ஷாங்காய் ரகசியம்?

சீனாவுக்குச் செல்லும் போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர் கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.

மூன்று தசாப்தத் திட்டம்

சீனத்தைப் பற்றி நல்ல விதமாகவே நினைப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் இதுதான். “இன்றைக்கு நாம் பார்க்கும் சீன வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேர்ந்துதான் இந்த வெற்றியை அவர்களுக்கு அளித்துள்ளன. கல்வித் துறையிலும் சாலை, இருப்புப் பாதைகள், தகவல்தொடர்பு, மின்சார உற்பத்தி, துறைமுகங்கள் போன்ற அடித் தளக் கட்டமைப்புத் துறையிலும் அவர்கள் மேற்கொண்ட முதலீடும் உழைப்பும்தான் இன்றைக்கு சீனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கைகொடுக்கின்றன.”

இந்த இரண்டு கருத்துகளில் எது சரி என்று சிலர் பந்தயம் கட்ட முற்படலாம். ஆனால், நான் பந்தயத்துக்குத் தயாரில்லை. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அது ஏற்கெனவே கல்வித் துறையிலும் அடித்தளக் கட்டமைப்பிலும் மேற்கொண்ட முதலீடுதான் காரணம் என்பதை உணர வேண்டும் என்றால், ஷாங்காய் நகரத் தொடக்கப் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள்.

‘டீச் பார் அமெரிக்கா’ என்ற இயக்கத்தின் நிறுவனர் வெண்டி காப்புடனும் ‘டீச் பார் ஆல்’ இயக்கத் தலைவர்களுடனும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்த இயக்கம் 32 நாடுகளில் செயல்படுகிறது. சீனத்தின் மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் மிக மோசமான பள்ளிக்கூடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்வதுதான் இயக்கத் தலைவர்களின் நோக்கம். சர்வதேச அளவில் ஷாங்காய் நகரப் பள்ளிக்கூடங்கள் மட்டும் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை ஆராய முற்பட்டோம். 15 வயது மாணவர்களின் கணிதத் திறன், அறிவியல் பாடத்திறன், பாடம் படிக்கும் திறன் ஆகியவற்றை 65 நாடுகளிலிருந்து தேர்வுசெய்து சோதித்ததுடன் ஒப்பிட்டும் பார்த்ததில் ஷாங்காய் சிறப்பிடம் பெற்றது.

ஷாங்காய் பள்ளிகளின் ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்க அந்த நகரில் உள்ள குவாங்வெய் தொடக்கப்பள்ளியைத் தேர்வுசெய்தோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 754 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. 59 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை என்று கண்டுகொண்டோம். அதாவது, ரகசியம் ஏதுமே இல்லை.

ஒரு பள்ளிக்கூடத்தின் தேவை

ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், எதெல்லாம் தேவையோ அதில் இடைவிடாமல் அக்கறை செலுத்தப்படுவதுதான் இந்தப் பள்ளிக்கூடங்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷென் ஜுன் என்ற ஆசிரியை. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் சுமார் 40% பேர் அடிக்கடி இடம் மாறி வேலைசெய்யும் சாதாரணத் தொழிலாளர்கள். அதிகம் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் தங்களுடைய வேலை நேரத்தில் 70% நேரத்தைப் பாடங்கள் நடத்துவதிலும் 30% நேரத்தைக் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் அடுத்து நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் திட்டமிடுவதிலும் செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் இருப்பதைவிட சீன ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக இருப்பதைக் காண்கிறேன்.

தெங் ஜியோ இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கூடம் காலை 8.35 மணிக்கே தொடங்கிவிடுகிறது. மாலை 4.30 மணி வரை நடக்கிறது. ஒரு நாளைக்குத் தலா 35 நிமிஷங்கள் என்று 3 பாடங்களை நடத்துகிறார் தெங் ஜியோ. மூன்றாவது வகுப்பில் அவர் பாடம் நடத்தும்போது நானும் மாணவர்களுடன் அமர்ந்து பின்னாலிருந்து கவனித்தேன். பாடத்தை நடத்துவது மிக அற்புதமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வகுப்பில் நேரம் வீணடிக்கப்படுவதில்லை.

