நாளை நிறைவடைகிறது நெய்வேலி கொண்டாட்டம்!

புத்தகக் காட்சிகளின் புரட்சியாளர்கள் என்று நெய்வேலிக்காரர்களைச் சொல்லலாம். தலைநகரம் சென்னை நீங்கலாக தமிழகத்தில் வேறு எந்த நகரமும் துணியாத முயற்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே முன்னெடுத்தவர்கள். வறண்ட பகுதி, வளர்ச்சியற்ற பகுதி என்றெல்லாம் சொல்லப்பட்ட பிராந்தியத்தில் துணிச்சலாகவும் மிக வெற்றிகரமாகவும் ஒரு புத்தகக் காட்சியை நடத்திக் காட்டியவர்கள். வட தமிழ்நாட்டின் வாசிப்புக் கலாச்சாரத்துக்கு வளம் சேர்த்தவர்கள்!

நெய்வேலியின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட புத்தகக் காட்சி, இந்த ஆண்டு புதிய உச்சம் தொட்டிருக்கிறது.

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) முன்னின்று, தன்னுடைய நகரியத்தில் நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, தமிழகத்தின் முக்கியமான அறிவியக்கங்களில் ஒன்று. கல்வி, பொருளாதார அலகுகளில் பின்தங்கிய பிராந்தியத்தில் 35 அரங்குகளுடன் தொடங்கிய நெய்வேலி புத்தகக் காட்சி, இம்முறை 150 அரங்குகளுடன் பிரம்மாண்டமாகியிருக்கிறது.

கடலூர் மட்டுமின்றி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடங்கி புதுச்சேரி வரை சுற்று வட்டார மக்களைப் பெருமளவில் ஈர்க்கும் புத்தகக் காட்சி இது. முதல் ஆண்டிலேயே சுமார் 25 ஆயிரம் பார்வையாளர்களை வரவழைத்த இந்தத் திருவிழாவுக்கு இப்போது லட்சக் கணக்கானோர், தமிழகம் முழுவதிலுமிருந்து பரவலாக வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளையும் சேர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இம்முறை குவிந்திருக்கின்றன. புத்தகங்கள் மட்டுமின்றி ஆடியோ, வீடியோ குறுந்தகடுகளும், மின் புத்தகங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

நெய்வேலியின் 11-வது வட்டத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் காலை 10 மணிக்கே தொடங்கிவிடுகிறது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 5. குழந்தைகள், மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. புத்தகங்கள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. 50% தள்ளுபடி தரும் பதிப்பகங்களும் இருக்கின்றன. ஜூலை 1 அன்று தொடங்கிய இந்த ஆண்டின் புத்தகக் காட்சி 10-ம் தேதியோடு நிறைவடைகிறது.

புத்தகக் காட்சியைப் பற்றி என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை தலைமைப் பொது மேலாளரும், புத்தகக் காட்சி குழுவின் செயலாளருமான

ஸ்ரீதரிடம் பேசுகையில், “நாளுக்கு நாள் நெய்வேலி புத்தகக் காட்சி விரிவடைகிறது. ஏனைய நகரங்களைப் போல அல்லாமல், காற்றோட்டமான சூழலில், ரம்மியமான இடத்தில் நடப்பதும் இங்கே உள்ளே சிறப்பான ஏற்பாடுகளும் தொலைதூர வாசகர்களையும்கூட இங்கே ஈர்க்கின்றன. கூட்டம் அதிகம் ஆக ஆக எங்கள் பொறுப்பும் அதிகரிக்கிறது. இன்னும் பெரிய இடம், கூடுதல் அரங்குகள், வசதிகள் செய்து தரும் திட்டத்தில் இருக்கிறோம். சீக்கிரமே எல்லா இந்திய மொழிகளின் புத்தகங்களும் கிடைக்கும் அளவுக்குப் புத்தகக் காட்சியை மேலும் விரிவாக்கத் திட்டமிடுகிறோம்” என்றார்.

அப்படி நடந்தால், தமிழகத்தில் ஒரு அகில இந்தியப் புத்தகக் காட்சி எனும் அந்தஸ்தை நெய்வேலி பெறும். நடக்கட்டும்!

‘தி இந்து’ அரங்கில் என்ன சிறப்பு?

நெய்வேலி புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ அரங்கு வாசகர்கள் எளிதில் அணுகத் தக்க வகையில் அமைந்துள்ளது (அரங்கு எண்: எஸ் 6). ஏனைய அரங்குகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு வெளியே அமைந்திருக்கிறது நம்முடைய அரங்கு.

நம்முடைய ஏனைய வெளியீடுகளோடு, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஸ்ரீராமானுஜர் 1000’, ‘ஆனந்த ஜோதி சிறப்பு மலர்’ இரு மலர்களும் இங்கே விற்பனைக்கு வந்திருக்கின்றன. “பத்திரிகையில தொடரா வரும்போதே புஸ்தகமா வந்தா வாங்கணும் நெனைக்குற எல்லாத்தையும் ‘நீங்க புஸ்தகமா கொண்டுவந்துடுறீங்க. இங்கெ வந்தா எதை வாங்குறது, எதை விடுறதுன்னே தெரியலையே!” என்று ஆனந்தம் பொங்க புத்தகங்களை அள்ளிச் செல்கிறார்கள் நம்முடைய வாசகர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 mins ago

தமிழகம்

19 mins ago

கல்வி

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

58 mins ago

மேலும்