வலியை மிகைப்படுத்துபவளா பெண்?

By செய்திப்பிரிவு

பொ

துச் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தத் தலைப்பும் இன்று சினிமா, விளம்பரப் படம், சமூக ஊடகங்களின் உடனடிப் பேசுபொருளாகிவிடுகிறது. அப்படிக் கடந்த ஒரு வருட மாக நம்மைச் சுற்றிவரும் தலைப்பு ‘மாதவிடாய்’.

தன்னுடைய பெண் ஊழியர்களுக்கு மாதவிடாயின் முதல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க மும்பையைச் சேர்ந்த ‘கல்சர் மிஷின்’ நிறுவனம் தீர்மானித்தது. அதை உணர்த்துவிதமாக ‘ஃபர்ஸ்ட் டே ஆஃப் பீரியட்’ என்ற குறும்படத்தை ஆவணப்பட பாணியில் எடுத்து ‘யூடியூ’பில் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் வீச்சு பல தளங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே சில தனியார் நிறுவனங் கள் தாங்களும் இதே கொள்கையைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்தன.

ஆண் பார்வையின் ஆதிக்கம்

இந்நிலையில், கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘பேட் மேன்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது பாலிவுட். மாதவிடாய்க் காலங்களில் சுகாதாரமற்ற வழிமுறைகளைக் கையாள்வதை மாற்ற, மலிவான விலையில் ‘நாப்கின்’களைத் தயாரித்து விற்றதன் மூலம் பெரும் புகழ்பெற்றவர் அருணாச்சலம் முருகானந்தம். ‘டைம்’ இதழால் பாராட்டப்பட்ட இவருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பிரபலங்கள் தங்கள் கையில் ‘நாப்கின்’களுடன் புகைப்படங்கள் எடுத்துப் பதிவேற்றிவருகிறார்கள். ‘மாதவிடாய்’ குறித்து ஏகப்பட்ட விளம்பரப் படங்கள், குறும்படங்கள், கருத்துகள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

இவற்றில் பெரும்பாலான கருத்துகளும் கருத்தாக்கங்களும் ஆழமான புரிதலோ உண்மையான அக்கறையோ இல்லாமலேயே முன்வைக்கப்படுவதுதான் ஆயாசம் தருகிறது. காரணம், அவை ஆணின் பார்வையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பதுதான். மேலும், அவை பிரச்சினைக்கு மேலோட்டமான தீர்வைத் தரும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. குறைந்த விலையில், சுகாதாரமான முறையில் பரவலாக எல்லோருக்கும் சென்றடையும் வகையில் ‘நாப்கின்’களைத் தயாரிக்க வேண்டும் என்பது மட்டும் மாதவிடாய் குறித்த சிக்கல் இல்லை.

நோய் தீர்க்கும் அருமருந்து

‘தீட்டு’ என்று பெயர்சூட்டி, பெண்ணின் மீது தீண்டாமையைத் திணிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட மாதவிடாய் ரத்தம் தூய்மையானது என நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி ரத்தமும், எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோயைத் தீர்க்கும் அருமருந்து. அவற்றைப் போலவே மாதவிடாய் ரத்தத்தில் உள்ள ‘ஸ்டெம்’ செல்லும் உயிர் காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், என்ன சொன்னாலும் மாதவிடாயின்போது பெண்களே தங்கள் உடலை வேண்டாவெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்துக்குள்தான் இன்றும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

மாதவிடாய் என்பது பெண்ணைக் கோயிலுக்குள் மட்டுமல்ல, வீட்டின் சமையலறைக்குள்ளேகூட நுழைய மறுப்பு தெரிவிக்கும் தீண்டாமைக் கொடுமை. தன்னுடைய வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரமாகக் கிடந்து உடலளவிலும் மனதளவிலும் தன்னை அருவருப்பானவளாக நினைக்கும் நிலைக்குப் பெண் ஒவ்வொரு மாதமும் தள்ளப்படுகிறாள். கொல்லைப்புறத்தில் இரவு முழுவதும் பனியில் நடுநடுங்கித் தனிமையில் கிடந்து விஷப்பூச்சிகளால் தீண்டப்பட்டு, வக்கிர மனம் கொண்டவர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி மாண்டுபோன பெண்களின் கதை, சமூகம் அறிந்திராத கொடூரங்கள் நிறைந்தது.

