2016-ம் ஆண்டுடன் பழைய உலக முறைமை முடிந்துவிட்டதா?

ஒரு வழியாக ‘2016’ முடிவுக்கு வந்ததே என்று நிம்மதியாக இருக்கிறது; எனக்கு மிகவும் பிடித்த விழுமியங்கள் மீது பலத்த அடிகள் விழுந்த ஆண்டு அது.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அடைந்த வெற்றி, பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில் (பிரெக்ஸிட்) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கருத்துக்குப் பெரும்பான்மை பிரிட்டிஷார் அளித்த ஆதரவு, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தேசியவாதம் இனவாதம் சகிப்புத்தன்மையற்ற நிலை ஆகியவை வளர்வது போன்றவற்றால் என்னுடைய நம்பிக்கைகள் சிதையத் தொடங்கின. இந்த நிலையில்தான், மோடி அரசு பணமதிப்பு நீக்கம் (நோட் பந்தி) நடவடிக்கை மூலம் மிகப் பெரிய தவறைச் செய்து மக்களை இன்னலில் ஆழ்த்தியிருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னால் கம்யூனிசம் வீழ்ச்சி கண்டபோது பிரான்சிஸ் ஃபுகுயாமா என்ற அரசியல் விஞ்ஞானி, “சுதந்திரச் சந்தை என்ற அடித்தளத்தின் மீது தாராளவாத ஜனநாயகம் வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தார். அமைதி, விடுதலை, வளம் ஆகியவற்றை நாடும் மனிதகுலம் இனி பழைய வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதிய தாராளமயப் பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். இன்னதென்று கண்ணுக்குத் தெரியாத ஒரு லட்சியத்துக்காக, துணிச்சல்மிக்க கற்பனையான முறைகளில் முயன்றுபார்க்கும் முயற்சிகள் ஓய்ந்து, நுகர்வோர்களுக்கு என்ன தேவை என்று சந்தைகள் அறிந்துகொண்டு அவற்றை அளிக்கும் வியாபார முறை வளரும் என்று ஊகித்தார். இது பழைய வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் அதே வேளையில் சுவாரசியமற்ற, செயல்வேகம் இல்லாத நடைமுறைகளுக்கு இட்டுச்சென்றுவிடும் என்றார்.

இன்றைக்கு நடப்பதைப் பார்க்கும்போது ஃபுகுயாமா தவறாகக் கணித்திருக்கிறார் என்று புரிகிறது. தாராளமய ஜனநாயகமும், உலகமயமாக்கலும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சீன மார்க்சீய முதலாளித்துவம் ஏராளமான செல்வத்தைப் பெருக்கிய அதே வேளையில் மக்களுக்குச் சுதந்திரத்தை அதிகப்படுத்தவில்லை; மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் தழைத்தோங்குவதற்குப் பதிலாக மத அடிப்படைவாதம்தான் கொடூரமான வன்செயல்களோடு தலைதூக்கியது.

இவ்வளவு இருந்தும் இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றிலேயே இந்த 25 ஆண்டு காலகட்டம்தான் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது என்பதே உண்மை. எந்த உலகப் போரும் இல்லாமல் இக்காலம் அமைதியாகவே இருக்கிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார எழுச்சி உள்பட உலகின் பல்வேறு நாடுகள் செல்வ வளம் பெற்றுள்ளன. 1974-ல் உலகில் 35 நாடுகள் மட்டுமே ஜனநாயக நாடுகளாக இருந்தன, 2013-ல் 120 நாடுகளில் ஜனநாயகம் தழைத்தது.

கடந்த 2016 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் இப்போதைய உலக முறைமைக்கு எந்த ஆபத்தும் இல்லை. இது மாறும் என்றாலும் ஃபுகுயமாவின் அடிப்படைக் கருத்து வலுவானதாகவே தோன்றுகிறது. குறிப்பிட வேண்டிய ஓரம்சம் என்னவென்றால், இப்போது போட்டியாளரே இல்லை! இஸ்லாமிய மத நெறிமுறைப்படியான ஆட்சி வேண்டும் என்று மத்திய கிழக்கில் மதத்தில் தீவிரப் பற்றுள்ளவர்கள் விரும்பலாம், ஆனால் சராசரி முஸ்லிம்கள், ஆட்சி அப்படித்தானிருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. உலகின் இதர நாடுகளும் சீனத்தில் இருப்பதைப்போன்ற ‘அரசியல் முறைமை’ நம் நாட்டிலும் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.

