வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!

By எச்.பீர்முஹம்மது

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் சமூக நகர்வு உருவாகியிருக்கிறது. இந்த நிகழ்வு எல்லாச் சமூகங்களுக்கும் சாதகமாக இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு மற்றொன்று நகர்வது பன்மைத்தன்மை கொண்ட தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல.

இடம்பெயரும் முஸ்லிம்கள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கி, அதே நேரத்தில் நடைபாதைக் கடைகள், பலசரக்கு வியாபாரம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகம், புலம்பெயர்வதன் மூலம் தனக்கான இரையைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட தமிழ் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லாம் அரபு நாடுகளில் வாழ்வாதாரத்துக்காகப் படையெடுக்கும் சூழலே பெரும்பாலும் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தொழில்மயமாதல், பொறியியல் கல்விமயமாதல் போன்ற நிகழ்வுகளின் காரணமாக நடுத்தர, மேல்தட்டு இஸ்லாமியக் குடும்ப இளைஞர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகளாக உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சதவீதத்தினர் பிழைப்பு தேடிப் பெருநகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். தகுதிகள் இருந்தும் இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் பல, இவர்களை நிராகரிக்கும் போக்கு இருக்கிறது. கூடவே, அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் பெருநகரங்களில் மிகப் பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது.

சென்னைக்கு முதலிடம்

வாடகைக்கு வீடுகள் கொடுப்பதில் இஸ்லாமியர்களை நிராகரிப்பதில் தமிழகத்திலேயே சென்னைக்குத்தான் முதலிடம் என்று சொல்ல வேண்டும். தோற்றத்தின் மூலம் இல்லையென்றாலும், பெயரைவைத்து இஸ்லாமியர் என்று எளிதில் அடையாளம் காணப்படும் ஒருவர், (பெயர்கள் அரபுமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது) தமிழ்நாட்டு நகரம் ஒன்றில் “வாடகைக்கு வீடு தருவீர்களா?” என்று கேட்ட உடனேயே வீட்டு உரிமையாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில் இதுதான்: “வேறொருவர் முன் பணம் கொடுத்துவிட்டார்.”

நாங்கள் முஸ்லிம்; பிரச்சினை இல்லையே?

பதிப்பாளராகவும் பத்திரிகையாளராகவும் இருக்கும் நண்பர் ஒருவர், என்னிடத்தில் சொன்ன தகவல் இது. சென்னையின் முக்கியப் பகுதி ஒன்றில் புதிதாகத் தான் கட்டிய வீட்டை வாடகைக்கு விடுவதற்காக அறிவிப்பு கொடுத்திருக்கிறார். இஸ்லாமியக் குடும்பம் ஒன்று வீடு கேட்டு வந்தது. அவர் எதிர்பார்த்த வாடகையை அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்ததால் அவர்களுக்கு வீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்தத் தருணத்தில் அவர்கள் கேட்ட கேள்வி, பத்திரிகையாளரான அவரின் நேர்மையான மனதை சங்கடப்படுத்தியிருக்கிறது: “சார், நாங்க முஸ்லிம். உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே?”

பலமுறை இதைக் கேட்டிருக்கிறார்கள். “யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. வாடகை ஒழுங்காக வந்தால் போதும்” என்று சொல்லியிருக்கிறார் நண்பர். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சகோதரத்துவ உணர்வோடு நகர்ந்துவந்த தமிழ்ச் சமூகம், தங்களின் இன சகாக்களை மத அடையாளத்துக்காக அல்லது பயங்கரவாத பிம்பத்துக்காக நிராகரிப்பது கவலைக்குரியது.

அன்று ஈழத் தமிழர்கள்; இன்று முஸ்லிம்கள்

ராஜீவ் காந்தி படுகொலை தருணத்தில், இங்குள்ள ஈழத் தமிழர்கள் சக தமிழர்களால் விடுதலைப் புலிகளாகப் பார்க்கப்பட்டதும், அவர்களால் ஒதுக்கப்பட்டதும் இதனோடு சேர்த்து கவனிக்கத் தக்கது. இதேபோல், இஸ்லாமியரை நிராகரிக்கும் போக்கு, சென்னையில் தொடங்கி தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிவருவது மிகவும் வருந்தத் தக்கது.

