ஜல்லிக்கட்டுச் சட்டத்தை 9-வது அட்டவணை பாதுகாக்குமா?

வரலாற்றுப் புகழ் மிக்க போராட்டம் நடந்திருக்கிறது தமிழகத்தில். ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பதற்காக இளைய தலைமுறை ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தார், குழந்தைகள், பொதுமக்கள் என்று லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஏழு நாட்கள் போராடினார்கள்.

மத்திய - மாநில அரசுகள் பணிந்தன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசரச் சட்டத்தின் ஆயுள் ஆறு மாதம்தான். எனவே, நிரந்தரச் சட்டத்துக்கான மசோதாவும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசிதழில் (கெஜட்) வெளியிடப்பட்டால்தான் இந்த மசோதா சட்டமாகும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனவே, மிக விரைவில் இது சட்டமாகிவிடும். சரி, இந்தச் சட்டமும் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாதே, என்ன செய்வது?

“அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இந்தச் சட்டத்தைச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்துவிட்டால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்தச் சட்டத்தைப் பாதுகாத்துவிடலாம்” என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். எனவே, “ஜல்லிக்கட்டு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்” என்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் சிலரும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று பலரும் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இது சரிதானா?

இல்லை. ஒரு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால்கூட உச்ச நீதிமன்றம் தலையிட முடியும். அந்தச் சட்டம் செல்லும் என்றோ, செல்லாது என்றோ அது தீர்ப்பளிக்க முடியும்.

அரசமைப்புச் சட்டத்தில் 9-வது அட்டவணை என்று ஒன்று உள்ளது. இந்த அட்டவணையில் ஒரு சட்டத்தைச் சேர்க்க வேண்டுமானால், அதற்காக அரசமைப்புச் சட்டத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதன்படி அந்தச் சட்டம், அட்டவணையில் சேர்க்கப்பட்டு விட்டால், அந்தச் சட்டமோ, சட்டப் பிரிவுகளோ செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது என்று அரசமைப்புச் சட்டத்தின் 31 பி பிரிவு கூறுவது உண்மைதான். அதேபோல 31 சி பிரிவிலும் இருந்தது உண்மைதான்.

ஆனால், கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு 1973-ல் ஒரு தீர்ப்பை அளித்தது. “எந்தச் சட்டத்தையும் பரிசீலித்துத் தீர்ப்பு அளிப்பதற்கும் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரமானது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாகும் (Basic feature, Basic structure, Fundamental feature); மற்ற பல விஷயங்களும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களாகும். அடிப்படை அம்சங்களைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அப்படித் திருத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்தச் சட்டம் எதையும் நாடாளுமன்றம் நிறைவேற்றினால், அந்தத் திருத்தச் சட்டமும் செல்லாது” என்பதே அது.

“எவையெல்லாம் அடிப்படை அம்சங்கள் என்று மொத்தமாகச் சொல்ல முடியாது” என்றும், “ஒவ்வொரு வழக்கின்போதும் அதன் தன்மையைப் பொருத்துத்தான் சொல்ல முடியும்” என்றும் ராஜ்நாராயணன் வழக்கில் 1975-ல் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. பிறகு நடந்த பல வழக்குகளில் மதச்சார்பின்மை உள்ளிட்ட பல விஷயங்கள் அடிப்படை அம்சங்களாகும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

அடிப்படை அம்சம் என்ற கோட்பாட்டை அளித்த கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு 24.4.1973 அன்று அளிக்கப்பட்டது. எனவே, அந்தத் தேதியிலோ அல்லது அதற்குப் பிறகோ 9-வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்களை நீதிமன்றம் பரிசீலித்துத் தீர்ப்புக் கூறலாம் என்று வாமன் வழக்கில் 1981-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையொட்டி 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பல சட்டங்கள் செல்லாது என்றும், மற்ற பல சட்டங்கள் செல்லும் என்றும் தனித்தனி வழக்குகளில் தீர்ப்புக் கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்புகளில் உருவான சில சந்தேகங்களைப் போக்கும் வகையில், கோயல்ஹோ வழக்கில் 9 நீதிபதி களைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு 2007-ல் பல விளக்கங்களை அளித்தது. ஒன்பதாவது அட்டவணையில் ஒரு சட்டத்தைச் சேர்ப்பது குறித்த சட்டத் திருத்தத்தையும் நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று அந்தத் தீர்ப்பு தெளிவாக்கியது. நீதிமன்றத்தின் அதிகாரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களைத் திருத்த முடியாது என்ற முந்தைய தீர்ப்பை மேலும் தெளிவாக்கியது.

சுருக்கமாகச் சொன்னால், நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டு எந்தச் சட்டத்தையும் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ இயற்ற முடியாது என்பதுதான் இந்தத் தீர்ப்புகளின் சாரம்.

69% இடஒதுக்கீடு எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?

அப்படியானால், தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டுவருகிறதே, அது எப்படி என்று உடனே கேள்வி எழலாம். ஒரு விதத்தில், தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுச் சட்டம் பாதுகாக்கப்படவில்லை என்பதே இதற்கான பதில்.

அரசு, அரசு நிறுவன வேலைவாய்ப்பிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையிலும் 50%-க்குக் கீழேதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று 1992-ல் இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனே, “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அளிக்கப்பட்டு வந்த 69% இடஒதுக்கீடு செல்லாது” என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைச் சமாளிப்பதற்காக ஒரு சட்டத்தைத் தமிழக அரசு இயற்றியது. அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதைச் சேர்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுச் சட்டம் 9-வது அட்டவணையில் 1994-ல் சேர்க்கப்பட்டது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கருதப்பட்டது. ஆனால் நடந்தது வேறு. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணக்கு எடுத்துக்கொண்டு விசாரித்தது. இடைக்கால உத்தரவையும் 1994-ல் பிறப்பித்தது.

“தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் 69% இடஒதுக்கீட்டின் காரணமாக பொதுப் போட்டிக்கு 31% மட்டுமே கிடைத்திருக்கிறது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது. எனினும், இப்போது 69% - 31% என்று நிரப்பப்பட்டுள்ள இடங்களை ரத்து செய்யவில்லை. அது நீடிக்கட்டும். ஆனால், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும். இப்போதுள்ள மொத்த இடங்களில் 50% பொதுப் போட்டிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால், எவ்வளவு இடங்கள் கிடைத்திருக்குமோ அவ்வளவு இடங்களை அதிகரிக்க வேண்டும். அந்த இடங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும். 1994-95 என்ற ஓராண்டுக்கு மட்டும் இந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டும்” என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்றுவரை ஒவ்வோர் ஆண்டும் பிறப்பிக்கப்பட்டுவருகிறது. வழக்கு இன்னும் நடந்துவருகிறது. எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இப்போது 69% இடஒதுக்கீடு இல்லை என்பதே இப்போதைய நிலை.

ஆகவே, ஜல்லிக்கட்டுச் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்ப்பதால், புதிதாக எந்தப் பாதுகாப்பும் கிடைக்க வாய்ப்பில்லை. மக்களின் மேம்பட்ட ஒற்றுமையும் மேம்பட்ட போர்க்குணமுமே பாதுகாப்பு!

- இரா. ஜவஹர், பத்திரிகையாளர், மார்க்சிய ஆய்வாளர்.

தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்