வெளிநாட்டு உதவிகளை அரசு மறுக்கக் கூடாது!- பினராயி விஜயன் பேட்டி

By செய்திப்பிரிவு

மருத்துவ சிகிச்சைக்காக, ஆகஸ்ட் 19-ல் அமெரிக்கா புறப்படத் திட்டமிட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், வரலாறு காணாத மழை – வெள்ளத்தைத் தொடர்ந்து பயணத்தைத் தள்ளிவைத்தார். மீட்பு, நிவாரணப் பணிகளை மக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். வெள்ளம், அணைப் பாதுகாப்பு, ஐக்கிய அரபு அமீரக உதவி தொடர்பான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

கேரளத்தில் வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து மறுவாழ்வு, மறுகட்டமைப்பில் கவனம் திரும்பியிருக்கிறது. உங்கள் அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள் என்ன?

அடித்தளக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருத்த பின்னடைவு. அடித்தளக் கட்டமைப்புகளை வலுப்படுத்தத் திட்டங்களைத் தீட்டிவந்த நிலையில், எதிர்பாராத விதத்தில் இந்தப் பேரிடர் எங்களைத் தாக்கியது. வெள்ளச் சேதங்களிலிருந்து மாநிலத்தை மீட்பதும், வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதும் இரட்டை உத்திகளாகும். உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் உதவிகள் எங்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளன. இதனால், எங்களுடைய நம்பிக்கையும் ஆற்றலும் அதிகரித்திருக்கின்றன.

மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எங்களுடைய ஓராண்டு திட்டச் செலவைவிட (ரூ.29,150 கோடி) அதிகம் என்று முதல் மதிப்பீடு தெரிவிக்கிறது. கேரளத்தை எப்படிப் புதிதாகக் கட்டியெழுப்பப்போகிறோம் என்பதுதான் எங்கள் முன் உள்ள கேள்வி. கேரளத்தை மீண்டும் கட்டியெழுப்பும்போது சுற்றுச்சூழல் அம்சங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். ‘மறு சீரமைப்பு’, ‘மறு கட்டுமானம்’ மட்டுமல்ல, ‘புதிய கேரளத்தை உருவாக்குவோம்’ என்பதும் எங்களுடைய புதிய லட்சியம். இப்போதிருப்பதைவிட சிறந்த கேரளத்தை உருவாக்குவோம்.

இதற்கு எங்கிருந்து நிதியைத் திரட்டுவீர்கள்?

நிதி ஆதாரத்தைத் திரட்டுவதுதான் பெரும்பாடு. பல்வேறு வழிகளிலும் நிதியைத் திரட்டியாக வேண்டும். கேரளத்தை விரும்புகிறவர்கள் தாராளமாக நிதியளிக்கின்றனர். முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதித் தொகுப்புக்கு மட்டும் ரூ.1,000 கோடிக்கும் மேல் பணம் கிடைத்திருக்கிறது. இக்கட்டிலிருந்து மாநிலத்தை மீட்க நாம் அனைவரும் பணம் தர வேண்டும் என்ற எண்ணம் கேரளத்தவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு மாத ஊதியத்தை, தவணை முறையில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்கூட இந்தக் கருத்தை வரவேற்றுள்ளன. பல நிறுவனங்களும் தனியார்களும் தரத் தொடங்கிவிட்டனர். மத்திய அரசும் பெருமளவில் உதவ வேண்டும். சர்வதேச முகமைகளும் இதில் உதவலாம்.

சர்வதேச முகமைகள் பற்றிக் கூறினீர்கள். வெளிநாட்டு அரசுகளின் உதவி பெறப்படுமா?

சர்வதேச முகமைகள் என்று நான் கூறியது உலக வங்கி, ஐநா சபை போன்ற அமைப்புகளைத்தான். வெளிநாடுவாழ் மக்களும் அரசுகளும் அளிக்க முன்வந்தால், அவற்றை ஏற்க மறுக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உதவுவது வழக்கம்தான். 2016-ல் அரசு வகுத்த பேரிடர் மேலாண்மைத் திட்டத்திலேயே, வெளிநாடுகள் தாங்களாக முன்வந்து தரும் உதவிகளைப் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு தொடக்கத்தில் அளித்த தொகை போதுமா? நீங்கள் ரூ.2,000 கோடி கேட்டீர்களே?

