்மைகளும் வற்றிவிடும். இத்தகைய புவிவள அமைப்புகளைப் பாதுகாக்க அரசுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அது நம்முடைய விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில் அமலாக்கப்பட வேண்டும். உலகம் வேகமாக மாறினாலும் கூட பல்லுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் அழிவைத் தாமதப்படுத்தி பிறகு மட்டுப்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைக் கூறுகிறது.

பதற வைக்கும் வரலாறு

ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து மனிதர்கள் பிற கண்டங்களுக்குக் குடி பெயர்ந்ததுமுதலே அழிவு ஆரம்பித்தது. 50,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவிலிருந்தும், 10,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னால் வட தென் அமெரிக்கக் கண்டங்களிலிருந்தும், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து 3,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்னாலும் மனிதர்கள் வெளியேறினார்கள். வேட்டைக்காகவும் பருவநிலையில் ஏற்பட்ட மாறுதல்களைத் தாங்க முடியாமலும் பெரும் இடப் பெயர்ச்சி ஏற்பட்டது. அப்போதுதான் உடல் எடை 44 கிலோவுக்கும் அதிகமாக இருந்த பாலூட்டி இனங்களில் பல அழிந்து மறைந்தன. பறவை இனங்களில் 15% அழிந்தன. கி.பி. 1,500-க்குப் பிறகு வன உயிர்களை மனிதர்கள் அழிப்பது வேகம் பிடித்தது. காடுகளையும் காட்டு விலங்குகளையும் சேர்த்து அழிப்பதும் அதி வேகம் பெற்றன. உலகில் இதற்கு முன்னால் ஐந்து முறை ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இணையாக இப்போதும் இயற்கை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களின் வாழிடம் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் தீவிர முயற்சி காரணமாக எல்லா வகை உயிரினங்களும் பலன் அடையும். அதற்காக அறிவியல் அறிஞர்கள், பலன் அல்லது துயரை அடையப் போகிறவர்கள், இயற்கை விஞ்ஞானிகள், சமூக அறிவியலாளர்கள் தங்களுக்குள் கலந்து பேசி திட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

2060-ல் 1,000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் வல்லமை இந்தப் புவிக்கு உண்டு. எஞ்சியிருக்கும் உயிரினங்களை அழிக்காமல் நம்மால் பாதுகாக்க முடியும். பல்லுயிரிகளால் உலகுக்கும் மனித குலத்துக்கும் நன்மைகள் பல. பல்லுயிரிகளையும் மனித குலத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியமும் மிகப் பெரியது, பாராட்டுக்குரியது. தகுந்த முன் யோசனைகளுடனும் உரியகால நடவடிக்கைகளுடனும் செயல்பட்டால் உலகைக் காப்பாற்றும் லட்சியத்தில் வெற்றி பெறலாம்.

சுருக்கமாகத் தமிழில்: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

15 mins ago

வாழ்வியல்

24 mins ago

ஓடிடி களம்

34 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்