முல்லைப் பெரியாறு அணை: கேரள வாதத்தில் நியாயம் இருக்கிறதா?

By மு.இராமனாதன்

சமீபத்தில், கேரளத்தில் கடும் மழைப்பொழிவு இருந்த சமயத்தில், ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் பெரியாறு அணையின் உபரிநீர் கேரளத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதால்தான் தங்கள் மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மோசமானது என்று உச்ச நீதிமன்றத்தில் கேரளம் முறையிட்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு அதிர்ச்சி தந்தது. 1895 முதல் தண்ணீரைத் தேக்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை. அதுவரை தெளிவாகவே இருந்த இந்தத் தண்ணீரில் 1979-ல் அரசியல் கலந்தது; இன்றுவரை கலங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், கேரளம் முன்வைக்கும் குற்றச்சாட்டின் பின்னணியை அலச வேண்டியது அவசியம்.

கேரளத்தின் குற்றச்சாட்டைப் பரிசீலிப்பதற்கு முன்னால் முல்லைப் பெரியாறு அணையின் பிரத்யேக வடிவமைப்பையும் அதன் வரலாற்றையும் அறிந்துகொள்வது பயன் தரும். பொதுவாக, அணைக்கட்டுகள் ஆற்றின் போக்கில் அதன் குறுக்காகக் கட்டப்படும். அணைக்கட்டின் பின்புறத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதி இருக்கும். முன்புறத்தில் பாசனக் கால்வாய்கள் இருக்கும். கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் அணைக்கட்டின் ஒரு புறமும் உபரிநீரைக் கடத்திவிடுவதற்கான கலிங்குகள் ஒரு புறமும் இருக்கும். இந்த விதிகளுக்கெல்லாம் விலக்காக விளங்குகிறது பெரியாறு அணை.

162 அடி உயர அணை இது. 152 அடி வரை இதில் நீரைத் தேக்கலாம். அணைக்கு அருகே உபரி நீரைக் கேரளத்துக்கு வெளியேற்றும் கலிங்குகள் அமைந்திருக்கின்றன. இதன் அடிமட்டம் 136 அடி. அணையிலிருந்து நீர்ப்பிடிப்புப் பகுதியின் வழியாக 14 கி.மீ. பயணித்தால் வருவது தேக்கடி. இங்குதான் தமிழகப் பாசனக் கால்வாய்க்கு நீரைக் கொண்டுசெல்வதற்கான சுரங்கம் இருக்கிறது. இதன் அடிமட்டம் 104 அடி. அதாவது, 104 அடி வரையிலான நீர் எப்போதும் தேங்கியிருக்கும்.

இதுவே தேக்கடியை வனவிலங்குகளின் சரணாலயமாக ஆக்கியிருக்கிறது. 104 அடிக்கு மேல் 152 அடி வரையிலான நீரைத் தேக்கித் தமிழகம் பயன்படுத்தலாம். மிகுதி நீர் கலிங்குகளின் வழியாகக் கேரளத்துக்குச் சென்றுவிடும். அதாவது, மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்க வேண்டிய பெரியாறு மறிக்கப்பட்டு, அது வடதிசையில் உள்ள மதுரை முகவை மாவட்டங்களின் வறண்ட மண்ணை நனைக்கிறது. இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம்.

அணையின் முழுக் கொள்ளளவின்போது நீர்ப் பிடிப்புப் பகுதியின் பரப்பு 8,000 ஏக்கராக இருக்கும். இது முழுவதும் கேரளத்தில் இருக்கிறது. 1886-ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்த நிலப்பரப்பை சென்னை ராஜதானிக்கு 999 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தத்தை தமிழக, கேரள அரசுகள் 1970-ல் புதுப்பித்துக்கொண்டன. எல்லாம் நன்றாகவே நடந்தன, 1979 வரை. அப்போதுதான் பெரியாறு அணையின் உறுதிப்பாடு குறித்துக் கேரளத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

பெரியாறு அணை கருங்கல் சுவர்களுக்கிடையே சுண்ணாம்புக் காரையும் சுருக்கியும் கொண்டு கெட்டிக்கப்பட்டது. சிமெண்ட் புழக்கத்தில் வராத காலம் அது. அதனால் பலம் குறைந்தது என்பது பொருளல்ல. பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அடர்த்திக்கேற்ப வடிவமைக்கப்பட்டது. மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன் கட்டப்பட்டது. நன்றாகப் பராமரிக்கப்பட்டும் வருகிறது. சுண்ணாம்புக் காரை கொண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல கோயில்களும் கோட்டைகளும் இன்றும் மெருகுடன் விளங்குகின்றன. அணையை ஆய்வுசெய்த மைய நீர் ஆணையத்தின் வல்லுநர்கள் அணை பலமானதுதான் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