மத்திய அரசு தரும் உதவி ஒரேயொரு தவணையோடு முடிந்துவிடுவதில்லை. அது கட்டம் கட்டமாக வரும். மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.600 கோடி முன் உதவித்தொகை மட்டுமே. ஆனால், அதுவே கணிசமான தொகைதான். உள்துறை அமைச்சர் அறிவித்த ரூ.100 கோடி, பிரதமர் அறிவித்த ரூ.500 கோடி சேர்ந்தால், மொத்தம் ரூ.600 கோடி. இந்த உதவித்தொகை, வழக்கமான பேரிடர் நிவாரண நிதித்தொகையில் சேராது. மத்திய அரசு கேரளத்துக்கு ஆதரவாகவே இருக்கிறது என்பதைத்தான் இத்தொகை காட்டுகிறது. சேதங்களின் மொத்த மதிப்பும் கணக்கிட்ட பிறகு மத்திய அரசு இதே போல தாராளமாக உதவியளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சில பன்னாட்டு நிதியமைப்புகளும் நிறுவனங்களும் உதவியளிக்க முன்வந்தன. அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த உதவிகள் கிடைக்க மத்திய அரசு சாதகமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். மழை-வெள்ளச் சேதத்தை மதிப்பிட உலக வங்கியிலிருந்தும் குழு வந்தது. மாநிலத்தின் தலைமைச் செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் குழுவினர் இது குறித்து ஆலோசித்தனர். கடனாக நிதி திரட்ட கேரளம் உத்தேசித்துள்ளது. இந்தக் கடன் வரம்பை உயர்த்த மத்திய அரசு அனுமதி தர வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தர விரும்புவதாக ஆகஸ்ட் 21-ல் கூறினீர்கள். டெல்லியில் அந்நாட்டுத் தூதர் அகமது அல் பன்னா, அப்படி எந்தத் தொகையும் குறிப்பிடப்படவில்லை என்றார். ஏன் இந்தக்  குழப்பம்?

குழப்பம் ஏதுமில்லை. ஒருவேளை, அவர்கள் ரூ.700 கோடிக்கும் மேல் கொடுக்க முன்வந்தால்…? தொகை இறுதி செய்யப்படவில்லை என்றால், அவர்கள் உதவியே செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் இந்தியப் பிரதமரும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியரான யூசுப் அலி என்னிடம் கூறிய தகவல் அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன். நான் சொன்னது தவறென்றால், அமீரக அதிபரோ, இந்தியப் பிரதமரோ மறுத்திருக்க வேண்டும். இருவரும் ஏதும் சொல்லவில்லை. தொகையை இறுதிசெய்த பிறகு  அமீரகம் அறிவிக்கும். மத்திய அரசு அதை ஏற்க முன்வரும் என்று நம்புகிறேன்.

அணைகளில் நீரைப் பராமரித்தது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே? அணைகளைச் சரியாகப் பராமரிக்காததால்தான் வெள்ளப்பெருக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியிருக்கிறாரே?

இக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சில நாட்களில் இந்த அளவுக்குக் கனமழை பெய்யும் என்று மத்திய வானிலைத் துறை தகவல் தரவில்லை. அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.. போதுமான அளவுக்கு எச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகே உபரி நீர் அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டது. அணைகளில் திறந்த தண்ணீர் மட்டும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தவில்லை. அச்சன்கோவில், மணிமலா, சாலியார் ஆறுகளுக்குக் குறுக்கே அணைகள் கிடையாது. அச்சன்கோவில் ஆறு பந்தளத்தையும், மணிமலா ஆறு திருவல்லாவையும், சாலியார் ஆறு நிலம்பூரையும் வெள்ளத்தில் ஆழ்த்தின. அணைகளைத் திறந்ததால் மட்டுமே வெள்ளப்பெருக்கு என்று எந்த ஆதாரத்தில் கூறுகிறார்கள்?

சமாளிப்பதற்கு அரிதான இந்தச் சூழலில் உங்களுடைய அரசு செயல்பட்ட விதம் குறித்து உங்களுடைய கணிப்பு என்ன?

பெருமழை, வெள்ளம் நேரிட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மற்றவர்களுக்கு  உணர்த்தும் வகையில் செயல்பட்டிருக்கிறோம். கேரள மக்கள் தங்களுடைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அரசுடன் தோள்கொடுத்து நின்றதால் இது சாத்தியமாயிற்று. அரசு நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டது. மீனவர்கள் முதல் மாணவர்கள் வரை மீட்பு, உதவிப் பணிகளில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். மத்திய அரசின் பேரிடர் நிவாரண உதவிக் குழுக்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை முழுதாக உதவிக்கு வந்ததால் உயிரிழப்பும் சேதங்களும் குறைய உதவின.

மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 2019 பொதுத் தேர்தலைச் சந்திக்க உருவாகும் எதிர்க்கட்சி அணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இணையுமா?

கேரளத்தைப் பொறுத்தவரை மீட்பு, உதவி, மறுவாழ்வு ஆகியவற்றில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். மற்ற விஷயங்களுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம்!

-ஸ்டான்லி ஜானி

தமிழில்: சாரி, ‘தி இந்து' ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

46 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்