மாதவிடாய் நாட்களில் தங்கள் வலியைப் பொருட் படுத்தாமல், அசெளகரியத்தை வெளிக்காட்டிக்கொள்வது பலவீனமாகப் பார்க்கப்படுமோ என்கிற அச்சத்தில் வீட்டு வேலை, அலுவலகப் பணி என அத்தனையையும் பம்பரமாய்ச் சுற்றித் திரிந்து செய்துமுடித்த பெண்கள் அநேகர். கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் பதின்பருவச் சிறுமிகள் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வதற்கும், பள்ளியிலிருந்து இடைநின்றுபோவதற்கும் அசெளகரியமான இந்தச் சமூகச் சூழல் முக்கியக் காரணமாக உள்ளது. மாதவிடாய் குறித்துத் திணிக்கப்படும் களங்கமான கற்பிதங்களால் தாழ்வுமனப்பான்மையும் உடல் ஆரோக்கியமின்மையும் பெண்களை வளரிளம் பருவத்திலேயே வாட்டிவதைக்கிறது. அது அவர்களு டைய கல்வி உரிமையையும் பறித்துவிடுகிறது.

மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் தேசிய வழிகாட்டுதல்களை மத்தியக் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தயாரித்து 2015 இறுதியில் வெளியிட்டது. மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை இளம் பெண்களுக்கு அளிக்கவும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கவும் அதில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் வழியாக, பெண் குழந்தைகளின் கண்ணியத்தைக் காக்கும் நடவடிக்கைகளும் அவர்களின் பள்ளிப் படிப்பைத் தொடரவைப்பதற்கான உத்வேகமும் அளிக்கப்பட வேண்டும் என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஐநா சிறுவர் நிதியத்தின்படி மாதவிடாய் நாட்களில் இன்றும் 79% இந்தியப் பெண்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள், 60% பேர் பள்ளிக்குச் செல்வதில்லை, 44% அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மறு வாசிப்பின் அவசியம்

ஒரு பெண் எத்தகைய வலியை மாதந்தோறும் எதிர்கொள்கிறாள் என்கிற புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முதலில் உள்ளது. தன்னுடைய வலியை மிகைப்படுத்துபவள் பெண் என்கிற கெட்டித்தட்டிப் போன பார்வை இங்கு காலங்காலமாக வேரூன்றியுள்ளது. ஒரு ஆண் தனக்கு வலிக்கிறது எனச் சொல்வதைக் கேட்கும்விதத்தில் பெண்ணின் வலியை யாரும் பொருட்படுத்துவதில்லை. சொல்லப் போனால், ஆங்கில வார்த்தையான, ‘hysterical’ என்பதே பெண்ணின் கருப்பையோடு தொடர்புடைய சொல்லாகும். ஸ்திரமின்மை, நம்பகத்தன்மை அற்ற, நிலையற்ற குறியீடுகளுடன்தான் பெண்ணின் கருப்பை அடையாளப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தியச் சூழலில் மட்டுமல்லாமல் உலகளவிலும் இதுகுறித்த மறு வாசிப்புக்கான அவசியம் தற்போது தான் உணரப்படத் தொடங்கியிருக்கிறது. ‘நானோ’ தொழில்நுட்பம் மூலமாகப் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் வித்தையைக் கண்டறிந்துவிட்ட மருத்துவ உலகம், தற்போதுதான் மாதவிடாயின் வலி எத்தகையது என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மாதவிடாய் குறித்த ஆய்வை லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் குழந்தைப்பேறு சுகாதாரத் துறை சமீபத் தில் நடத்தியது. ‘மாரடைப்புக்கு இணையானது மாதவிடாய் வலி’ என்கிறது அந்த ஆய்வின் முடிவு. அந்த வலியை இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும். மேலோட்டமான அக்கறையாக அல்லாமல், உள்ளார்ந்த அக்கறையுடன் இதை அணுக வேண்டும். அப்போதுதான் இது தொடர்பான மறு வாசிப்பில் உண்மையான புரிதல் சாத்தியப்படும்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

9 mins ago

ஆன்மிகம்

19 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்