படித்து முடித்தவுடன் வேலை தரும் ஃபேஷன் டெக்னாலஜி

By செய்திப்பிரிவு

“ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். நாம் உடுத்துகின்ற ஆடையும், செய்யும் அலங்காரமும் ஒருபுறம் தோற்றப்பொலிவை மெருகூட்டும். இன்னொரு புறம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.  ஆடை அலங்காரம் என்பது அடிப்படையில் ஓர் அழகுக்கலை. அதனால்தான் என்னவோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ஆடை அலங்காரத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இன்றைய நவநாகரீக உலகில், விதவிதமான ஆடைகளை ஸ்டைலாக உடுத்தி மகிழ வேண்டும் என்ற ஆசை கிட்டதட்ட எல்லோரிடமும் இருக்கிறது. ஆடை அலங்காரம், பேஷன் டிசைனிங் விஷயத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.  அவர்கள் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள்.  இதன் காரணமாக, தற்போது ஃபேஷன் டிசைனிங், ஃபேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் சேரும் ஆர்வம் இளையதலைமுறையினரிடம்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஃபேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்து நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஃபேஷன் டிசைன் படிப்புகள் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றன. ஒரு காலத்தில் பணக்கார மாணவர்கள் படிக்கும் படிப்பு என்றிருந்த நிலையில் இருந்து தற்போது அனைத்து தரப்பினருமே சேர்ந்து படிக்கக்கூடிய படிப்பாக ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் மாறிவிட்டன. படைப்பாற்றல், கற்பனைத்திறன்-இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை. இவ்விரண்டு திறன்களும் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். நிறைய சாதிக்கலாம். 

 சாதாரணமாக, ஃபேஷன் டிசைன் படிப்பில் பிளஸ் 2-வில் எந்த குரூப் படித்த மாணவர்களும் சேரலாம். ஆனால், ஃபேஷன் டெக்னாலஜி படிப்பில், பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல்  படித்தவர்கள் மட்டுமே சேர முடியும். ஃபேஷன் டிசைன் என்றவுடன் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ‘நிப்ட்’ என அழைக்கப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology) தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நிப்ட் இயங்கி வருகிறது. சென்னை வளாகம் தரமணியில்  அமைந்துள்ளது. இங்கு இளங்கலையில் டிசைன் தொடர்பான 4 ஆண்டு பட்டப் படிப்பும் (பி.டிசைன்), ஃபேஷன் டெக்னாலஜி  சம்பந்தமான பட்டப் படிப்பும் (பி.எப்.டெக்) வழங்கப்படுகிறது.

டிசைன் படிப்பில் ஃபேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்ஸெசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், ஃபேஷன் கம்யூனிகேஷன் ஆகிய 6 பாடப்பிரிவுகள் உள்ளன.  ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 இடங்கள். இளங்கலை படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமா பெற்றவர்கள் சேரலாம். வயது வரம்பு 23 ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு

5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு.  மேற்படிப்பை பொறுத்தவரையில், எம்.டிசைன், எம்.எப்.எம். (ஃபேஷன் மேனேஜ்மென்ட்), எம்எப்டெக் (ஃபேஷன் டெக்னாலஜி) படிப்புகள் உள்ளன. முதல் இரு படிப்புகளில் எந்த பட்டதாரிகளும் சேரலாம்.  ஆனால், எம்எப்டெக் படிப்புக்கு மட்டும் பிஎப்டெக் அல்லது பிஇ,  பிடெக் பட்டம் அவசியம். இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

நிப்ட் கல்வி நிறுவனத்தைப் போன்று  தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஃபேஷன் தொடர்பான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர பல தனியார் கல்வி நிறுவனங்களில் ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு  கல்லூரியான அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்,   மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி, ஈரோடு பண்ணாரி  அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் பிரபலம். இந்த இடங்கள் பொறியியல் படிப்பு பொதுக் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. 

ஃபேஷன் தொடர்பான படிப்புகள் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்பு நிறைந்தவை. தற்போது, சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஆடை அலங்காரத்துக்கு மிக அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  எனவே, ஃபேஷன் டிசைனர்களுக்கு இத்துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தற்போது சர்வதேச அளவில் ஆடை நிறுவனங்கள், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகள் வளர்ந்து வருகின்றன.  இதுபோன்ற காரணங்களால், ஃபேஷன் தொடர்பான படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விரிந்து பரந்து கிடக்கின்றன. அவர்கள் ஆடை அலங்கார நிபுணர் ஆகலாம். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோருக்கு ஃபேஷன் டிசைன் அருமையான படிப்பு.

 பொதுவாக, இப்படிப்பை முடிப்பவர்கள் ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியில் சேரலாம். மேலும், ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில் ஃபேஷன் டிசைன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனியார் துறையில் மட்டுமின்றி அரசு பணி வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளில் கைத்தறி துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். நிறைய மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கின்றன. எம்பிஏ ஃபேஷன் மேனேஜ்மென்ட், எம்.டிசைன் (மாஸ்டர் ஆப் டிசைன்), எம்எப்டெக் (ஃபேஷன் டெக்னாலஜி) படிக்கலாம்.

ஃபேஷன் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

கலை, அறிவியல், தொழில்நுட்பம், மனித உணர்வுகள் ஆகியவை இணைந்த கலவைதான் ஃபேஷன் டிசைனிங். நமது உடலின் 2-வது தோல் என்றுகூட இதை அழைக்கலாம். உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் ஃபேஷன் டிசைனிங் துறையானது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனை, பிஎஸ்சி மற்றும் பிடெக் படிப்பாக படிக்கலாம். சாதாரணமாக பிஎஸ்சி படிப்புக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரமும், பி.டெக். படிப்பு எனில் ரூ.2 லட்சம் வரையிலும் செலவாகும். அதிக செலவு நிறைந்த படிப்பு போல் தோன்றினாலும் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஃபேஷன் துறையிலும், ஜவுளித் துறையிலும் பணிவாய்ப்புகள் மிகுதி. பெரிய நிறுவனங்களில் அசிஸ்டென்ட் பையர், ஃபேஷன் அசிஸ்டென்ட்,  ஃபேஷன் கன்சல்டன்ட், புராஜெக்ட் லீடர், டெக்னிக்கல் லீட், குவாலிட்டி ஆடிட்டர், பிரான்ட் மேனேஜர், கன்டன்ட் டிசைனர், இன்போகிராஃபிக் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், ஜூனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட், மெட்டீரியல் மேனேஜர், அப்பரல் டிசைனர்,  புரடக்‌ஷன் பிளானர்,  பேட்டர்ன் இன்ஜினியர், 3-டி ஸிமுலேட்டர், பிளான்ட் லேஅவுட் டிசைனர்-இப்படி பலதரப்பட்ட பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இத்துறையில் தொடக்க நிலையில் ரூ.40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். ஐந்தாறு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நல்ல படைப்பாற்றலும், கற்பனைவளமும், தொழில்திறனும் இருந்தால் சம்பளம் இன்னும் அதிகமாக பெறலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக சொந்தமாக தொழில்தொடங்கி மிகப்பெரிய தொழில்முனைவோர் ஆகலாம்.

பேராசிரியர் முனைவர் ஆர்.ஜி.பன்னீர்செல்வம்,

பேராசிரியை முனைவர் வி.பானு ரேகா,

 ஃபேஷன் டெக்னாலஜி துறை,

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்