அவசரச் சட்டங்களின் ஆட்சி நல்லதல்ல!

ஜனவரி 2 அன்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியது. ‘கிருஷ்ணகுமார் சிங் - எதிர் - பிஹார் மாநில அரசு’ வழக்கில், ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்காலத்தில் பாடமாக இருக்கும் அளவுக்குப் பல அம்சங்களை அறிவித்தது. அவசரச் சட்டம் மூலம் சட்டம் இயற்றுவதற்கு நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான அரசியல் சட்ட நுணுக்கங்கள் பல இவற்றில் அடங்கும். 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் 5 நீதிபதிகள் சார்பில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எழுதிய தீர்ப்பு, மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும் முக்கிய அம்சங்களை இறுதியாகத் தொகுத்த வடிவிலும் இருந்தது.

நெருக்கடியான சந்தர்ப்பங்களில், நிர்வாக வசதிக்காகச் சட்டம் இயற்றிக்கொள்ள கொடுத்த ஒரு ஏற்பாட்டை, ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கைவிடுவதற்காகப் பயன்படுத்தும் போக்குக்கு இத்தீர்ப்பு ஒரு தடுப்பணை போடுகிறது. “அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரமானது, எந்த வரம்பும் கட்டுப்பாடுகளும் அல்லாத முற்று முழுதான உரிமை கிடையாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி சந்திரசூட். ‘அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது - அதே வேளையில், நடைமுறைகளின்படி சட்டமியற்றி அதன் பிறகு செயல்படுவதற்கான அவகாசம் போதாமல் இருக்கிறது’ என்ற சூழலில்தான் அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்.

அம்பேத்கர் விரும்பாத வார்த்தை

அவசரச் சட்டங்களாக இருந்தாலும் நீதித் துறையின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதல்ல. சட்டங்களை இயற்றும் அவசர வழிமுறை குறித்த அச்சமும் ஆட்சேபமும் அரசியல் சட்ட நிர்ணய சபையின் கூட்டங்களிலேயே இருந்தன. இது தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்த அம்பேத்கர், அதை நுட்பமாக விளக்கினார்.

“அவசரச் சட்டம் இயற்றும் இந்த நடைமுறை பற்றிய விளக்கம், ‘குடியரசுத் தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம்’ என்ற தலைப்பின் கீழ் வந்திருப்பதால், மரியாதைக்குரிய எனது நண்பர்கள் எச்.வி. காமத், எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் கலக்கமடைந்து பேசுகின்றனர். ‘நாடாளுமன்றம் கூடாத நேரத்தில் சட்டமியற்றும் அதிகாரம்’ என்ற தலைப்பின் கீழ் இது வந்திருக்க வேண்டும். அப்படித் தலைப்பிட்டிருந்தால், இந்தப் பிரிவுக்கு எதிராக எழுந்த ஆட்சேபங்கள் குறைந்திருக்கும். ‘அவசரச் சட்டம்’ என்பது மோசமான வார்த்தைதான், இதைவிட நல்ல வார்த்தையை நண்பர் காமத் தெரிவிப்பாரென்றால், முதல் ஆளாக அதை ஏற்றுக்கொள்வேன்.

அவசரச் சட்டம் என்ற வார்த்தையை நானும் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக இன்னொரு வார்த்தையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பேசியிருக்கிறார் அம்பேத்கர்.

அவசரச் சட்டம் இயற்றுவதற்கான அரசியல் சட்ட அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் மத்திய - மாநில அரசுகள் நினைத்தபோதெல்லாம் அவசரச் சட்டமாக இயற்றிவிடும் இன்றைய நிலவரத்தை அம்பேத்கர் நேரில் பார்த்தார் என்றால், தன்னுடைய முந்தைய முடிவைக்கூட மாற்றிக்கொண்டிருப்பார். இப்போது அவசரச் சட்டங்களை இயற்றுவதற்கான காரணங்கள் எந்தவித தர்க்க நியாயத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றன.

நீதித் துறையின் கடமை

நீதித் துறை, சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஆட்சித் துறை, நிர்வாகத்தை நடத்திச் செல்லும் அதிகார வர்க்கத் துறை மூன்றின் அதிகாரங்களும் தனித் தனியாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டத்தை இயற்றியவர்களின் நோக்கம். நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் பணி சட்டங்களை இயற்றுவது. இந்தச் சட்டங்களின்படி நிர்வாகம் செய்வது அதிகாரத் துறையின் வேலை. இந்தச் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப் படுகின்றனவா, அரசியல் சட்டத்துக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் பொருந்தி சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதுடன், இது தொடர்பாக எந்தத் துறைக்காவது சந்தேகம் ஏற்பட்டால், விளக்கம் அளிப்பதும் நீதித் துறையின் கடமை. எனவே, சட்டம் இயற்றும் அதிகாரம் இந்த ஏற்பாடுகளுக்கே முரணாக இருக்கிறது. அரசின் மற்ற இரண்டு துறைகள் செயல்படுவதைக் கண்காணிப்பதாகவோ, சமநிலையைப் பராமரிப்பதாகவோ இந்த அவசரச் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை.

