பருவமழை பொய்த்தாலும் மகசூலில் சாதனை

By என்.சுவாமிநாதன்

ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை உற்பத்திசெய்ய வேளாண்மைத் துறையின் கணக்கீட்டுப்படி 20,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் 1,800 லிட்டர் தண்ணீரிலேயே இதைச் சாத்தியமாக்கிவருகிறார், முன்னோடி விவசாயி அந்தோணிசாமி. நெல்லை மாவட்டம், புளியங்குடியில் இருக்கும் அந்தோணிசாமியின் தோட்டத்தை ஒரு சுற்று சுற்றினாலே அவர் செய்திருக்கும் தண்ணீர்ப் புரட்சி தெரிகிறது. தமிழகம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலிலும் தன் தோட்டத்தைக் குளுகுளுவென வைத்திருக்கிறார்.

கரும்பு, எலுமிச்சை தவிர, தனது வீட்டுத் தேவைக்காக மட்டுமே 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை நடவுசெய்திருக்கிறார் அந்தோணிசாமி. நான் சென்றிருந்த நேரத்தில் இவரது கரும்புத் தோட்டத்தில் அறுவடைப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அங்கேயே நாட்டுச்சர்க்கரை தயாரிப்புப் பணிகளும் நடந்துகொண்டிருந்தன. ‘எப்படி அண்ணாச்சி வறட்சியைச் சமாளிச்சீங்க?’ என்றதும் உரக்கச் சிரிக்கிறார். ‘‘நீங்கள்லாம் இன்னிக்குத் தண்ணியில்லன்னு நினைக்குறீங்க. நான் எதிர்காலத்தைத் திட்டமிட்டு முன்னாடியே சில வேலைகளைச் செஞ்சுட்டேன்’’ என்று சொல்லிக்கொண்டே தோட்டத்துக்கு அழைத்துப்போனார்.

இயற்கை நுட்பங்கள்

‘‘பொதுவாகவே, தண்ணீர்த் தட்டுப்பாடான காலங்களில் தோட்டத்தில் வறட்சி வரும். அதை எதிர்கொள்ள மண்ணை வளப்படுத்திட்டாலே போதும். அதைச் செய்தாலே, எவ்வளவு தண்ணீர்ப் பஞ்சத்திலும் நாம வெள்ளாமையில் ஜெயிச்சுடலாம். நான் இயற்கை விவசாயத்துக்கு வந்து 35 வருசம் ஆச்சு. வாழையைப் போலவே கரும்பும், பக்கக் கன்னுகளை விடும். பொதுவாகவே, கரும்பு சாகுபடி செய்ற விவசாயிங்க பக்கக் கன்னிலிருந்து வரும் இரண்டு, மூணு கட்டை (சாகுபடி) முடிஞ்சதும் புதிய விதைகன்னு வாங்கி வைப்பாங்க. நான் 27 வருசமா அதே பக்கக் கன்னுலதான் சாகுபடி செய்றேன். கரும்பு சாகுபடியில் இந்த இயற்கை நுட்பத்தைப் பின்பற்றுகிறேன். இதனாலதான், தண்ணீர் செலவைக் குறைச்சேன்.

ஒரு ஏக்கர் கரும்பில 3,200 குத்து இருக்கும். ஒவ்வொரு குத்திலும் 10 முதல் 15 கரும்புகள் வரை எனக்கு முளைச்சு வருது. கரும்பு மொத்தம் 11 மாசப் பயிர். முதல்ல கரும்புக் குத்துகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில், தழைச் சத்துக்காகத் தக்கப்பூண்டை ஏக்கருக்கு 25கிலோ வீதம் போட்ருவேன். அது 45 நாளில் நல்ல தளதளன்னு வளர்ந்துடும். ஆனா, கரும்புக் குத்து அப்படியே இருக்கும். தக்கப்பூண்டு பெருசா வளர்ந்துட்டதால சூரியஒளி கரும்புக்குக் கிடைக்காம வளர்ச்சியே இல்லாம நிக்கும்.

புளியங்குடியில் கொடைக்கானல்

தக்கப்பூண்டு வளர்ந்து நிக்குற அந்தக் கரும்புத் தோட்டத்துக்கு உள்ளே போனீங்கன்னா, வெளியில் இருக்குற வெப்பநிலையைவிடக் குறைஞ்சது 10 டிகிரி செல்சியஸ் குறைவா இருக்கும். இப்போ உங்களுக்கு இந்த புளியங்குடியில் கொடைக்கானலைக் காட்டட்டா?’’ எனக் கேட்டுவிட்டு, 45 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் கரும்புத் தோட்டத்துக்குள் அழைத்துப் போனார். அவர் சொன்னதைப் போலவே சூரியன் சுடும் அந்த மதியத்திலும் குளிர்ச்சி முகத்தில் அடித்தது. அப்படியே குனிந்து, ஒரு கை மண்ணை அள்ளிக் காட்டுகிறார். அதில் ஈரப்பதம் இருக்கிறது.

