வளம் தரும் வேளாண்மை படிப்புகள்

By செய்திப்பிரிவு

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு இணையாக வேளாண்மை தொடர்பானபடிப்புகளில் சேரும் ஆர்வம் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. "நீட்" தேர்வுக்கு வந்த பின்பு இந்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்களின் அடுத்த தேர்வாக இருப்பது வேளாண் படிப்புதான். அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயம்தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது. என்னதான் அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் என்று முன்னேறினாலும் உணவுக்கான தேவை என்றுமே குறையப் போவதில்லை. மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைந்துவிடாது. உணவு உற்பத்தியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே, வேளாண்மை தொடர்பான படிப்புகள் மீதான முக்கியத்துவம் தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பானது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரியிலும், தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்ட கலைக் கல்லூரியிலும், பிஎஸ்சி வனவியல் படிப்பு கோவை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் வழங்கப்படுகிறது. கோவை தோட்டக்கலைத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.டெக். தோட்டக்கலை, திருச்சி வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.டெக் வேளாண் பொறியியல், கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.டெக். உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல், பி.டெக் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

எனவே, மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விவசாயம், தோட்டக்கலை, வனவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் படிப்புகளில் சேரலாம். இன்றைய தினம் விவசாயம் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. வயலில் நாற்று நடுவது, களைபறிப்பது, அறுவடை என விவசாய பணிகளில் இயந்திரங்களும், தொழில்நுட்ப கருவிகளும் வந்துவிட்டன. இதன் காரணமாக, சமீப காலமாக பிடெக் வேளாண் பொறியியல், அதிகம் விரும்பப்படும் படிப்பாக மாறியுள்ளது. விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் பயன் படுத்தும் பணி வேளாண் பொறியாளர் களுடையது. வேளாண் துறைக்குத் தேவையான கருவிகள், எந்திரங்கள் போன்றவற்றை வடிவமைத் தல், உருவாக்குதல் போன்ற பணிகள் வேளாண் பொறியாளர்களுக்கானது. அதேபோல், வேளாண் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வரும் நிலையில், பிடெக் வேளாண் தகவல் தொழில்நுட்ப படிப்பில் சேரவும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் பட்டப் படிப்புகளாக மட்டுமின்றி 2 ஆண்டு கால டிப்ளமா படிப்பாகவும் வழங்கப்படுகின்றன. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை டிப்ளமா படிப்புகளும், சென்னை மாதவரம் தோட்டக்கலை பயிற்சி மையம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தோட்டக்கலை டிப்ளமா படிப்பும் உள்ளன.

விவசாயம் சம்பந்தப்பட்ட பட்டப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு துறைகளில் வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பனர், பண்ணை மேலாளர், வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், வேளாண் விளைபொருள் வர்த்தகம், பயிர் விதை நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பிஎஸ்சி தோட்டக்கலை பட்டதாரிகள் வங்கி, அரசுத் துறைகளில் விரிவாக்க அலுவலர்களாக பணியாற்றலாம். தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி, விற்பனை, நிலம் அழகூட்டுதல் மற்றும் காய்கறி, பழம் பதப்படுத்துதல் போன்ற துறைகளிலும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பிஎஸ்சி வனவியல் பட்டதாரிகளுக்கு வனம் சார்ந்த தொழிற்சாலைகளில் மேலாளர் பணி வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி வனத்துறை உயர் அதிகாரியாகலாம்.

பிடெக் வேளாண்மை பொறியியல் பட்டதாரிகளுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் புராசசிங் நிறுவனங்கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட வேளாண் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும். சமீப காலமாக விவசாயம், தோட்டக்கலை பட்டதாரி களை பொதுத்துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அதிக எண்ணிக் கையில் பணியமர்த்தி வருகின்றன.

உயர்கல்வி வாய்ப்புகள் என்று பார்த்தால், விவசாயம், தோட்டக் கலை, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் பொருளாதாரம், வேளாண் விரிவாக்கம், நுண்ணுயிரியல், உழவியல், மரபியல், தாவர உற்பத்தி, பூச்சியியல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ டெக்னாலஜி, மண்ணியல் மற்றும் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழலியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி படிப்பில் சேரலாம். மேலும், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல், மண்ணியல் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல் போன்ற பாடங்களில் எம்.டெக். படிக்கலாம். அதோடு வேளாண் வணிக மேலாண்மையில் எம்பிஏ படிப்பிலும் சேரலாம். முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிலும் ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளராகவும் ஆகலாம்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, பிஎஸ்சி பட்டுப்புழு வளர்ப்பு, பிஎஸ்சி வனவியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிஇ (வேளாண்மை பொறியியல்), பிடெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம், பிடெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ் என பலதரப்பட்ட பட்டப் படிப்புகளில் சேரலாம். பிஎஸ்சி படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களையும் பிடெக் படிப்பு எனில் இயற்பியல், வேதியியல் கணிதம் ஆகிய பாடங்களையும் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். குறிப்பிட்ட பாடங்களில் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்று நுழைவுத்தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அரசு வேளாண் கல்லூரிகள் அமைந்துள்ளன. இவை தவிர 18 தனியார் வேளாண் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, பிஎஸ்சி பட்டுவளர்ப்பு, பிஎஸ்சி வனவியல், பிஎஸ்சி உணவியல் மற்றும் ஊட்டச்சத்துவியல் ஆகிய 5 விதமான பிஎஸ்சி படிப்புகளும், பி.டெக். தோட்டக்கலை, பி.டெக்., வேளாண் பொறியியல், பிடெக் உணவு பதப்படுத்துதல், பி.டெக்., சுற்றுச்சூழல் பொறியியல், பி.டெக். பயோ டெக்னாலஜி, பி.டெக். பயோ இன்பர்மேட்டிக்ஸ், பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 7 வகையான பி.டெக். படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

வேளாண்மை படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகம்

வேளாண் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் படிப்பில் 27 வகையான பாடத்திட்டங்களை படிக்கின்றனர். இதனால் போட்டித் தேர்வுகளை அவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வேளாண் பட்டதாரிகள் எளிதாக தேர்ச்சி பெறுகின்றனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வெ.இறையன்பு, பி.அமுதா, ஐபிஎஸ் அதிகாரியான ரயில்வே போலீஸ் டிஜிபி சி.சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வேளாண் பட்டதாரிகள்தான்.

பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை பட்டதாரிகள் வேளாண் அதிகாரி, தோட்டக்கலை அதிகாரி, மத்திய அரசின் தென்னை, காப்பி, ரப்பர், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களில் பணியாற்ற முடியும். அனைத்து வங்கிகளிலும் வேளாண்மை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், தனியார் விதை நிறுவனங்கள், கரும்பு ஆலைகள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், உரத்தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.  காளாண் பண்ணை, மண்புழு உரம் உற்பத்தி போன்ற சுயதொழில் வாய்ப்புகளும் இருக்கின்றன.  வேளாண்மை படிப்புகளுக்கு 80 சதவீதம் வங்கிக்கடன் கிடைக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உண்டு. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணச் சலுகை  அளிக்கப்படுகிறது.

- டாக்டர் எம்.கல்யாணசுந்தரம்

டீன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்