விதிவிலக்கான நடவடிக்கை

அசாதாரணமான சூழல்களில், அவசரத் தேவைகளுக்காக மட்டுமே அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அரசியல் சட்டத்தின் 123-வது பிரிவு, இந்த அதிகாரத்தை விளக்குகிறது. “மத்திய அரசும் மாநில அரசுகளும் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கூடாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திருப்திப்படும் நிலைமை இருந்தால் மட்டுமே, தேவைப்படும் விதத்தில் அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பார்” என்கிறது.

நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் வழக்கமான சட்டங்களுக்கு உள்ள வேகமும், பலனும் அவசரச் சட்டங்களுக்கும் உண்டு. அவசரச் சட்டம் பிறகு முறைப்படி வழக்கமான சட்டமாக உரிய வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நாடாளுமன்றக் கூட்டம் கூடியும், அவசரச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டம் இயற்றப்படாவிட்டால், நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குப் பிறகு தானாகவே அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும்.

இதற்கிடையில், அந்த அவசரச் சட்டம் செல்லாது என்று நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினாலும் செல்லாததாகிவிடும். இதேபோல அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியல் சட்டத்தின் 213-வது பிரிவின் கீழ் மாநில ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில், மாநில அதிகார வரம்புக்குட்பட்ட விஷயங்களுக்கு அவசரச் சட்டம் இயற்றிக்கொள்ளலாம்.

ஆய்வுக்கு உட்பட்டவையே!

நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பின்போது வேறு ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார். “அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மட்டுமல்ல, எந்தவொரு அவசரச் சட்டமும் முதல் முறையாகப் பிறப்பிக்கப்படும்போதும் நீதித் துறையின் பரிசீலனைக்கு உட்பட்டதே.” குடியரசுத் தலைவர் முன்போ, ஆளுநர் முன்போ வைக்கப்படும் அவசரச் சட்டங்கள் போதுமான தரவுகள், தகவல்களுடன் உள்ளனவா என்று பார்ப்பது மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் மோசடியாகவோ, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ கொண்டுவருகிறார்களா என்று பரிசீலிக்கக்கூட நீதித் துறைக்கு அதிகாரம் உண்டு என்று சந்திரசூட் பதிவுசெய்திருக்கிறார்.

அவசரச் சட்டம் அவசியம் என்பதற்குப் போதுமான தரவுகள் உள்ளனவா, அதில் அரசியல் உள்நோக்கமோ, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்போ இருக்கிறதா என்று நீதித் துறை ஆய்வு செய்யும்.

அவசரச் சட்டம் தற்காலிகச் சட்டமா?

அவசரச் சட்டம் என்பது தற்காலிகச் சட்டம் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், “தற்காலிகச் சட்டம் என்பதற்கும் அவசரச் சட்டம் என்பதற்கும் திட்டவட்டமான வேறுபாடு இருக்கின்றன. சட்டத்தை இயற்றும்போதே எத்தனைக் காலம் வரையில் இது அமலில் இருக்கப்போகிறது என்பதை வரைவு வாசகத்தில் குறிப்பிட வேண்டும்” என்கிறார் சந்திரசூட்.

“குறிப்பிட்ட காலத்துக்கு இயற்றும்போது அந்தச் சட்டப்படி மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகள், அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் தெளிவாக்கப்படும். குறிப்பிட்ட காலம் கடந்ததும் அந்தச் சட்டம் பரிசீலனைக்கு வந்துவிடும் அல்லது காலாவதியாகக்கூடும். அவசரச் சட்டம் அப்படியல்ல. அது சட்டமன்றத்தாலோ, நாடாளுமன்றத்தாலோ விவாதித்து இயற்றப்படுவதல்ல. ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தின் உதவியோடு தயார் செய்வது. எனவே, இந்த அவசரச் சட்டங்களால் என்ன பலன் ஏற்படும் என்று நீதித் துறை ஆய்வு செய்ய வேண்டும். பொதுநலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அது செயல்படுத்தப்பட்டால் நீதித் துறை தலையிட வேண்டும்” என்கிறார்.

மக்கள் மன்ற அதிகாரம்

அவசரச் சட்டங்கள் காலாகாலத்துக்கும் தொடர்ந்து நல்ல பலன்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் என்று கூறிவிட முடியாது. அது பொதுநலனுக்கு உகந்த வகையில் செயல்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். சில வேளைகளில் பொது நலன் கருதி, அந்த அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை நியாயமாக இருந்தாலும், அவசரச் சட்டம் ஏற்படுத்திய விளைவுகள் திரும்பப் பெற முடியாத நிலையை ஏற்படுத்திவிடக்கூடும். இந்த நடவடிக்கைகளையெல்லாம் அடுத்தடுத்து அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுக்கள்தான் ஆய்வுசெய்து சீர்படுத்த முடியும்.

அரசு நிர்வாகம் அடிக்கடி தவறாகப் பயன்படுத்திய அவசரச் சட்ட அதிகாரத்தை உரசிப் பார்க்கும் நடவடிக்கையாக நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்க்க வேண்டும். சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ மசோதாவாகக் கொண்டுவந்து விவாதிப்பதும் விளக்குவதும் அரசுக்குக் கடினமான காரியங்களாக இருக்கலாம். ஆனால், நம்முடைய ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் சட்டமியற்றும் அதிகாரம் படைத்தது மக்கள் மன்றங்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

- சுரீத் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்