தோளில் கிடக்கும் பச்சைத் துண்டைச் சரிசெய்துகொண்டே என்னிடம் மீண்டும் பேசத் தொடங்கினார் அந்தோணிசாமி, “கரும்புல குருத்துப்புழு தாக்கும். இந்த தக்கப்பூண்டை போட்டுருக்கதால குருத்துப்புழுவும் வராது. கரும்பை வெட்டுனதும், மத்த விவசாயிங்க தோகையைத் தோட்டத்துலயே போட்டு எரிச்சுடுவாங்க. இதனால, மண்ணுக்கு மேல இருக்குற நுண்ணுயிரிகளும் செத்துப்போகும். நான் இந்தத் தோகையையும் உரமாக்கிடுவேன். தோட்டத்தில் கரும்பு வளர்ந்துட்டு இருக்கும்போது, சூரிய ஒளியைக் கிரகிச்சு, பச்சையமாகக் கரும்புக்குக் கொடுக்க ஆறேழு தோகைகளே போதும். நான் கூடுதலா இருக்குற தோகைகளை 120, 160, 210-வது நாட்களில் எடுத்து, கரும்பின் தூர்ல போட்டு, அதன் மேல் ஒரு இஞ்ச் அளவுக்கு மண்ணைப் போட்டு மூடுவேன். இதுக்கு மூடாக்குன்னு பேரு. இதெல்லாம் சேர்ந்து மண்வளத்தைக் கூட்டி, நீர்த் தேவையையே குறைச்சுடும். எந்தக் கோடையிலும் தோட்டத்தில் 3 இஞ்ச்சுக்குக் கீழே ஈரப்பதம் இருக்கும். ஒரு கரும்பும் சராசரியா இரண்டு கிலோ வரை இருக்குது” என்றவர், ‘‘தோட்டத்தை நீங்களே சுத்திப்பாருங்கள்’’ என்று கைகளை விரித்துப் பாதை காட்டுகிறார்.

நத்தைகள் ஊர்ந்துசெல்லும் கரும்புத் தோட்டம்

அந்தோணிசாமியின் தோட்டத்துக் கரும்பு தூருக்குள் நத்தைகளைப் பார்க்க முடிகிறது. நத்தைகள் ஈரப்பதமான இடத்தில்தான் வாழ்சூழலை அமைத்துக்கொள்ளும். அதை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வந்த அந்தோணிசாமி, “நத்தையோட எச்சம் கரும்புக்குப் போகும்போது, கரும்பில் ஆன்டிஆக்ஸிடன்ட் கூடும். கரும்பில் சுக்ரோஸோட தேசியக் குறியீடு 60%தான். ஆனால், என் கரும்பில் 90% இருக்கு. என் பகுதியில் மழை பெய்யாட்டாலும் காத்துலருந்து நைட்ரஜனைக் கிரகிக்கும் நுண்ணுயிரிகள் இங்கு இருக்குது. மண்பானையில் வெச்ச தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகுதோ அதே நுட்பம்தான் என்னோட தோட்டத்துலயும்!” என்கிறார்.

புளியங்குடியின் மலையடிவாரத்தையொட்டி அந்தோணிசாமிக்கு இன்னொரு தோட்டமும் இருக்கிறது. அங்கு மரப்பயிர் சாகுபடி செய்கிறார். மலையிலிருந்து விழும் மழைநீர், வடிந்து ஓடியது. அரசின் அனுமதிபெற்று தன் சொந்தப் பணத்தில் அங்கே தடுப்பணை கட்டியிருக்கிறார். இதனால், அந்த சுற்றுவட்டார விவசாயிகளும் பலன் அடைந்துள்ளனர். தனது எலுமிச்சைத் தோட்டத்திலும் மூடாக்கு, இயற்கைக் கழிவு என நுட்பங்களைச் செய்து, ஆண்டு முழுவதும் மகசூல் எடுக்கும் அந்தோணிசாமி, வறட்சியில் தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்க தன் நீண்ட நெடிய முயற்சியில் வெற்றிகண்டவர். மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்