தலைவர் 11 தகவல்கள்: சு.திருநாவுக்கரசர்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூரில் மு.சுப்பராமன், காளியம்மாள் தம்பதியின் மூன்று பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தவர் சு.திருநாவுக்கரசர் (13.7.1949). திருநாவுக்கரசரின் பெரியப்பா முத்துவேல், பெரிய மாமனார் அடம்பூர் ராமநாதன் இருவரும் 1957, 1962, 1967 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டவர்கள். அப்பா சுப்பராமன் தீயத்தூர் ஊராட்சித் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தவர். அதிமுகவில் திருநாவுக்கரசர் இருந்தபோதே, ‘காங்கிரஸின் மாப்பிள்ளை’ என்றே அவரை அழைத்தார் மூப்பனார்.

மாணவர் தலைவர்

உள்ளூர் திண்ணைப் பள்ளி, பாதிரக்குடி ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, ஓரியூர் அருளானந்தர் பள்ளி என்று பள்ளிப் படிப்பைக் கடந்தவர், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, அதிராமபட்டினம் காதர் முகைதீன் கல்லூரி, சட்டக் கல்லூரியில் உயர் கல்வியை முடித்தார். கல்லூரிக் காலத்தில் திமுக மாணவரணியில் இருந்தவர், எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுகவில் இணைந்தார்.

ஏழு தேர்தல் வெற்றியாளர்

1977 தேர்தலில் அறந்தாங்கி வேட்பாளராக திருநாவுக்கரசரைக் களமிறக்கிய எம்ஜிஆர், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்த ஏனைய 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துவிட்டு அறந்தாங்கிக்கு வராமலேயே போய்விட்டார். ஆனால், மாவட்டத்தில் மற்ற நான்கு தொகுதிகளிலும் தோல்வியடைந்த அதிமுக, அறந்தாங்கியில் மட்டும் வென்றது. 1977, 1980, 1984, 1987, 1991, 1996 என்று ஆறு முறை தொடர்ந்து அறந்தாங்கியில் வென்றார் திருநாவுக்கரசர். ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக உறுப்பினர் என்ற இவரது சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

1999-ல் அறந்தாங்கியையும் உள்ளடக்கிய புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நின்று வென்றார். அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும்கூட அவர் நிறுத்தியவர்களே அறந்தாங்கியில் வென்றார்கள்.

எல்லோர்க்கும் நல்லவர்

கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு உறவாடுபவர். 1978-ல் திருநாவுக்கரசர் திருமணத்தை நடத்தி வைத்தவர் எம்ஜிஆர். முக்கிய வாழ்த்துரையாளர்கள் கருணாநிதியும் மூப்பனாரும். மனைவி பெயர் ஜெயந்தி, பின்னர் மனைவியின் தங்கை கற்பகத்தையும் மணந்து கொண்டார். அன்பு, ராமச்சந்திரன், சத்யா, அம்ருதா, சாய் விஷ்ணு என்று 5 பிள்ளைகள். அன்பு வழக்கறிஞர். ராமச்சந்திரன் சமீபத்தில் புதுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கியவர். சாய் விஷ்ணு ‘கபாலி’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘காலா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

இளைய நிலா

திருநாவுக்கரசரை 28 வயதிலேயே துணை சபாநாயகராக்கினார் எம்ஜிஆர். அடுத்து, அமைச்சராக்கினார். திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டு மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளரானபோது, அதிமுகவிலும் இளைஞரணியைத் தொடங்கினார் எம்ஜிஆர். அப்போது அவரால் இளைஞரணியின் செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். ஸ்டாலினை ‘இளைய சூரியன்’ என்று அழைத்ததுபோல, அதிமுகவினர் இவரை ‘இளைய நிலா’ என்றார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மத்திய அமைச்சர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர். இவர் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு கனிம வள நிறுவனம் (டாமின்) தொடங்கப்பட்டது. பிற்பாடு பாஜகவில் சேர்ந்தார். இணை அமைச்சர் ஆனார். தந்தை பெரியாருக்குத் தபால் தலை வெளியிட்டவர் திருநாவுக்கரசர்.

