கிடப்பில் போடப்படுகிறதா கீழடி?

குஜராத்தில் உள்ள வட் நகரில் (நரேந்திர மோடியின் சொந்த ஊர்) மத்திய தொல்லியல் துறையின் கீழ், 2017 ஆண்டுக்கான அகழாய்வுப் பணியின் தொடக்க விழா நவம்பர் 10-ம் தேதி நடந்தது. இவ்விழாவில் குஜராத் மாநில முதல்வரும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரும் பங்கெடுத்துள்ளனர்.

இதே போன்று கடந்த ஆண்டு அகழாய்வுப் பணி நடைபெற்ற 'ஜூர்' என்னுமிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. அங்கும் 2017-ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணியின் தொடக்க விழா ஜனவரி 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. பிஹாரில் உள்ள 'உரைன்' என்ற இடத்தில் அகழாய்வுப் பணி டிசம்பரில் தொடங்கப்பட்டுவிட்டது.

புறக்கணிக்கப்பட்ட கீழடி

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த கீழடி அகழாய்வுப் பணியின் 2017-ம் ஆண்டுக்கான தொடக்கம் இப்போதுவரை நடைபெறவில்லை. விசாரித்தால் அகழாய்வைத் தொடர்வதற்கான அனுமதியை மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ளது எனத் தெரிய வருகிறது.

கீழடியோடு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட வடஇந்தியப் பகுதியைச் சேர்ந்த பிற இடங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழகத்தில் அகழாய்வு நடந்த ஒரே இடத்துக்கும் அனுமதி மறுக்கப்படுவது எதனால்? புதியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தொல்லியல் பொருட்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான். அதன் தொடர்ச்சியாக அகழாய்வை விரிவுபடுத்தும் முன்னுரிமை கீழடிக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் காரணம் என்ன? எந்தக் காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லாமல், அதே நேரத்தில் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போடுகிற வேலையைச் செய்கிறது மத்திய தொல்லியல் துறை.

குஜராத்தின் தோலாவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் 10 ஆண்டுகளும் குஜராத்தின் லோத்தல், உ.பியின் அகிசித்ராவில் ஆறு ஆண்டுகளும் அகழாய்வைச் செய்தவர்கள், கீழடியில் மட்டும் இரண்டே ஆண்டுகளில் அகழாய்வை முடிவுக்குக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன? மகாபாரதம், ராமாயணம் தொடர்பான பகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் சிருங்கவீர்பூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அகழாய்வுகள் நடந்துள்ளன என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

கார்பன் பகுப்பாய்வு

அகழாய்வில் கிடைக்கும் கரி மூலப் பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி 'கார்பன்-14' பகுப்பாய்வு முறையில் ஆய்வுசெய்து அப்பொருளின் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் பீட்டா அனாலிசிஸ் ஆய்வு நிறுவனத்துக்கு இவை அனுப்பப்படுகின்றன.

அகழாய்வில் கண்டறியப்படும் பொருட்களில், எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை 'கார்பன்-14' பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறையே முடிவுசெய்கிறது. ராஜாஸ்தானின் காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவற்றுள் 28 பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தோலாவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியும், கிரிசராவில் இருந்து 15 பொருட்களின் மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், கீழடியில் எடுக்கப்பட்ட மூலப்பொருள் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான் 'கார்பன்-14' பகுப்பாய்வுக்கு அனுப்ப தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் பத்து மாதிரிகளையாவது அனுப்ப வேண்டும் என்பதே கீழடியை அறிந்த தொல்லியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

பின்னணி என்ன?

இரும்புக் காலத்தில் தொடங்கி வரலாற்று ரீதியான ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ள இடம் கீழடி. இவ்வாதாரங்களின் மாதிரிகள் 'கார்பன்-14' பகுப்பாய்வு செய்யப்படும் போதுதான், கால வளர்ச்சியைத் துல்லியமாக நிறுவ முடியும். அப்படி நிறுவப்படுவதை ஏற்கும் மனநிலையில் இருப்பவர்கள், கிடைத்தவற்றுள் அதிகமான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப முன்வருவார்கள். அவ்வாறு முன்வர மறுப்பதி லிருந்து அவர்களின் நோக்கம் வெளிப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இரண்டே ஆண்டுகளில் அகழாய்வை முடிப்பதென்பது அவ்வாய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அறிஞர்களை எவ்விதமான, தெளிவான முடிவுக்கும் வரவிடாத நிலையைத் திட்டமிட்டே உருவாக்குவதாகும். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில், வெறும் 15%க்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வை நடத்தினால், எந்த ஒரு முடிவையும் நிறுவுதல் இயலாத காரியம். இந்நெருக்கடிக்குள் ஆய்வாளர்களைத் தள்ளும் நோக்கம்தான் இச்செயலின் பின்னணியா?

2005-ம் ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூரின் ஆய்வு முடிவுகள் இப்போது வரை வெளிவரவில்லை. ஆனால், அதே காலத்திலும் அதற்குப் பின்னாலும் அகழாய்வு நடந்த ஆதம் (மத்தியப்பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) செக்-86 (ராஜஸ்தான்) ஆகிய இடங்களின் அகழாய்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. கீழடியின் அகழாய்வுப் பணியை அரைகுறையாக முடிவுக்குக் கொண்டுவருதல் என்பது இந்த ஆய்வறிக்கையையும் முடிக்க முடியாமல் கிடப்பில் போடவைக்கும் முயற்சியின் வெளிப்பாடா என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

அருங்காட்சியகத்துக்கு 151 கோடி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாடு கடந்த வாரம் (டிச 29, 30) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடியின் கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர், "தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அவ்வாய்வு மேலும் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார். ஆனால், இங்கு எல்லாம் தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த மாதம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம்தான், கீழடியில் கிடைத்துள்ள இரண்டு மாதிரிகளை மட்டும் கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பினால் போதும் என்று வெறும் ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

ஆனால், செய்ய வேண்டியவை எல்லாம் இனிதான் இருக்கின்றன. தமிழகத்தின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் உடனடியாக இதுகுறித்து வினையாற்ற வேண்டும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கீழடிக்கான குரல் வலியுறுத்தப்பட வேண்டும்.

பெரும் மதங்களும் கடவுளர்களும் உருவாகாத ஒருகாலத்தில் மலர்ந்திருந்த நாகரிகத்தின் சான்றுதான் கீழடி. அங்கு கிடைத்துள்ள 5,300 தொல்பொருட்களில் மத அடையாளம் சார்ந்த பொருள் எதுவுமில்லை. பெருமதங்களின் ஆதிக்கம் உருவாகாத ஒருகாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நாகரிகத்தின் எச்சங்கள் இவை. இங்கு அகழாய்வைத் தொடரவைப்பதும் அவ்வடை யாளங்களைப் பாதுகாப்பதென்பதும் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தம்மிக்க பண்பாட்டுச் சாரத்தைப் பாதுகாக்க எத்தனிப்பதாகும். என்ன செய்யப் போகின்றன தமிழகத்தின் அரசியல் கட்சிகள்?

-சு.வெங்கடேசன், 'காவல் கோட்டம்' நாவலாசிரியர் | தொடர்புக்கு: suvetpk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

10 mins ago

உலகம்

12 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

47 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்