உலகை நம் வசமாக்கும் வாசிப்பு

By அரவிந்தன்

ஆசிரியர்களின் பங்கு நம் வாழ்க்கையில் மிகவும் தேவை. கல்விக்கூடங்களில் நாம் பெறும் ஆசிரியர்கள் மட்டுமல்ல. அதற்கு வெளியிலும் பல்வேறு ஆசிரியர்கள் நமக்குப் பல்வேறு விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள், வழிகாட்டுகிறார்கள். தனது அனுபவம், அறிவு, சிந்தனை ஆகியவற்றைப் பிறருக்குப் பயன்படும் வண்ணம் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொருவரும் ஆசிரியர்தான்.

நமக்கு அண்மையான சூழலில் இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து நாம் பலன் பெறுகிறோம். தொலைவில் இருக்கும் ஆசிரியர்களையும் தேடிச் செல்கிறோம். நிலப்பரப்பின் இடைவெளியைக் கடந்து நம்மால் ஆசிரியர்களை அடைய முடியும். காலம் என்னும் பரப்பைக் கடந்து நம்மால் செல்ல முடியுமா?

புத்தகங்களின் மூலம் முடியும். நூல்களை வாசிப்பதன் மூலம் நாம் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த சிந்தனையாளருடனும் படைப்பாளியுடனும் உறவாட முடியும். நிலப்பரப்பின் இடைவெளியைக்கூட ஓரளவுக்கு மேல் நம்மால் கடக்க முடியாது. அப்போதும் நமக்குக் கைகொடுப்பவை நூல்கள்தாம். உலகின் எந்த மூலையிலிருந்தும் உருவாகும் சிந்தனை வளமும் படைப்புத் திறமும் அறிவின் வீச்சும் நூல்கள் மூலம் நம்மை வந்தடைகின்றன. இவ்வாறாகக் காலத்தையும் இடத்தையும் கடந்து நமக்கு நண்பனாக, நல்லாசிரியனாக, வழிகாட்டியாக விளங்குபவை நூல்கள். இந்த நூல்களின் மூலம்தான் வால்மீகி, திருவள்ளுவர், கம்பன், காளிதாசன், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், காரல் மார்க்ஸ், அரிஸ்டாட்டில், ராமகிருஷ்ணர், காந்தி, காப்ரியேல் கார்ஸிக்யா மார்க்கேஸ், மிலன் குந்தேரா, நோம் சோம்ஸ்கி போன்றவர்கள் காலத்தையும் இடத்தையும் தாண்டி நம்மிடம் உரையாடுகிறார்கள்.

வாசிப்பு நம்முடன் இருந்தால், தன்னால் முடிந்த அளவு தாவிக் குதித்துவிட்டு, ‘கடல் இவ்வளவு பெரிதாக இருக்குமா?’ என்று கேட்கும் அப்பாவித் தவளையாக நாம் இருக்க மாட்டோம். வாசிப்பு நம்மை நமது கிணற்றிலிருந்து, குட்டையிலிருந்து, சிறிய நிலப்பரப்பிலிருந்து வெளியே கொண்டுசெல்கிறது. விரிந்த வயல் வெளிகளையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் பெருங்கடல்களையும் அறிமுகப்படுத்துகிறது. வாசிப்பு இல்லாத அறிவு என்பது குறுகிய எல்லைகளுக்கு உட்பட்டதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், வாசிப்பு என்பது இந்தப் பிரபஞ்சம் அளவு விரிந்தது.

இந்தியத் தத்துவ மரபில் உலகையும் அதன் உண்மைகளையும் அறிவதற்கான கருவிகள் (பிரமாணங்கள்) என முக்கியமாக மூன்று அம்சங்களைச் சொல்வார்கள். பிரத்யட்சம், யூகம், அனுபவ வாக்கு. பிரத்யட்சம் என்பது நேரில் கண்டு, கேட்டு அறிவது. யூகம் என்பது ஏற்கெனெவே தெரிந்ததைக் கொண்டு தெரியாதவற்றை யூகித்து அறிவது. அனுபவ வாக்கு என்பது பிறரது அனுபவங்களைக் கேட்பதன் மூலம் அறிவது. பிரத்யட்சம் என்பது எல்லைக்குட்பட்டது. யூகம் என்பது முதல் கருவியின் மூலம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது தரும் அறிவும் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும். அனுபவ வாக்கின் வீச்சு ஒவ்வொருவருடைய இருப்பிடம், தெரிந்த நபர்கள் ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கும்.

நூல்கள் இடம், காலம் ஆகியவற்றைத் தாண்டி அனுபவங்களை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்று கின்றன. மயிலாடுதுறையில் வாழ்பவருக்குக் கிடைக்கக் கூடிய அனுபவங்களும் நியூயார்க்கில் வாழ்பவர் பெறக் கூடிய அனுபவங்களும் ஒன்றல்ல. உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை வலம் வரும் திறனை நமக் களிப்பவை நூல்கள். எந்த இடத்திலும், எந்த மொழி யிலும், எந்தக் காலத்திலும் சொல்லப்பட்ட அனுபவங் களும் நூல்களின் மூலம் நம்மை வந்தடைந்துவிடும். இதன் மூலம், நமது அறிவின் பரப்பும், வீச்சும் அனுபவ சாத்தியங்களும் விரிவடைந்துகொண்டே போகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைப்பது ஒரே ஒரு வாழ்க்கை. நூல்களின் மூலம் ஓராயிரம் வாழ்க்கையை நாம் அறியலாம். நூல்கள் நம்மோடு இருக்கும்வரை நம் எல்லைகளை யாரும் வரையறுத்துவிட முடியாது. நூல்கள் பிரபஞ்சம் தழுவி விரிந்துகொண்டே செல்கின்றன. நம்மையும் உடன் அழைத்துச் செல்கின்றன.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

விளையாட்டு

39 mins ago

இணைப்பிதழ்கள்

51 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்