அறந்தாங்கி எனும் அடையாளம்

அறந்தாங்கி என்றாலே திருநாவுக்கரசர் என்று சொல்லும்படி ஒரு கால் நூற்றாண்டு அங்கு கோலோச்சினார். முக்கியமான காரணம், தொகுதியில் ஒவ்வொரு குடும்பத்துடனும் தனித்த உறவை அவர் கொண்டிருந்தது. தொகுதியிலிருந்து யார் சென்னைக்கு வந்தாலும் அவரைப் பார்த்து உதவிபெறலாம் என்ற சூழலும் தொடர்ந்திருந்தது. வேலை தேடி வருபவர்கள் வந்து தங்கும் இடமாகயெல்லாம் இவருடைய வீடு இருந்த காலம் உண்டு.

ஜெயலலிதா உறவும், பகையும்

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுகவை ஜெயலலிதா கைப்பற்ற உறுதுணையாக இருந்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவர் கட்சிப் பொருளாளர். திருநாவுக்கரசருக்கு இருந்த தனித்த அடையாளம், சொந்த செல்வாக்கே அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்படப் போதுமானதாக இருந்தது.

ரஜினியுடன் நட்பு

ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டுவதற்காகக் கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தபோது, அதே இடத்தில் கட்டிடம் கட்ட இன்னொரு தொழிலதிபரும் விண்ணப்பித்திருந்தார். அந்தப் பிரச்சினையை ரஜினி, எம்ஜிஆரிடம் முறையிட, அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர் அதைத் தீர்த்துவைத்தார். அன்று முதல் ரஜினியும் திருநாவுக்கரசரும் நண்பர்களாகிவிட்டார்கள். இரவில் இவர்கள் ஒன்றாக ஊர் சுற்றுவதை அறிந்து, எம்ஜிஆர் போன் போட்டுக் கண்டித்ததும் உண்டு. “என்னுடைய முதல் அரசியல் நண்பர் திருநாவுக்கரசர். அவரிடம் தனிப்பட்ட முறையில் எத்தனையோ விஷயங்களைப் பரிமாறியிருக்கிறேன். எதையும் அவர் மற்றவர்களிடம் சொன்னதில்லை” என்று நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி.

தனிக்கட்சித் தலைவர்

ஜெயலலிதாவுக்கு எதிரான நால்வர் அணியில் ஒருவராக இருந்த திருநாவுக்கரசர், 1990 அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். 1991 தேர்தலில் அறந்தாங்கி, சாத்தூர் இரு தொகுதிகளில் வாகை சூடியது திருநாவுக்கரசர் கட்சி. 1996-ல் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டார். அப்போது எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியவர், அதன் பிறகும் இருமுறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் தேர்வானார். 2004-ல் அந்தக் கட்சியைப் பாஜகவுடன் இணைத்துவிட்டார்.

மத்திய மந்திரியான கதை

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கட்சியை வளர்க்கப் பலரையும் வளைத்த பாஜக, தமிழ்நாட்டில் இவரை ஈர்த்துக்கொண்டது. எஸ்.திருநாவுக்கரசு, சு.திருநாவுக்கரசர் ஆனது அப்போதுதான். எம்ஜிஆர் அதிமுகவின் ஒற்றை எம்பியாக இருந்த அவரை கட்சியிலும், அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டது. 2004 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவானபோது திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று பாஜகவை நிர்ப்பந்தித்தார் ஜெயலலிதா. இதற்காக மத்திய பிரதேசத்திலிருந்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது பாஜக. கட்சியில் தேசியச் செயலாளர் பதவியிலும் இருந்தார்.

காங்கிரஸ் தலைவர்

2009-ல் பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது திருநாவுக்கரசரைத் தேசியச் செயலாளர்களில் ஒருவராக்கியது காங்கிரஸ். 2016-ல் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவரானார். கட்சியை அமைப்புரீதியாகக் கீழே பலப்படுத்திவருவதும், முதல் முறையாகத் தலித்துகள் 10 மாவட்டங்களில் தலைவர் பதவியில் அமர்ந்திருப்பதும் திருநாவுக்கரசர் காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம்.

தொகுப்பு: கே.கே.மகேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்