யாருக்கு வேண்டும் நேர்மை?

By க.திருநாவுக்கரசு

அரசியல்வாதிகளை ‘நல்ல ஊழல்வாதி, மோசமான ஊழல்வாதி’ என்றே மக்கள் வகைப்படுத்துகின்றனர்.

எளிமையான வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் ஒரு முறை கட்சிக்காகத் திரட்டப்பட்ட நிதியுடன் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ரிக்‌ஷாக்காரர் ‘‘ஏன் ரிக்‌ஷாவில் போகலாமே?’’ என்று கேட்க அதற்கு “என்னிடம் பணமில்லை’’ என்றார் ஜீவா. ‘‘ஏன் உங்கள் கையில் இருக்கும் உண்டியலில் அவ்வளவு பணமிருக்கிறதே, அதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாமே’’ என்று ரிக்‌ஷாக்காரர் சொல்ல அதற்கு ஜீவா “அது என்னுடைய பணமில்லை. கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்த நிதி” என்றாராம்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் அரசுத் தொழிற்சாலை ஒன்றுக்காக இயந்திரங்கள் வாங்கியபோது அந்த நிறுவனம் விற் பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாகத் தர, அதை லஞ்சம் எனக் கருதி வாங்க மறுத்தார் காமராஜர். “இது எங்கள் நிறுவனத்தின் வழக்கம், லஞ்சம் அல்ல” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கூற “அப்படி யானால், அந்த கமிஷன் தொகைக்கு உரிய எந்திரம் ஒன்றைத் தந்துவிடுங்கள்” என்று காமராஜர் கூறினாராம். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது இயற்பியல் மேதை ஐன்ஸ்டைன் குறிப்பிட்டதைப் போல, இத்தகைய அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தார்கள் என்று நம்புவதற்கு இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

அங்கே 200 இங்கே 100தானா?

துயரம் என்னவெனில், இன்றும்கூட அத்தகைய தலைவர்கள் ஒருசிலர் நம்மிடையே இருக்கத்தான் செய் கிறார்கள் என்பதை நம்மில் பலரால் நம்ப முடிவதில்லை என்பதுதான். பெரும்பான்மையான மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள இன்றைய தலைவர்களில் அநேகமாக ஒருவர்கூட நேர்மையானவர் இல்லை என்பது இன்னும் பெரும் சோகம்.

“தேனெடுத்தவன் புறங்கையை நக்குவது ஒரு குற்றமா?” என்று ஒரு பெரிய கட்சியின் தலைவரே கேட்கும் நிலைக்குத் தமிழகம் வந்து வெகு கால மாகிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்துத் தருவதும், அப்படி முடியாவிட்டால் பணத்தை உடனடியாகத் திருப்பித் தந்துவிடுவதும் ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கான அல்லது அதிகாரிக்கான இலக்கணம் என மக்கள் மனதார ஏற்றுக்கொண்டு ஒரு தலைமுறையாகிவிட்டது. “பக்கத்துத் தெருவில் ஒரு ஓட்டுக்கு ரூ. 200 தந்தீர்கள். ஆனால், எங்களுக்கு மட்டும் ஏன் ரூ. 100?” என்று ‘சம உரிமைக்காக’ வேட்பாளர்களிடமும் அவர்களது முகவர்களிடமும் சண்டை போடும் மக்களுக்கு அரசியல் வாதிகளின் ஊழலை எதிர்த்துப் பேச தார்மிக அருகதை இல்லைதான்.

லஞ்சத்தைச் சட்டபூர்வமாக்கிவிடலாமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய நிதியமைச்ச கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுப்பதைச் சட்டபூர்வமாக்கிவிடலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறியதும், ஒரு நேர்மை யான ஆட்சியாளரால் அல்லது அதிகாரியால் அரசு இயந்திரத்தைத் திறனுடன் செயல்பட வைக்க முடியாது என்பதால், ஊழல் பொறுத்துக்கொள்ளத் தகுந்ததே என்று மேன் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அரவிந்த் அடிகா கூறியதும் இந்தச் சூழலில்தான். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக அண்ணா ஹசாரே இயக்கத்தின் காரணமாக ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இதிலும்கூட, தமிழக மக்கள் பின்தங்கியிருப்பது மிகவும் ஏமாற்றத் துக்குரியது.