எனினும், அணையின் பாதுகாப்பை மேம்படுத்த நான்கு விதமான பணிகளை மேற்கொள்ள தமிழகம் முன்வந்தது. பணிகள் நிறைவுறும் வரை உச்ச நீர்மட்டமான 152 அடியை 136 அடியாகக் குறைத்துக்கொள்ளவும் சம்மதித்தது. பணிகள் முடிவடைந்த பிறகும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் சம்மதிக்கவில்லை. இரண்டு அரசுகளாலும் சமரசத்தை எட்ட முடியவில்லை. 2014-ல் உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அருகே உள்ள சிற்றணை ஒன்றை மேம்படுத்தியபின் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டது. கடந்த ஆகஸ்ட் 15 அன்று நீர்மட்டம் 142 அடியை எட்டியது. உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

இந்தச் சூழலில், இப்போது உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டிருக்கிறது. பெரியாறு அணையிலிருந்து திடீரெனத் தண்ணீரைத் திறந்துவிட்டதால் கீழேயுள்ள இடுக்கி அணையிலிருந்து அதிக நீரை வெளியேற்ற வேண்டி வந்தது என்பது கேரளத்தின் வாதம். இதற்குத் தமிழக அரசு பதில் அளித்திருக்கிறது. ஆகஸ்ட் 10 முதல் 21 வரை இடுக்கி அணை வெளியேற்றிய நீர் 39.10 டிஎம்சி ஆகஸ்ட் 14 முதல் 19 வரை இடமலையாறு அணை வெளியேற்றிய நீர் 7.74 டிஎம்சி ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3.27 டிஎம்சி பெரியாறு அணையின் உபரிநீர் கேரள அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரைவிடக் குறைவு என்று தமிழகம் வாதிட்டிருக்கிறது.

கேரள அரசின் முறையீடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அனைத்து அணைக்கட்டுகளிலும் உச்ச மட்டம் வரை நீரைத் தேக்குவது வழமையாகி யிருக்கிறது. இதுதான் கேரளத்தின் எல்லா அணை களிலும் நடந்தது. கடந்த ஜூலை மாதம் கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இனி நீரைத் தேக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான், கர்நாடக அரசு மதகுகளைத் திறந்தது. மேட்டூரிலும் அதுவேதான் நடந்தது. 2015 டிசம்பரில் சென்னையை வெள்ளம் மூழ்கடித்தபோதுதான் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பெரியாறிலும் இதுவேதான் நடந்தது. மேலதிகமாக, பெரியாறில் போராடிப்பெற்ற 142 அடிக்கு நீரைத் தேக்காவிட்டால் விமர்சனங்களைச் சந்திக்க நேரும் என்று தமிழகப் பொறியாளர்கள் அஞ்சியிருக்கக்கூடும். உச்ச மட்டம் வரை நீரைத் தேக்குவது நீர் மேலாண்மைக்கு எதிரானது; அபாயகரமானது. பருவ காலங்களுக்கேற்பப் படிப்படியாக நீரை வெளியேற்றுவதற்கான விதிமுறைகள் எல்லா அணைகளுக்கும் வகுக்கப்பட வேண்டும். அவை அரசியல் தலையீடின்றி அமல்படுத்தப்படவும் வேண்டும்.

கேரளம் சந்தித்திருப்பது பேரிடர். தமிழகத்தில் நிதி மிகுந்தவர் பொற்குவையும் நிதி குறைந்தவர் நல்லெண்ணத்தையும் வழங்கிவருகின்றனர். இவ்வேளையில், பெரியாறு அணைத் தர்க்கத்தைக் கேரளம் உயர்த்தியிருக்கக் கூடாது. மாறாக, கருத்து மாறுபாட்டின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு இந்தத் தருணத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பெரியாறு அணை அதன் பொறியியல் சிறப்புக்காக மட்டுமல்ல, இரண்டு மாநிலங்களின் இணக்கத்துக்குச் சான்றாகவும் வரலாற்றில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதன் நீர்ப்பிடிப்பெங்கும் தெளிவான தண்ணீர் துலங்கும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்