இது என்ன தமிழ்நாட்டில் மட்டுமா நடக்கிறது? நாடு முழுவதும் இதே போக்குதானே நிலவுகிறது; இன்னும் சொல்லப்போனால், இந்த நிராகரிப்பு சர்வதேச அளவிலானது அல்லவா என்று கேட்கலாம். தமிழ்நாட்டைக் கொஞ்சம் நாம் வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டும். காரணம், பெரியாரின் தாக்கமும் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியும்.

விதிவிலக்கான சில தருணங்களைத் தவிர, மதவாத அலையிலிருந்து எப்போதுமே தமிழ்நாடு ஒதுங்கியே இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்த மாதிரியான மனோபாவம் தொடர்வது மிகவும் ஆபத்தானது.

பயங்கரவாதம் காரணமா?

பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை அது இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்களால் அங்கீகரிக்கப் படவில்லை. மதப் பிரதிகளை எதிர்மறையாக அணுகும் சில குழுக்களே பயங்கரவாதச் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, நிராகரிக்கப்படும், அச்சுறுத்தப்படும் எந்தச் சமூகமும் நிராகரிப்பின் வலியால் அந்தக் குழுக்களின் வாதத்தோடு ஒருங்கிணைய வாய்ப்பிருக்கிறது. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

நிராகரிப்பின் அரசியல்

இஸ்லாமியர்களுக்கு வீடுகள் நிராகரிக்கப்படுவதற்கான அரசியல் என்ன? இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்புகள், பயங்கரவாதச் செயல்பாடுகளின் தாக்கமா இது? முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது. பயங்கரவாதச் செயல்பாடுகளைவிடவும் அது தொடர்பாக உருவாக்கப்படும் பிம்பங்களும் பீதிகளுமே அடிப்படை.

ஒரு குற்றச் சம்பவத்தில் ஒரு முஸ்லிம் கைதுசெய்யப்படும்போது, அவர்களுக்குத் தங்கியிருக்க வீடு கொடுத்த உரிமையாளர் காவல் துறையின் நெருக்கடிக்கு ஆளாகிறார். அலைக்கழிக்கப்படுகிறார். இப்படியான விஷயங்கள் ஊடகங்களில் வரும்போது, எல்லோரிடமும் அந்த பீதி உருவெடுக்கிறது. ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் அடையாளக் கறையாக அது படிகிறது. இதன் காரணமாக, எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் மனோபாவம் இயல்பாக உருவாகிறது. ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகம் சிறுபான்மையாக இருக்கும்போது, அந்தச் சமூக மனிதர்களின் குற்றச் செயல்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் செயல்பாடாகப் பார்க்கப்படுவது உலக வரலாற்றில் பல தருணங்களில் நடந்திருக்கிறது. இதுவும் ஒருவகையான பேரினவாதக் கருத்தாக்கம்தான்.

அறிமுகம் இல்லாத நபர்களின் அடையாளங்களையும் பின்னணியையும் உறுதிசெய்யும் வழிமுறைகள் தற்காலத்தில் ஏராளமாக இருக்கின்றன. மேலும், காவல் துறையின் நெருக்கடியையும் ஒருவர் சமாளித்துக்கொண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகள் வெளிப்படையாக இருக்கின்றன. எனவே, வீடு கேட்டு வருபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மேற்கண்ட வழிமுறைகளை வீட்டு உரிமையாளர்கள் பின்பற்றினால் எதற்கும் பயப்படத் தேவையில்லை. அப்படியில்லாமல், இஸ்லாமியர் என்று தெரிந்த மாத்திரத்திலேயே, “வேறொருவர் முன்பணம் கொடுத்துவிட்டார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்வதால் உண்டாகும் வடு அவ்வளவு சாதாரண மானதல்ல.

ஜனநாயக சக்திகளின் கடமை

இன்றைய தமிழ் இஸ்லாமியச் சமூகம் ஒதுங்குதல் மற்றும் ஒதுக்கப்படுதல் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியில் போராடிக்கொண்டிருக்கிறது. பொது நீரோட்டத்தில் கலப்பதுகுறித்த விமர்சனம் பலரால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. ஆனால், ஒதுக்கப்படுதல்குறித்த விமர்சனம் தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு சக்திகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பன்மைத்தன்மை பொருந்திய, நல்லிணக்க உறவுகள் உருவாக வேண்டும். மத நல்லிணக்கத்துக்கான முன்னோடியாகத் தமிழகம் திகழ வேண்டும்!

எச். பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peer1@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

8 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்