பாடம் நடத்தும் நேரம் தவிர, எஞ்சிய நேரத்தில் அவர் அடுத்து நடத்த வேண்டிய பாடம் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். எதை முதலில் சொல்ல வேண்டும், எதையெல்லாம் உதாரணங்களாகக் கூற வேண்டும் என்று தீர்மானிக்கிறார். தன்னைப் போன்ற சக ஆசிரியர்களிடம் ஆலோசனை கலக்கிறார், விவாதிக்கிறார். சில வேளைகளில் ‘ஆன்-லைனில்’கூட ஆலோசனைகளைப் பெறுகிறார். அவர் பாடம் நடத்தும்போது தங்களுக்கு வகுப்புகள் இல்லாத ஆசிரியர்கள் அவர் நடத்துவதைப் பார்த்து, அதில் உள்ள தவறுகளை எடுத்துக்கூறி திருத்திக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஆசிரியர்கள் நடத்தும் வகுப்பு களுக்குச் சென்று, அவர்கள் பாடம் நடத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தும் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். மாண வர்களுக்குப் பாடம் நடத்தப் பல்வேறு உத்திகளையும் கையாள்கிறார்.

ஆசிரியர் படிக்கிறாரா?

ஒரு பள்ளிக்கூடம் சிறந்துவிளங்க பள்ளிக்கூடக் கட்டடமோ, மாணவர்கள் எண்ணிக்கையோ, பள்ளிக்கூடத்தின் நவீனக் கட்டமைப்பு வசதிகளோ, பள்ளிக்கூடம் நடைபெறும் நேரமோ மட்டும் போதுமானதல்ல. சக ஆசிரியர்களின் ஆலோசனைகள், மாணவர்களிடமிருந்து கிடைக்கும் பதில்கள், மிகச் சிறந்த ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளல் ஆகியவைதான் முக்கியம். ஆசிரியர்களின் முதல் தகுதி ‘தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது.’

தெங் பாடம் நடத்துவதுடன் ஓய்வ தில்லை. ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக் கூடத்துக்கு வரவழைக்கப்பட்டு, கணினி யைக் கையாளப் பயிற்சி தரப்படுகிறது. மாணவர்களுக்குத் தரப்படும் வீட்டுப்பாடத்தை அவர்கள் சரியாகச் செய்யவும் பாடங்களைப் படிக்கவும் பெற்றோருக்குத் தரும் பயிற்சி உதவுகிறது.

கிறிஸ்டினா பாவோ என்ற ஆசிரியையும் ஆங்கிலப் பாடம் நடத்துகிறார். அவர் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொலை பேசியிலோ இணையம் மூலமாகவோ வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை தொடர்புகொள்கிறார். அவர்களுடைய மகன் அல்லது மகள் எப்படிப் படிக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறார். எங்கே பின்தங்குகிறார், என்ன செய்தால் நன்றாகப் படிப்பார் என்பதைத் தெரிவிக்கிறார். படிப்பதில் எப்படியிருந்தாலும் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தத் தவறுவதேயில்லை.

“2003-ல் ஷாங்காய் பள்ளிக்கூடங்கள் சராசரித் தரத்தில்தான் இருந்தன. உலகமே வியக்கும் அளவுக்குத் தரமுள்ள பள்ளிகளாக இப்போது மாறிவிட்டன. அதுமட்டுமல்ல, ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்கள் மட்டும் தரமானவை என்றில்லாமல், ஒரே சமயத்தில் பெரும்பாலான பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுவிட்டன. அமெரிக்காவிலும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை கலப்பதோ, ஒருவர் நடத்துவதை மற்றவர் கவனிப்பதோ, மூத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதோ இல்லை” என்று சுட்டிக்காட்டுகிறார் சர்வதேச மாணவர் மதிப்பீட்டுக்கான திட்டத்தைச் சேர்ந்த (பிசா) ஆண்ட்ரியாஸ் ஸ்லேச்சர். இங்கு தரமான மாணவர்கள் மட்டுமல்ல; தரமான ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் உருவாகிறார்கள் என்கிறார்.

சீனத்திலேயே இப்போதும்கூட சுமாரான தரத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன. பள்ளிக்கூடத்தின் தரத்தை உயர்த்துவது எப்படி என்று அமெரிக்கர்க ளுக்கும் சீனர்களுக்கும் தெரியும். ஆனால், ஷாங்காய் நகரத்தில் அதை இடைவிடாமல், திட்டமிட்டு தொடர்ந்து செய்துவந்ததால் 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் பேசப்படும் பள்ளிக்கூடங்களாக மாற்றிவிட்டனர்.

குவாங்வெய் பள்ளிக்கூட முதல்வர் ஷென் ஜுன் சொல்கிறார், “இது ஆரம்பம் தான்!”

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்