கவலை தரும் சூழல் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைவதற்கே வாய்ப்பு காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் காணப்படும் பொருளாதாரத் தேக்க நிலைக்கு மாறாக இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் வரலாற்றுப் பூர்வமான வலிமையே அதன் பன்முகத்தன்மைதான். 2,200 சாதிகளும் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பெரும் பழங்குடி வகுப்புகளும் கொண்ட இந்தியா வித்தியாசமாகவே காட்சி தருகிறது. இங்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்குப் பொறாமை ஏற்படுவதே இல்லை! அடிப்படையிலேயே நாம் மிகுந்த சகிப்புத்தன்மை உள்ளவர்கள். எனவே ஆர்எஸ்எஸ் முயற்சி செய்யும் பெரும்பான்மையின வாதத்துக்கு இங்கே ஆதரவு கிடைக்காது. தோல்வியைத் தழுவும்.

இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம் மோசமான அரசு நிர்வாகம், எங்கும் நிறைந்துள்ள ஊழல் ஆகியவைதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழலுக்கு எதிர்வினையாகத் தோன்றிய மக்களின் ஆதரவுதான் மோடிக்கும் கேஜ்ரிவாலுக்கும் கிடைத்த அரசியல் வெற்றி. ஆனால் இப்போது இந்தக் கலகம் - குஜராத்தின் படேல்கள், மகாராஷ்டிரத்தின் மராத்தாக்கள், ஹரியாணாவின் ஜாட்டுகள், அசாமின் ஆஹோம்கள் என்ற - செல்வாக்குமிக்க சாதியினரிடத்திலும் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையாக பரவிக் கொண்டிருக்கிறது. 2016-ல் தீவிரம் அடைந்த இந்தக் கலகங்கள் சமூகநீதிக் கோட்பாடு அடிப்படையிலான அரசியலுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும். இதற்கிடையில், ஊழல் மீது மக்களுடைய கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந் நடவடிக்கையால் கறுப்புப் பணக் குவிப்பு எந்த விதத்திலும் பாதிப்படையாது என்பதைக் கடந்த 2 மாத அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் அதன் ஊற்றுக்கண்ணை முதலில் அடைக்க வேண்டும். எனவே நிர்வாகத்துறை, காவல்துறை, நீதித்துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கள்ளப் பணம் சேராமல் தடுக்க வீடு நிலம் வாங்கும்போது உயர் மதிப்பில் முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையைக் கைவிட வேண்டும். தங்கத்தின் மீது சுங்க வரியை விதிப்பதை நிறுத்தினால் தங்கக் கடத்தல் முடிவுக்கு வரும். அரசியல் கட்சிகளுக்கான அனைத்து நன்கொடைகளும் ‘ஆன்-லைன்’ மூலம்தான் பெறப்பட வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும்.

மிகவும் மோசமாகக் கையாளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரசியல் ரீதியாக மோடிக்கு எதிரான உணர்வுகளை அது அதிகப்படுத்திவிடவில்லை. மேற்கத்திய சமூகங்களைப் போல நாம் நம்பிக்கை இழந்த சமூகமாக இல்லாமல், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கைகளோடு வாழ்கிறோம். 1991 முதல் இந்தியாவின் வளர்ச்சி சுதந்திரமான அரசியல் சூழலாலும், உலக நாடுகளுடனான தடையற்ற வர்த்தகத்தினாலும் அதிகரித்தது. பிரான்சிஸ் ஃபுகுயாமாவின் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் சரி என்பதையே இது அங்கீகரிப்பதைப்போல இருக்கிறது. கலாச்சார ரீதியிலான சகிப்புத்தன்மையற்ற போக்கை மோடி கட்டுப்படுத்தினால் உலக நாடுகளுக்கு இந்தியா ஊக்க சக்தியாகத் திகழும். ஜனநாயகம் தடையற்ற சந்தைகள் அடிப்படையில் இந்தியா வளர்ச்சி பெறுவது உலக அளவில் தாராள சிந்தனைகள் மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும்.

சுருக்கமாகத் தமிழில்: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்