இந்தப் பின்னணியில்தான் வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா விவகாரத்தைப் பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் டான்சி உட்பட தன்மீது போடப்பட்ட பல வழக்குகளில் வெற்றிகரமாக வெளிவந்த ஜெயலலிதாவால் இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வெளியே வர முடியுமா என்பது பெரும் சந்தேகமே. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக இருக்கும் ஆதாரங்கள் பலமானவை என்பதால், அநேகமாக முடியாது என்பதே பல சட்ட நிபுணர்களின் கருத்து. இதன் காரணமாகவே இந்த வழக்கை இழுத்தடிக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் ஜெயலலிதா தரப்பினர் செய்தனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம், நீதிக்குப் பாரபட்சம் கிடையாது என்றெல்லாம் நாம் நினைத்துக்கொண்டால், அதைவிட பேதைமை எதுவும் இருக்க முடியாது. இந்தியாவில் மிக அபூர்வமாகவே அதிகாரம் மிக்கவர்கள் தண்டிக் கப்படுகிறார்கள். தாங்கள் மாட்டிக்கொண்டால் தப்பிப்பதற்கான ‘தொலைநோக்கு’ கொண்ட பல வழிமுறைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்டவற்றுள் ஒன்றுதான் சட்ட நிபுணத்துவத் துக்கும் நேர்மைக்கும் பேர்போன உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமண்யம் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதைத் தடுத்ததும்.

இத்தனையையும் மீறி லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா, ஜெயலலிதா போன்றவர்கள் தண்டிக் கப்படுவது மிக அபூர்வமான நிகழ்வுகள். ஊழலுக்காகச் சிறை செல்கிறவர்களுக்கு மக்களின் அனுதாபம் கிடைப்பதற்கும், அதை அந்த அரசியல் தலைவர்கள் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகப் பயன் படுத்திக்கொள்ள இயல்வதற்கும் காரணம் இருக்கிறது. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடும்போது, யாரோ ஓரிருவர் மட்டும் சட்டத்தின் பிடியில் சிக்கித் தண்டனை பெறுவதை அவர்களது ஆதரவாளர்களால் மட்டுமல்ல; கட்சிசாரா மக்களில் பலராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பிரச்சினை ஊழல் அல்ல

தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றிருக்கும் ஜெயலலிதாவுக்காகத் தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் கண்ணீர் விட்டுக் கதறுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது, தமிழர்களில் கணிசமானவர்கள் ஊழலைக் குற்றமாகக்கூட அல்ல பிரச்சினையாகக்கூடப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் மிகுந்த முனைப்பு காட்டிய திமுக தரப்பின் யோக்கியதையைப் பார்க்கும்போது, பிரச்சினை ஊழல் அல்ல; மாறாக ஆட்சியதிகாரம் தொடர்பானது என்று மக்கள் கருதுவதில் தவறில்லை.

நேர்மை மற்றும் நீதிகுறித்து மக்களிடையே நம்பிக்கையற்ற மற்றும் ஏளனமான கருத்து நன்கு வேர்விட்டு வளர்ந்திருப்பதற்குக் காரணம், அரசு மட்டுமல்ல சமூகத்தின் அனைத்துத் தரப்புமே அழுகிய நிலையில் இருப்பதுதான். உனது மகன்களிலேயே நல்லவன் யாரென்றதற்கு, அதோ கூரை மீதேறிக் கொள்ளிவைக்கிறானே அவன்தான் என்று சொன்ன பரிதாபத்துக்குரிய தந்தை ஒருவரின் நிலைமையில்தான் இன்றைய தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இருக்கிறது.

இந்த நிலை மாற ஆட்சியாளர்களால் இங்குமங்குமாகக் கொண்டுவரப்படும் ஒருசில சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் போதுமானதல்ல. ஒரு பெரும் மாற்றம் மக்களின் சமூக மற்றும் அரசியல் உணர்வுநிலையில் நிகழ்ந்தாக வேண்டும். அத்தகைய உணர்வுநிலை மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்குப் பலமான அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கம் எதுவும் தற்போதைக்குக் கண்ணில் தென்படவில்லை.

- க. திருநாவுக்கரசு, அரசியல் விமர்சகர்,

தொடர்புக்கு : kthiru1968@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

53 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்